பிறகு
எல்லாரும் கலைந்து போனார்கள்

மருத்துவப்பணியாளர்களை
அழைத்து
அந்தப்பெண்ணை
மெளனமாக
வண்டியிலேற்றி கொண்டு சென்றார்கள்

நான் பார்த்துக்கொண்டு
நின்றிருந்தேன்

அந்த யட்சி
தன் நுரைகளைத் துடைத்து விட்டு
பால் சுட வைத்து
தன் தம்பிக்கு புட்டியில் அடைத்து
நுரைகளைத் துடைத்து
புகட்டத் தொடங்கினாள்

நான் பார்த்துக்கொண்டு
நின்றிருந்தேன்

அந்தத் தம்பி அவ்வப்போது
பாட்டிலைத்தள்ளி
முலைகளை முட்ட எத்தனித்தான்

நான் பார்த்துக்கொண்டு
நின்றிருந்தேன்

அவள்
தன் மேலங்கியை
கழற்ற ஆரம்பித்தாள்.

நான் அங்கே இல்லை.

o

நைலான் கயிற்றுக்கு
உறுத்துமென
தாலியைக் கழட்டி வைக்கும்போது

செவ்வாடை அம்மையின் முன் கைவிரித்து
சிலர்
கண்ணீருடன் நிற்கும்போது

விஷமருந்துவதற்காக
குழந்தைகள் உறங்கும் வரை
சிலர்
காத்திருக்கும்போது

நீண்ட நாளுக்குப் பிறகான ஒருமுத்தத்திற்காக
அழுகிய பழவாசனையை உதடுகடித்து
ஏற்றுக்கொள்ளும்போது

பெருமழை பொழிந்துகொண்டிருக்கிறது
நதியின் மீது.

o

விடியலில்
அம்மை
வலது மூக்குத்தி கழற்றி அளித்து
‘உனக்குத்தான் நகையெல்லாம்
பொட்டச்சியா இருக்கா
இந்த வீட்ல’ என்றாள்

மதியத்தில்
யட்சி
இடது மூக்குத்தி காட்டி
‘நீ என்
வலப்புறம்’ என்றாள்

மாலையில்
கிழவி
‘உந்தாத்தன் சொன்ன
பாம்படத்த நீதான் போடணும் பாத்துக்க’
என்றாள்

இரவில்
எல்லாரும் இறந்துவிடுகிறார்கள்.

o