நீர் நிற்பதற்கு முன்பாக
முதல் ஆளாக
கைகளைச் சுத்தப்படுத்திக்கொண்டு

தனக்கொவ்வாத
பழக்கமுடையவர்கள் இறக்கும்
நாளுக்கு காத்திருக்கும்
இவர்களுக்கு நடுவில்

குவித்த கரங்களில் மழை நீரைபற்றி
செடிகளுக்குக் கொண்டுசேர்க்கும்
பைத்தியக்காரர்கள்
இன்னும் இருக்கிறார்கள்
என்பது
நிம்மதியாக இருக்கிறது

o

இலையுதிர்கால மரங்களில்
சாய்ந்தமர்ந்து
தனியே அழுது கொண்டும்
சிறுவன்

மற்றும்

வேனிற்காலத்து
வன நெருப்பில் நடுவில்
தவறி மாட்டிக்கொண்டு
ஆங்காரத்தினால் அலறும்
இளைஞன்

மற்றும்

கூதற்காலத்து மரத்தின்
நிழலில்
அசைபோட்டு படுத்திருக்கும்
முதியவன்

மூவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
ஒருவரை ஒருவர்
ஒரே காலத்தில்.

o

வரலாற்றின் ஒவ்வொரு
சுழலிலும்

பெரும்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்

ஒரு கவிஞன்
அழிந்துகொண்டேயிருக்கிறான்

மென்காற்றினால் ஒரே ஒரு முறை தொடப்பட்டு

தன் துருவில் தன்னையே
அழித்துக்கொண்டிருக்கும்
இரும்பு சட்டகத்தைப்போல

என்றவன் எழுதியிருந்தான்.