பிதா கைவிரித்து
அழைக்கும்
அம்மலையுச்சியிலிருந்து
தாழப்பறக்கும் விமானங்களை
அவள்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறாள்

பிதாக்கள் கைவிட்ட
தேசத்தின்
நதிக்கரையில்
தாழப்பறக்கும் விமானங்களைக் கண்டு
அவன்
அஞ்சி ஓடுகிறான்

தேவகுமாரர்கள்
காலடியெங்கும் மறைந்திருக்கின்றன
இன்னும்
வெடிக்காத சில நூறு குண்டுகள்.

ஆதியில் காதல் இருந்தது.

o

காணாமல் போனவள்
திரும்பி வந்து கேட்கிறாள்
ஏன் தேடவில்லை என்று
தலை சாய்த்து
மெல்ல உதடசைத்து

தேடல்களில் சலித்தவன்
புன்னகைத்து அமர்ந்திருக்கிறான்
கைகளை இறுக மூடி
பழைய மலர் தெரியாதபடிக்கு

பைசாசங்கள் சடைவிரித்தாடும்
நிலமெங்கும்
ஒளிந்திருக்கிறது
கால் அழுத்தத்தில் வெடிக்கக் காத்திருக்கும்
மருந்து.

o
கைவிளக்கேந்திய தூண் சிற்பப்பெண்ணிற்கு
ஆதுரத்துடன் புருவ மத்தியில்
குங்குமம் இடுபவன்
யாரும் பார்க்காதபோது
முலைதடவிப்பார்க்கிறான்

கைகூப்பி
தனித்து நிற்கும் சிற்பக்குரங்கிடம்
தன் காதலன் பெயரெழுதிய
மாலை அணிவிக்கிறவள்
யாரும் பார்க்காதபோது
ஆங்காரத்துடன்
வெண்ணையை எறிகிறாள்

காலங்காலமாக இதையே
பார்த்திருக்கிறது
அப்பழங்கோயிலில் வீச்சத்தை
உருவாக்கும்
தலைகீழ் பாலூட்டி.