நம் பிதாக்கள்
பாதைகளை ஒழுங்கு செய்கிறார்கள்
சாத்தான்களிலிருந்து விலக்குகிறார்கள்
வழியற்ற உறுதிமொழிகளை அளிக்கிறார்கள்

நம் சுதன்கள்
உடல் நெருப்புகளை எழுப்புகிறார்கள்
கனவுகளை உருவாக்குகிறார்கள்
பிறழ்வுகளை சொஸ்தப்படுத்துகிறார்கள்

நம் சாத்தான்கள் எளிமையானவர்கள்
யாரையும் விலக்குவதில்லை
எந்த நம்பிக்கையும் அளிப்பதில்லை
பிதாக்களையும்
சுதன்களையும் அறிமுகப்படுத்துகிறார்கள்

இன்னும் ஆழமாக

o

உதறிச் செல்வதற்கு முன்னால்
அரளிப்பூக்கள் இங்கிருந்தே பறிக்கப்பட்டன
மரணத்திற்கு முன்பு
இங்குதான் இருந்தேன்

கைவிடுவதற்கு முன்பு
இறுகப்பற்றியிருந்தேன்

தாவரங்கள் விதையாதவற்கு
முன்னும்
தாவரமாகத்தான் இருந்தது

என் பிரிய சாத்தானே

o

என் இனிய பிதாவே
நான் ஒரு செடி வைத்திருக்கிறேன்
என்னிடம் மலர் இருக்கிறது
நதிகளை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்

என் பிரிய சுதனே
நம் பானங்கள் புளித்திருக்கின்றன
அளித்த இருக்கைகள் முட்களாயிருக்கிறது
அப்பங்கள் காலியாகிவிட்டன

என் மடி பிசாசே
உன்னை அணைத்துக்கொள்கிறேன்
இந்த ஆசுவாசத்தை முத்தமிடுகிறேன்
நம் கொலைகளை ஆராதிக்கிறேன்
கோப்பைகளை காலிசெய்கிறேன்

என் தற்கொலை இரவே
உன்னையன்றி யாருமின்றி இருக்கிறேன்.