முட்டைகள் உடையும்படி தன் புகைப்படக்கருவிகளை
அடுக்குபவர்களுக்கு
கால அவகாசத்துடன் காத்திருக்கும்
நாகத்தின் கண்கள் எனது

கடைசி நிமிடத்தில் தன் பழங்கதைகளை
நினைவுகூர்ந்து அழும் கண்களைத்
துடைக்கும் தூக்குமேடைக் காவலாளியின் கரங்கள் எனது

பழைய வரலாறொன்றில்
பெருவெற்றியை
மன்னனுக்கு தெரிவிக்கும்பொருட்டு
பாலையை ஓடிக்கிடந்த
அடிமையின் கால்கள் எனது

மேலும்
சொல்வேன்

எல்லா பைத்தியத்தனங்களையும்
எனதாக அருந்தும்
பைத்தியக்காரத்தனமும் எனதென்று.

o

அவள் கேட்கிறாள்

நிலமற்ற காலத்திலிருந்து
கூச்சல்களின் மொழிவழியாக
தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பும்
மனம்பிறழ்ந்தவனின் குரலை

திருப்பத்தில் கைவிட்ட
கைவிரல்களைத் தேடி
கழுத்து வலிக்க
அண்ணாந்து பார்த்துக்கொண்டு
அங்கையே நின்றழும்
குழந்தையின் அழுகையை

அறுத்த கத்தியில்
அறுபட்ட தலைய ஏந்தி யைதூக்கிப்பிடித்த
பூசாரியின் ஆங்கார ஓலத்தை

அவள் கேட்கிறாள்
மெல்லத்தலைசாய்த்து

ஆற்றங்கரையோரத்தில்
அமர்ந்து எழுதப்பட்ட பழங்கவிதையை.

o

மிட்டாய்காரர்கள்
கைவிடப்பட்ட கிராமத்தின்
அனல் தணியாத மூலைகளுக்கு
தேவதைகளைக்
கொம்பில் சுற்றி எடுத்து வருகிறார்கள்

தேவதைகளில்
கால்விரல்களிலிருந்து
இனிப்பான கைக்கடிகாரங்களை
விழாமல் காதிலாடும்
அணிகளை
சிறு குடைகளை உருவாக்குகிறார்கள்

விரிவதற்குக் காத்திருக்கும்
சிறுமலர்களைப்போன்ற கண்களை
உடைய குழந்தைகளுக்கு
அளிக்கிறார்கள்

ஒரு தேவகணத்தில்
கூட்டத்தில்
இருந்து ஒரு சிறுவன்
“யட்சியின் கண்கள்
அழகாக இருக்கிறது” என்கிறான்

மேலும்
முதல் மழைத்துளி புனிதத்துடன்
கண்களை வைத்துக்கொண்டு கேட்கிறான்

“இந்த யட்சியின் தலையை அறுத்து
ஒரு மலர் செய்து தரமுடியுமா
மிட்டாய்க்காரரே?”