இந்தப்பெரு நிலத்தில்

உடலை மண்ணுக்கு கொடுப்பவர்கள்
உப்புக்கடலை நாசிக்கு ஏற்றிக்கொள்கிறவர்கள்
எரி புகையில் இருப்பினை
அழிப்பவர்கள்
ஓடும் நதியில் மிதந்தபடி
இறக்க காத்திருப்பவர்கள்

எல்லாருக்குமான
தேர்வைப்போலவே

எதாவது ஒரு காட்டில்
எதாவது ஒரு மரத்தை

வேர்வரை அழித்து வீழச்செய்யக்கூடும்
ஒரு மலர்.

o

பேரங்காடியின் எல்லா கடைகளையும்
ஒவ்வொன்றாகக் கடந்து

தென்மூலை படிக்கட்டோரத்தில்
குளிர்ந்த கைப்பிடியில்
தலைசாய்த்தபடி

மீண்டும் ஒருமுறை
முகுந்தா முகுந்தா பாடலைக்
கேட்பதற்காக கடல்கடந்து வரும்
இந்த ஒருவனைப்போலவே

எங்கோ ஒரு கடல்மீது

நிழலுடன் பேசியபடி
கண்டங்களைக் கடக்கும் பறவை
வைத்திருக்கக்கூடும்

வரலாற்றுக்காலத்தின் முன் விதையொன்றை.

o

துயரங்களைப் புதைப்பதற்காக
தலையணை இருளை
பரிசளிக்கும்
மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்

இருத்தலினால் அல்ல
பார்த்தலினால் மட்டுமே
அவை இன்னும்
அங்கே இருக்கின்றன
என்றவர்கள் சொல்வதிலும்
உண்மையிருக்கலாம்

ஆனாலும்
அவர்களுக்குச் சொல்வேன்

என் பூனைகள்
ஒளித்துவைக்கும்
மீன்களையும்

அவை அடையாளமிட்டே
வைத்திருக்கின்றன.