எல்லாம் நிறையும் காலத்தில் மெளனம் தன் ஆழங்களிலிருந்து வெளியேறும் மலைகளை உடைத்துத் தகர்கிறது. பேராழங்களிலிருந்து வெளியேறும் பெரு நதி எல்லா நிலங்களையும் தன்னுள் நிறைக்கிறது, ஆடல்களில் நிலையழிந்த மனங்கள் தன் எரிகளை உருவாக்கி பொறிகளை நிரப்புகிறது. கொலைவாட்கள் ஓய்வு கொள்ளும் மெளனத்திலிருந்து குருதி வன்மத்தின் சொற்கள் வெடித்தெழும் பெருங்காலத்திற்கு நடைபயிலும் மனங்கள் தன் கனவுகளை மொத்தமாக அழித்து மீண்டெழுகிறது. பெயரற்றவர்களின் முதற்சொற்கள் ஆழத்தின் அழிமுகங்களை கலங்கடிக்கிறது. பேரெரிகளின் முதற்பண் அலகிலா ஆடலின் மொழியை முதற்பறவையின் சிறகசைப்பிலிருந்து எழுப்பி கடற்கன்னிகளைத் துயிலழியச்செய்கிறது. நிலையழிந்தவர்களின் கூக்குரல்கள் ஒற்றை இரைச்சலாக மாறும் பெருங்காலம் தன் வரலாற்றை தனக்குள்ளாகவே தின்று நீள்கிறது. எல்லா நதிகளுடனும் சென்று சேரும் விதைகள் தன் காடுகளை ஆழியாழத்தின் மதுக்கரைகளில் ஒழித்துச் செல்கிறது. பிதற்றல்களின் பெருங்கவிதைகள் சொல்லமுடியாத பெயர்களுக்குள் எரிந்து தணிகின்றன.

நதிக்கரைகளின் இறுதிச் சொற்கள் நதிக்கரைகளிலேயே அழிகின்றன. வீழ்மரங்களின் முதல் கிளைகளை தன் பறவைகளை அசைத்து எழுப்பி வெளியேற்றுகின்றன. மழைச்சொற்கள் கூடற்ற் பறவைகளை இழுத்தணைத்து தன் சிறகுகளுக்குள் ஒளித்து வைக்கிறது. உடைந்த கிளைகளிலிருந்து வெளியேறும் பழுத்த இலைகள் ஒருபோதும் தன் வேர்களை மீள நினைப்பதில்லை. சொற்களில் வழி காடுகளை உருவாக்கியவர்கள் பழங்களை ஒருபோதும் உண்டுணர்வதில்லை. அடையாளமற்றவர்களின் வாழ்வின் கணங்கள் பிறரடையாளங்களை உருவாக்குவதற்காக இருக்கிறது. அழியாத காடுகளை நனையாத மழைகளுக்கிடையே சொல்லற்ற மெளனத்தினால் உருவாக்கும் பாணர்கள் தன் பாடல்களை காற்றில் கலக்கிறார்கள். கருவிகளையுடைக்கும் இசைஞர்களும் சலித்தமரும் ஆடற்சடையர்களும் கிழித்தமரும் மொழிக்கனவான்களும் நாவறுத்து சொல்லற்றமரும் பாணர்களை அஞ்சுகிறார்கள். பீடங்களில் கண்டமறுப்பவர்கள் தன் குருதி பாதங்களை அடைவதில் கவனமாக இருக்கிறார்கள். மெளனம் எழுகிறது கூக்குரலென தேவி.

மனமயக்கி காடுகளில் தனித்திருக்கும் பெருயட்சிகள் யுகயுகமாய் காத்திருக்கும் ஒற்றைச்சொல்லில் தன் சடை விரித்து அமர்ந்திருக்கிறார்கள். தனித்தலையும் பாணர்களுக்கு சொற்கள் வெறியூட்டுகின்றன. தனித்தலையும் இசைஞர்களுக்கு சொற்கள் அலையாகின்றன. தனித்தலையும் சடையர்களுக்கு சொல்லில் ஆடல் அமர்ந்திருக்கிறது. கடந்து போகிறவர்கள் வனத்தை வென்று போகிறவர்களாயிருக்கிறார்கள். சொல்லில் ஆடலில் இசையில் வீழ்பவர்கள் தன் காட்டினை முதல்முறை காண்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதில்லை. மனமயக்கி காடுகள் தொடர்ந்து நகர்ந்தபடி இருக்கின்றன. போதங்களில் உழல்பவர்கள் தன் காட்டினை தொடர்ந்து போகின்றனர். இசைஞர்களின் பாடல்கள் பாணர்களில் சொற்களிலிறங்கி தன் ஆடலை சடையர்களில் நிகழ்த்துகின்றன யுகம் யுகமாக யட்சிகள் அமர்ந்திருக்கிறார் தொடர்ந்து அதே பீடத்தில் காலங்காலமாக அதே சொல்லில் அசையாமல்.

நதி எரியும் கனவுகள் மரம் உடைக்கா பறவைகளை மிச்சம் வைக்கிறது. ஆடல் ஆழிகளின் அழிமுகங்கள் பெருமீன்களைக் கரையொதுக்கி குருதியால் நிறைகிறது. உடலெரியும் சித்தர்கள் தன் புன்னகைகளை மாறாமல் வைத்திருந்து கிளைப்பறவைகளைத் திடுக்கிடச் செய்கிறார்கள். மெளனத்திலிருந்து வெளியேறும் சித்தர்களின் முதற்சொல் அத்தனை எரிகளை உருவாக்குவதாக இருக்கிறது. ஆயுதங்களை உருவாக்கியவர்கள் அத்தனை கனவுகளையும் தன் குருதியினால் துடைத்து துலங்கிடச் செய்கிறார்கள். அகல்விளக்குகளின் ஒளி எல்லா நிலங்களின் இருள்களிலிருந்தும் தனித்திருக்கிறது. முதற்பொறி வெளியேறும் பேரெரிகளை தன் விளக்குகளுக்கு கொண்டு செல்லா சிறு உயிர்களுக்கு வாஞ்சையிருக்கிறது. காடழிக்கும் எரி குறித்த சுய அறிதல் தன் விளக்குகளை வெளியேற்றி தன் பாதைகளை கண்டடைகிறது. பேராடல்களை சிறு அசைவென அஞ்சுபவர்க்ள் ஒருபோதும் காட்டினை செடியென்றன்றி வேறெங்கும் அறிவதில்லை தேவி.

பெருங்காடர்கள் தன் தந்துகிகள் உடையும் வரை ஊதும் காற்று காலங்களின் முடிவிலி கனவுகளில் தன் பெயர்களை யுகம் யுகமாக எழுதிப்போகிறது. தன் கடைசி நரம்புகளை அறுத்து மூங்கில் கட்டி இசை அடையும் இசைஞர்கள் ஒற்றைச் சொல்லை முடிவற்று இசைக்கிறார்கள். தன் அணி அதிர உடலதிர பாகங்கள் உதிர தன்னை அணுக்கி உதிர்க்கும் ஆடல் வல்லான் சித்தம் கலங்கி ஒவ்வொரு பாகமாய் திசைக்கொன்றாய் எறிகிறான். காலம் அவனை காடென்கிறது நதியென்கிறது கடலென்கிறது பெருமழையென்கிறது. எரியென்கிறது உடையும் பெரும்மரம் என்கிறது. உடையும் கிளையென்கிறது. உடைவதற்கு முன் குஞ்சுகளைச் சாகவிட்டு பறக்கும் சிறுபறவையென்கிறது. உடைந்து வீழும் சிறுமுட்டை என்கிறது. காலமற்று சிறகற்று முட்டை உடைந்து வெளியேறும் குறை உயிர் பறவையென்கிறது.

தாய்மடி உடைந்து வெளியேறும் சிறு உயிர்களின் குட்டியென்கிறது. முட்டைகளிலிருந்து தன்னைத் தேடி நாகம் என்கிறது. நாகம் தன் கனவுகளில் மரங்களை கிளைகளை பறவைகளை குஞ்சுகளைக் காண்கிறது நாகம் ஆடல்வல்லானை தானெனக்காண்கிறது. சுழல் எழுகிறது. சுழல் அமைகின்றது. சுழல் ஒரு நாளில் தன்னை சுழலென்றகிறது. ஆடல்வல்லான் தன் ஆடலைத் தொடங்குகிறான். இசைஞரக்ள் ஒலியிலிருந்து இசையைப் பிறித்தறிகிறார்கள். பாணர்கள் இசையிலிருந்து தன் சொற்களைக் கண்டடைகிறார்கள். சொற்களில் மீது அன்றும் இன்றும் என்றுமாக ஒரு பெண்ணுருவம் அமர்ந்திருக்கிறது. அவள் சொல்லெழுப்பாமல் அமர்ந்திருக்கிறாள் அவளிடமிருந்து சொற்கள் எழுகின்றன. அவை அவளாக இருக்கின்றன. அவள் சொல்லாக மட்டுமே இருக்கிறாள்.

பாணர்கள் சொற்கள் இசைஞர்களில் விழுந்து ஆடல்வல்லானில் எழுகின்றன. ஆடல்வல்லானின் அசைவுகள் சித்தனின் சடையேறி சொல்லாக அமைகின்றன. எல்லாம் கானலின் பெருங்கனவில் உடைந்துவீழும் மரங்களாக பீடத்தின் கீழாக வீழ்கின்றன. ஆடல்வல்லான் அசைவற்று அமர்கிறான். இசைஞன் தன் கருவிகளை நிலமறைந்து பாதம் பணிந்து எரிக்கிறான். சொல்வல்லான் பாணன் சொல்லற்று கரம்கூப்பி கண்ணீர் மல்கி இறப்பினை இறைஞ்சி அமர்கிறான். அமர்ந்தவர்களின் மீதாக பீடம் இருக்கிறது. பீடம் மஞ்சள் மலர்களாய் இருக்கிறது. மலர்கள் ஒளியாய் இருக்கிறது. பீடத்தின் மீது யட்சி புன்னகை மல்க கண்ணறைந்து அமர்ந்திருக்கிறாள். கண்விழித்து புன்னகை மலர்த்து யட்சி ஒரு நாள் ஒரு சொல் சொன்னாள்.இசைஞன் தன் இசைக்கருவிகளின் நரம்புகளை எடுத்து தன் கண்டங்களை அறுத்துக்கொண்டான். ஆடல்வல்லான் மலர்பாதங்களை சிரம் தொட்டு அக்கணமே மூச்சடக்கி உடலதிர பாதம் வீழ்ந்தான். பாணன் அச்சொல்லை மூச்சற்று உச்சரித்தவாறே இடைவாளெடுத்து தன் கண்டமறுத்துக்கொண்டான்.

அச்சொல் ஒலித்தது
பெருவனமெங்கும்
பெருநதியெங்கும்
பெருங்கடலெங்கும்
பேரெரியெங்கும்.

அச்சொல் நீ நலம்தானே ஆனந்தா என்றொலித்துக்கொண்டிருந்தது யுகம் யுகமாக.