என் மலைகளை
உங்களுக்காக தாழ வைத்திருக்கிறேன்
நீண்ட நதிகளில்
ஒரு கைப்பிடி மட்டுமே
என்னிடம் மிச்சமிருக்கிறது
கடைசி முத்தம் போதுமானதாய்
இருக்கும் என நம்புகிறேன்

இறுதியாக கண்மூடும்
போது அருகில்
நிற்பவரே

உங்களுக்கான பாதைகளை
நீங்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள்

o

இந்தச்சாலைகளில் எந்தக்காரணமும் இன்றி
விரைந்து செல்கிறவர்களை
ஒதுங்கி நின்று அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்

வேடிக்கை பார்ப்பவர்கள் எப்பொழும்
வேடிக்கைக்காட்டுபவர்களுக்கு
இடைஞ்சலாகவே அங்கே நிற்கிறார்கள்
என்றவன் சொன்னான்

இடைஞ்சலை உணரும் பயணத்திலிருப்பவர்கள்
எப்பொழுதாவது நின்று
எதுவும் பேசாமல் மீண்டும் தன் வாகனங்களைக்
கிளப்பிச் செல்கிறார்கள்

ஒருவேளை

ஏன் நிற்கிறாய் எனக் கேட்கும்
ஒருவன் வரும் காலத்தில்
புன்னகையை மட்டும் பரிசளித்து
போய்விடுவேன் என்றவன் சொன்னான்

மேலும்

எனக்கும் இதேதான் நிகழ்ந்தது என்றும்.

o

ஒரு தற்கொலைக் கடிதத்தின்
நடுப்பக்கம்
அன்று
என் மடியில் வந்து விழுந்தது.

துரோகங்களை மன்னித்துவிடுவதாக
அத்தனை
ஆதுரமாக
கோபங்களுக்கு மன்னிப்புக்கோருவதாக
அத்தனை
வாஞ்சையுடன்
நம்பிக்கையை இறைஞ்சுவதாக
அத்தனை
வேண்டுதலுடன்

நான் எழுதியதும் இல்லை
எனக்கு எழுதப்பட்டதும் இல்லாததான
அக்கடிதத்தை
மடியில் சுமந்தபடி
கடிதத்திற்கு வெளியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்

நான் கடிதம் எழுத விரும்பும்
இந்த இரவில்
நினைத்துக்கொள்கிறேன்

அக்கடிதம் முழுமையாக ஏன் என்னை வந்தடையவில்லை
என்பதைமட்டும்.