இத்தனை தொலைவு தாண்டி
அப்பெயரை
அல்லது
அப்பெயரைப்போல் ஒலிக்கும்
ஒரு சொல்லை
கொண்டு சேர்க்கவென்றே
எங்கிருந்தோ
ஒருவன்
வந்திருக்கிறான்

அப்பெயரை தன் கண்ணிலும்
வைத்திருப்பவன்
ஒரு முறை திரும்பிப்பார்க்கிறான்

தன் உடலை
தானே பார்க்கும்
பிரேதம் போல

o

பாழடைந்த கோவில்கள்
கைவிடப்பட்ட
ரயில் நிலையங்கள்
ஆள் நடமாற்றமற்ற
இடுகாட்டுச் சுவர்கள்

உளுத்துச் சரிந்த மரத்தண்டுகள்
பாளம் வெடித்த
வயல்வெளிகள்
நீர்வற்றி துர்நாற்றம் அடங்கிய
நேற்றைய கிணறுகள்

ஒரு கனவிற்கு காத்திருக்கிறேன்
எல்லா
நிஜத்திலிருந்தும் என்னை
எழுப்பிடவிடக்கூடிய
ஒரே ஒரு கனவு

o

எல்லாரும் அடைந்திருக்கிறார்கள்
அதே போன்றதொரு
மஞ்சள் மலரை
தேன்சிட்டு பறவையை
மழை இரவை

எல்லாரும் இழந்திருக்கிறார்கள்
அதே போன்றதொரு
எரி நட்சத்திரத்தை
எழுந்து நின்ற பெருமரத்தை
மிகச்சிறிய அணுக்கமான கூட்டை

யாரோ ஒருவன்
எல்லாருக்குமாய் பெருஞ்சுவற்றில் வரைகிறான்

எல்லாரும் அதே யாரோ ஒருவனைக்காய்
அச்சுவரருகில் காத்திருக்கிறார்கள்.