ஓவியனின் மேஜையில்
நிறைவேறாத
கோடுகள் அப்படியே
இருக்கின்றன

இசைக்கலைஞனின் எழுதப்படாத
குறிப்புகளை
யாரும் பார்த்ததில்லை

நேற்றைய
கடற்கரைச் சிறுவன்
பொத்தி வைத்திருக்கிறான்
ஒரு கிளிஞ்சலை

யாருக்கும் காட்டாமல்.
யாருக்காவது காட்டுவதற்கு

நேற்றிலேயே

o

பலவாறாக அவனை திருத்த
நினைக்கிறீர்கள்

கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி
தலையில் வலிக்கும்படி
கொட்டி
காதுகளை பலங்கொண்ட மட்டும் திருகி

இந்த மிட்டாய் உன்னுடன் எப்போதும்
வராது
இந்த பழக்கங்கள்
எப்போதும் மாறாது
என்று சாபமிடுகிறீர்கள்

தன் மிட்டாயை
திருடிக்கொண்டு ஓடும்
சிறுவன்
தொலைவில் நின்று
கத்திச் சொன்னான்

ஆண்டாண்டுகளாக
வெறுப்பை நீங்கள்
வைத்திருக்கும்போது
நான் ஏன் இந்த மிட்டாயை
வைத்திருக்க முடியாது?

o

ஆட்கள் வேலை செய்கிறார்கள்
பாதை மாறிச்செல்லுங்கள்

அவர் கோபமாய் இருக்கிறார்
பிறகு வந்து பாருங்கள்

அவள் உன்னை
பூரணமாய் வெறுக்கிறாள்
தொந்தரவு செய்யாதே

யாராவது
ஒரு முறை என்னிடம்
சொல்லுங்கள்

யாராவது உங்களிடம்
எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா

“எந்த பதிலீடும் இன்றி
மிகுந்த அன்புடன்
அவர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்”