உப்பு முத்தங்களை
பகிர்ந்து கொள்கிறவர்களின்
புடைவைகளுக்கு
கைக்குருதியின் வெம்மை கூடிவந்திருக்கிறது

வீழும்தலை எண்ணிக்கைகளை
வீட்டுச்சுவரில்
வரைந்து வைப்பவர்களுக்கு
அழியோவியங்கள் உரித்தாகுகின்றன

யாரோ ஒருத்தி
எதோ கணத்தில்
தெய்வ விரல் கொண்டு
வானத்தில் தன் ரேகைகளை வரைகிறாள்

பிறகு
வானம் யாருக்கும் உரிமையில்லாததாகப் போய்விடுகிறது.
o

சகனின் குழந்தைப்பருவ
புகைப்படத்தை
துப்பட்டாவில் சுருட்டி எடுத்துப்போகிறாள்

சகியின்
புகைப்படத்தை மேஜையில்
சந்தேகம் வராத குழுப்படமாக
வைத்திருப்பவன்
ரகசிய இரவுகளில் கண்ணீரில்
நனைத்துவிடுகிறான்

இருவரும் இணைந்த புகைப்படங்களை
எடுத்தவர்கள் தொடர்பு எல்லைகளிலிருந்து
சொல்ல வார்த்தையற்று விலகிப்போகிறார்கள்

அந்த
கல்லறை அங்கேயே
காலங்காலமாக உறைந்திருக்கிறது
புற்களை முளைக்கவிடாமல்.

o

கண்ணாடிக்குவளையில் போதை
நிரப்பி
நிலவின் பிம்பங்களை
பார்த்துக்கொண்டிருப்பவன்

ஒரு துளி விரல்தொட்டு
சுவைக்கிறான்

பிறகு
அதே நிலாவை முழுவதுமாய்
மூச்சுவிடாமல் கவிழ்த்துக்கொள்கிறான்

மீண்டும் குவளையை நிரப்பும்போது
போதாமைகளில் ஆடிக்கொண்டிருக்கிறது

அதே நிலா