மழை அழைக்கிறது மழை அழைக்கிறது
என்று அழுகிறவனை

ஆசுவாசப்படுத்தும் பொருட்டு

ஜன்னல்கள் சட்டங்களைக் கொண்டு
நிரப்பட்ட அறையில்
தங்க வைத்தோம்

அங்கிருந்தும்
இலை அசைகிறது இலை அசைகிறது
என புன்னகைப்பவனை

பல்லடுக்குக் கட்டிடத்தின்
ஆழங்களுக்கு அனுப்பி
வைத்தோம்

அமைதி அமைதி
என்று கூக்குரலிடுவனை

நம்மால் செய்யக்கூடியது

விலகி ஓடுவது மட்டும்தான் இல்லையா?

o

முதல் முறை
அறைக்கு வருபவர்கள்
இங்கு யாரும் இல்லையா
என திகைத்து கேட்கிறார்கள்

நான் இருக்கிறேன்
என்கிறான்

இரண்டாம் முறை
வரும்போது
உடன் யாரும் இல்லையா
என புன்னகைத்தபடி கேட்கிறார்கள்

நீங்கள் இருக்கிறீர்கள்
என்கிறான்

பிறகு ஒவ்வொரு முறையும்
வருகிறார்கள்

அவ்வப்போது போதம் முற்றி
அழுதபடி
கேட்பார்கள்
நானும் யாருமில்லாத
இங்கு வந்துவிடவா என்று.

o

அத்தனை பெரிய மாளிகைகளில்
அத்தனை
சிறிய அறைகளில்

ஆடிகளில் முகம் பார்த்தபடி
அமர்ந்திருப்பவர்கள்

அனைத்து அறைகளிலும்
இருக்கும்
அத்தனை பேருக்கும்
தன் புன்னகைகளை
பரிசளிக்கிறார்கள்

ஆனாலும்
அத்தனை
அறைகளும் காலியாகத்தான்
இருக்கின்றன என்பதை

அவ்வப்போது யாராவது
நினைவூட்டுகிறார்கள்.