யார் காலடியிலாவது
தயக்கமில்லாது முழுமையாய் அமர்ந்துக்கொள்ளவேண்டும்
போலிருக்கிறது

யார் மீதான அன்பினையாவது
முழுமையாக
விளக்கி அவர்களுக்கு புரியவைத்துவிடவேண்டும்

எந்த நாடகத்தையாவது
ஏற்கனவே அறிந்திருப்பதை
வெளிக்காட்டாமல்
அமர்ந்து பார்த்துவிடவேண்டும்

இடை நாட்களை
முற்றிலும் மறந்துவிட்டு
மீண்டும் முதலிலிருந்து
உன் மீதே காதல் கொள்ளவேண்டும்
போலிருக்கிறது

o

பழைய வீடுகளுக்குள்
தவறி நுழைந்துவிடும் சிறுபறவைகள்
ஓவியங்களில் மயங்கி சிறகடித்து நிற்கின்றன

கீறல் விழுந்த கண்ணாடிகளில்
தன் முகங்களை
புதிதாக ஒருமுறை
பார்த்துக்கொள்கின்றன

வரலாற்றுத்தூசுகள்
காற்றிலசையும் போது
கொஞ்சம் திடுக்கிட்டு
வெளியேறிப்பறக்க முயற்சிக்கின்றன

பெரிய வாசல்களைத் திறந்து
அனுமதிக்கும்
பழைய வீடுகள்

வெளியேறும் சிறு ஜன்னல்களை
இன்னும் சிறியதாக
ஆக்கிவிடுகின்றன என்பது
உங்களுக்குத் தெரியுமா?

o

தரையில் விடுவதன் மூலம்
மீன்களைக் காப்பாற்றிவிடலாம்
என
நிஜமாகவே நம்புகிறீர்களா?

வனப்பறவைகளை
உங்கள் வீட்டிற்கு
அழைத்து வரும்பாதையில்
அவை
தன் அழகை வைத்துவிட்டு வந்துவிடுகின்றன
என்று உங்களுக்குத் தெரியுமா?

போய்ப்பார்க்கும்
தொலைவிலிருக்கும் பெரிய மரங்கள்
தொடர்ந்து வளர்வதையும்

கொண்டு வந்து
அருகில் வைக்கப்பட்டிருக்கும்
சிறிய மரங்கள்
அசையாமல் இருப்பதையும்

இன்னுமா நீங்கள் உணரவில்லை?