எனது மதுக்கிண்ணங்களை
என்னிடமிருந்து
விலக்கி வைக்க நினைக்கிறவர்களுக்கு
நன்றிகள்

நீங்கள்
அறியாத தற்கொலை நாட்களை
இன்று உங்களுக்குச் சொல்வேன்

வீழ்ந்துவிடாதபடி தாங்கிக்கொண்ட
ஒற்றை கால்
கோப்பைகளை
இன்று உங்களுக்கு காட்டுவேன்

ஆழத்து நினைவுகளை
நரம்புகளைச் சுண்டி சுண்டி
அழித்த திரவங்களை
இன்று உங்களுக்கு அருந்தக்கொடுப்பேன்

முன்னதாகச் சொல்லுங்கள்
பல்கூச்சமிருக்கிறதா
ஐஸ் துண்டங்கள் உங்கள் தொண்டைகளுக்கு ஒத்துக்கொள்ளுமா

முடிவில் நீங்கள்
கேள்விகளுக்கு பதில் சொல்லும்
நிலையில் இருக்க மாட்டீர்கள்
என நிச்சயமாக எனக்குத்தெரியும்.

o

இன்றொரு நாள் மட்டும்
உனக்காக
வருந்துவதாயில்லை

இடது உள்ளங்கையில்
முக்கோண ரேகைக்கு
நடுவே
கடைசியாய் முத்தமிட்ட
புள்ளியில் சிகெரெட்டின்
நெருப்புப் பகுதியை
அணைப்பது அத்தனை
பழகிவிட்டது

இன்றொரு நாள்மட்டும்
உன் புகைப்படங்களை
பார்ப்பதாயில்லை

அத்தனை நாடகங்களையும்
நிறுத்திவிட்டு
செயலற்று நிற்கும்
மேடைக்கோமாளியின் முன்

இரண்டு
வாய்ப்புகள் இருக்கின்றன

மேடையிலிருந்து இறங்குவது
மேடையிலிருந்து
குதிப்பது.

o

எனக்கும்
குழப்பமாகத்தான் இருக்கிறது

சிதைக்கிறவர்கள்
சிதைக்கப்படுகிறவர்கள்
சிதைத்துக்கொள்கிறவர்கள்
சிதையவிட்டு விலகிச் செல்கிறவர்கள்

எல்லாரும்
எப்படி
ஒரே மலரை
வெவ்வேறு காலத்தில்
பிடித்திருந்தார்கள்?