தனித்திருக்கும் அறையிலிருந்து
தன் பறவைகளை
வெளியேற்றும்
பைசாசத்திற்கு
கிணற்றில் ஆழத்திலிருந்து
மலர் பறித்து அனுப்புகிறாள்

வெயிலின் தூளியில்
சரியான தருணத்தில் அளிப்பதற்காக
சிறிய பரிசுகள் மிதக்கவிடுகிறாள்

பெரு நதியின் கரைகளில் சிறுசெடிகளை
நட்டு வளர்த்துவருகிறாள்

கனவுப்பறவைகளின் வண்ணங்களைப்பற்றி
பிரமித்து சொல்லிக்கொண்டிருக்கும்
குழந்தைகளிடம்

பைசாசங்கள் ஒரு போதும்
உண்மைகளைத் திறப்பதில்லை.

o

இருள் குகைகளுக்குள்
தன்னை மூடிக்கொள்ளும்
பைசாசங்கள்

சுவர்களிலிருந்து
இறங்கிவரும் முகமிலி சிற்பங்களை
அஞ்சுகின்றன
என்றவள் சொன்னாள்

ஒளிய ஒளிய தேடிவரும்
நதிகளிலிருந்து வனங்கள்
உருவாகியிருக்கின்றன

என்றவள் சொன்னாள்

பைசாசங்கள் அஞ்சுவது
முகமிலிகளை அல்ல
அவர்கள் கொண்டு வரும்
நதிகளையும் அல்ல

பைசாசங்கள் அஞ்சுவது
முகமிலிகளின்
மறைக்கப்பட்ட முகங்களையே
என்பது உங்களுக்குத் தெரியுமா?

o

மெல்ல மெல்ல
ஒப்பனைகளைக் கலைத்தபடி
தினசரி வாழ்விற்குத்
திரும்பிக்கொண்டிருக்கும்

ஒரு கூத்துக்கலைஞனிடம்

எங்கொ கிடந்ததென
முகமூடியை
எடுத்துக்கொண்டு வந்து
நீட்டும்

சிறுகுழந்தைகளிடமிருந்துதான்

பிசாசுகள் உருவாகின்றன
என்பதை

அப்பெண்கள்

ஒருபோதும் அறிவதில்லை.
அல்லது
எப்போதும் அறிந்திருக்கிறார்கள்.