“ you know what , you ruined it. எனக்கு புடிச்ச விசயம் எல்லாத்தையும் வெறுக்கிற அளவு பண்ணிட்ட. புடிச்ச பாட்டுக்கள நீ அனுப்பிட்டன்ற ஒரே காரணத்துக்காக வெறுக்க ஆரம்பிச்சிட்டேன். Don’t Write about me anymore. Gud bye for ever. Dont ever think about message me again”

இந்தக்குறுஞ்செய்தி வந்தபோது நந்து வேளாங்கண்ணிக்கும் அதிராம்பட்டினத்துக்கும் இடையில் எதோ ஒரு கிலோமீட்டரில் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு இளநீர் குடித்துக்கொண்டிருந்தான். கை நடுங்குவது போலிருந்தது. இள நிக்கூடு தவறி விழுந்துவிடக்கூடும் நடுக்கம். கூட்டினை எறிந்துவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்தான். வண்டிக்காரர் இவனையே கூர்ந்து பார்ப்பது போலிருந்தது. பர்ஸிலிருந்து ரூபாயை எடுத்துக்கொடுத்தான். வண்டிக்காரர் இள நிகளுக்கு கீழே விரித்திருந்த சாக்கை உயர்த்தி மீதப்பணத்தை எடுத்து நீட்டினார். கைகள் சுண்டிவிட்ட நரம்பைப்போல தொடர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தன.

கடைக்காரருக்கு எதாவது தோன்றியிருக்கவேண்டும். “தம்பி வெளியூருங்களா.. பாத்தமாதிரியே இல்லியே” கருத்த தேகம். உழைத்தே இறுகிய உடல். நிறம் மங்கிய லுங்கி. கோடுபோட்ட சட்டை. பொட்டல்காட்டின் தார்ச்சாலை ஓரத்தில் தார்ப்பாய் பந்தலுக்கு கீழே இ ள நிகளை அடுக்கிவைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்தவர். பாதையின் பயணிகளின்றி யாரும் இறங்காத இந்த இடத்தில் எ ந்த நம்பிக்கையில் வியாபாரத்தில் இறங்கியிருக்கக்கூடும் என்றொரு குழப்பம் வந்தது. எப்பொழுதுவாது வருகிறவர்கள் அன்றி யாரிடமும் பேசமுடியாது என்பதால் வருகிறவர்கள் எல்லாரிடமும் பேச்சுக்குடுப்பவராக இருக்கக்கூடும். நந்துவுக்கும் யாரிடமாவது பேசவேண்டியிருந்தது. கை நடுக்கம். மேலும் நடுக்கம். குழப்பமாக இருந்தது.. என்ன கேட்டார்?

“என்னன்ணே”

“இல்ல முகம்புதுசாருக்கே வெளி யூரான்னு கேட்டேன்”

“ஆமாண்ணே.. பைக் ட்ரிப் போய்ட்டு இருக்கேன். சென்னைல இருந்து திருனெல்வேலி”

அதான. வேளாங்கண்ணிக்கும் அதிராம்பட்டினத்துக்கும் அலையுற பசங்க எல்லாரையும் தெரியும். அதான் கேட்டேன். குடிச்சிருக்கீங்களா

இல்லண்ணே பைக் ஓட்டும்போது குடிக்கிறதில்ல

ம். நல்ல பழக்கம்தான். முடிஞ்சா எப்பவுமே குடிக்காதீங்க தம்பி. போன மாசம் கூட ஒருத்தன் இதே ரோட்லதான் குடிச்சுட்டு டவுன்பஸ்ல போய் விழுந்து… எந்தூர் தம்பி.

திருனேலிதாண்ணே. இப்படியே அதிராம்பட்டினம் திருச்செந்தூர்வரைக்கும் போய் அங்கிருந்து அப்டியே உள்ள போய்ரலாம்னு..

ம்ம். இப்படி நடுங்கிகிட்டுன்னு போனா ஊருக்கில்ல அடுத்த ஸ்டாப் கூட போமாட்டீங்க எங்கியாவது விழுந்துவச்சா யாராவது பாக்குறதுக்கு கூட பாதி நாள் ஆகும் இந்த காட்ல. போன்ல எதும் கெட்ட செய்திங்களா. இல்ல போனப்பாத்தப்புறம்தான் உடம்பு நடுங்குச்சு…. அதான். பேசுனா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்தம்பி. என் பையன் வயசு இருப்பீங்க. தப்பா எதும் இருந்தா மன்னிச்சுக்கங்க

அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்லைண்ணே

சில வார்த்தைகளில் நெருங்கிவிடுவது கிராமங்களின் எளிய மனிதர்களுக்கு எளிதாக இருக்கிறது. மெல்ல கைபிடித்து அழைத்துச் செல்பவர்கள். பிடித்த கையை இருப்பிடம் சேரும்வரை விடாதவர்கள். பிடித்த கையை இடம் சேரும்முன்பாக விட்டுச் செல்பவர்கள்தானே எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறார்கள்.

அதெல்லாம் ஒண்ணுமில்லைண்ணே. ஒரு பொண்ணு…

என்ன தம்பி காதல் விவகாரமா. ஆனாலும் இப்பல்லாம் பசங்களுக்கு எல்லாத்துலையும் அவசரம். சீக்கிரமே கல்யாணம் பண்ணி சீக்கிரமே புள்ளபெத்து சீக்கிரமே செத்தும் போய்ட்றீங்க. எங்ககாலத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணாலும் பாத்துக்க யாராவது இருந்தாங்க. இப்பல்லாம் மொத வேலையே பெத்தவங்கள எங்கியாவது அனுப்பிவச்சுட்டு தனியா கிடந்து சாகணும்னுதான் ஆசப்பட்றீங்க என்னா

தன் கதையைக் கேட்கவிரும்புகிறாரா அல்லது அவர்கதையைச் சொல்ல விரும்புகிறாரா என்ற குழப்பம் வந்தது. ஆனாலும் கதைகேட்க காதுகொடுப்பவர்களுக்கும் ஒரு கதை இருக்கும்தானே அதையும் கேட்டுத்தான் ஆகவேண்டும். ரோட்டோரத்தில் நின்றிருந்த வண்டியை மெல்ல மரத்தடிக்கு இற்க்கினான். மணல் இழுக்கையில் அத்தனை கனமான வண்டியை உள்ளே தள்ளுவது சிரமமாக இருந்தது. இளநிகடைக்காரர் இருந்த இடத்தை விட்டு எழாமல் பார்த்துக்கொண்டேயிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு கடைக்காரர் அருகில் கிடந்த பிளாஸ்டிக் சேரில் வந்து அமர்ந்தான். சேர் மணலில் புதைந்தது. பின்பக்கம் விழுவதைப்போல.

“பாத்து உக்காருங்க. சொன்னேன்ல. அவசரம். மணல்ல கிடக்குற சேர்ல உக்காரும்போது ஒரு அழுத்து அழுத்திடு உக்காரணும் . அசையாது. ஆனா சேர் கிடச்சிருச்சுன்னு வந்து விழறீங்க பாருங்க அந்த அவசரம்தான் எல்லா பிரச்சினைக்கு காரணம் தம்பி. ”

நம்மை அறியாதவர்களிடம் நம் கதைகளைச் சொல்வதில் சில நன்மைகள் இருக்கிறது. முற்றிலுமாக நம்மை நல்லவனாகக் காட்டிக்கொள்ளலாம். திரும்பி இன்னொரு நாள் எதையாவது கேட்டு நினைவூட்ட மாட்டார்கள். முகமில்லாதவனின் கதையாகவே காற்றில் அழிந்துவிடும்.

“ அவசரம் இல்லைண்ணே. நான் கொஞ்சம் மெதுவாத்தான் பேசுனேன். அதுதான் பிரச்சினைக்கு காரணம்னு நினைக்கிறேன். அவ நெருங்கும்போதெல்லாம் விலகி விலகித்தான் போனேன். எனக்கே தெரியும் என் கேரக்டருக்கு காதல் கீதல்லாம் செட்டாகும்னு தோணல. ஆனா அவள காதலிக்க ஆரம்பிச்சதும் மட்டும் தெளிவா தெரிஞ்சுது. மெல்ல அப்டியே அடிவயித்துல யாரோ கத்திய சுழட்றமாதிரி அவளபாக்கும்போதெல்லாம். ஒவ்வொரு நாளும் அவ கூட தனியா இருக்கிற பத்து நிமிசத்துகாக வெயிட் பண்ற மாதிரி. அந்த பத்து நிமிசமும் மொத்த வாழ்க்கையையும் பாஸ்ட்பார்வேர்ர்ட்ல வாழ்ற மாதிரி. இதெல்லாம் புரியவைக்கமுடியாதுண்ணே. சரி ஆனது ஆகட்டும்னு நெருங்க ஆரம்பிக்கும்போதுதான் அந்த பொண்ணு விலக ஆரம்பிச்சா. என்னால முடியலைண்ணே. ஒரே குழப்பம். விலகிப்போறவன நெருங்குறவங்க ஏன் நெருங்க ஆரம்பிச்சப்புறம் விலகணும் சொல்லுங்க. இப்பவும் தண்ணியடிக்கும்போது அவ நியாபகந்தான். மத்த நேரத்துல மட்டும் என்ன குறை. என்ன மத்த நேரத்துல பேசவேண்டாம்ன்ற வைராக்யம் இருக்கும். எதுக்கு விலகிப்போன பொண்ண விரட்டணும்னு.. ஆனாலும் கொஞ்சம் மப்பான வைராக்யம் யோக்கிய முகமூடியெல்லாம் தேவைப்பட்றதில்ல் பாருங்க. அவ முகம் மட்டும்தான் நியாபகத்துல இருக்கும் அந்த போதையிலையும். பேசியே ஆகணும்னு ஒரு ஆதங்கம். சின்ன சண்டைல வாழ்க்கை மொத்தத்துமும் பிரிஞ்சமாதிரி ஆகிடக்கூடாதுன்ற பயம். சினிமாவேற இப்பல்லாம் எந்த சினிமாவுலையாவது காதலிச்சவங்க பிறர எதுத்து ஜெயிக்கிறாங்களா பாருங்க. எலலாருக்கும் எதிரி அவங்களேதான். அவங்களே காதலிச்சு அவங்களே சண்டை போட்டு அவங்களே பிரிஞ்சுட்டு அப்புறம் கிளைமேக்ஸ்ல அவங்கங்க துணையோட ரெண்டு நிமிசம் கண்கலங்கி அதையும் மறைச்சு… “ நந்து மூச்சுவாங்கினான். இன்னொரு சிகரெட் எடுத்து பற்றவைத்தான்.

“ நானும் காதலிச்சிருக்கேன் தம்பி” சொல்லும்போது கடைக்காரரின் கண்கள் வெயில்பட்டு மின்னின. திடீர் வெளிச்சம் முகமெங்கும் பாய்ந்தது. “அப்பல்லாம் போனேது. லெட்டர்தான். அதுவும் திருட்டுத்தனமா பொண்ணு முகத்துல போற பாதைல எறிஞ்சு எப்படியாவது கைல சேர்த்தா போதும்னு அடிச்சு புடிச்சு. முக்காவாசி கொண்டுபோய் வீட்ல குடுக்கும் அவன் அருவாளதூக்கிட்டு விரட்டுவான். உங்க கதை பரவால்லன்னு வைங்க”

அப்போதுதான் கவனித்தான். அருகில் நந்துவின் வண்டியைத் தவிர வேறெதுவும் வண்டியில்லை. இள நியை அங்கேயே மூட்டைகட்டி முடிச்சுப்போட்டு வைக்குமளவுதான் இருந்தது. முந்தைய கிராமம் முப்பதுகிலோமீட்டருக்கு முன்பு பார்த்தது. அடுத்து எதாவது அருகில் இருக்கலாம் ஆனாலும் நடந்து போவதன் சாத்தியங்கள் குழப்பமாகவே இருந்தன.

“பஞ்சாயத்து தலைவர் பொண்ணு தம்பி என்னவோ அதப்பாத்ததும் அப்டி ஒரு இது. முந்தின தலைமுறை பாருங்க. காதல்னெல்லாம் சொல்லத்தோணல. கல்யாணம் பண்ணிக்கணும்ற ஆசை. இப்பதான் காதலையும் கல்யாணத்தையும் ரெண்டா பிரிச்சு பாக்குறீங்க. அப்பல்லாம் ஒண்ணுதான். அவ அப்ப தையல்கிளாஸுக்கு போய்ட்டு இருந்தா. அந்த தெருவுல டீக்கடைல தம் வாங்கி பத்தவைச்சுட்டே வெறிக்க வெறிக்க பாக்குறது. அப்புறம் வீட்டு வாசல் அடிபம்புல தண்ணி புடிக்க வரும்போது மறுபடியும் அதுக்கு பக்கத்துல கடைல நின்னு வெறிக்க வெறிக்க பாக்குறது. அதென்னவோ தம்பி.. இதெல்லாம் உங்ககிட்ட சொல்றேன். ஒருத்தர பாத்துட்டே இருந்தா கூட கொஞ்சம் கொஞ்சமா அன்பு அதிகமாகிடுதில்ல தம்பி. இப்பல்லாம் லிப்ஸ்டிக் மேட்சிங்னு என்னென்னவ்வோ போட்டுட்டு அலையுதுங்க. பாண்ட்ஸ் பவுடரும் கனகாரம்பமும் சேர்ந்த ஒரு வாசம் தம்பி. இந்தத்தலைமுறைக்கு கனகாம்பரமே தெரியுமோ என்னவோ. இதெல்லாம் ஒரு செகண்டுக்குத்தான் தம்பி. மொத முறை அந்தப்பொண்ணு நம்மகுள்ள பதியிற்துக்கு. அதுக்கப்புறம் அந்த அழகு பாத்துக்கிட்டே இருக்கணும்னு நம்ம மூளைக்குள்ள கிடந்து குடைஞ்சுகிட்டே இருக்கும். தூங்கவிடாது. எத்தன நடு ராத்திரி திடீர்திடீர்னு அந்த வாசம் வந்து எழுந்து உக்காந்திருக்கேன் தெரியுமா. ஆனா கடைசி வரைக்கும் நானா போய் சொல்லல பாருங்க”

நந்துவிற்கு பதட்டம் அடங்கி மெல்லிய சிரிப்பு வந்தது. நடுக்கம் நின்றிருந்தது. காதல் அத்தனை தலைமுறைகளிலும் ஒரே முகத்துடன் இருப்பதாக தோன்றியது. ஊர்களுக்கு பதிலாக அலுவலகங்கள், பெரு நகரங்கள். எறியப்படும் கடிதங்களுக்குக்காக பதில் வராத குறுஞ்செய்திகள்.

“முன்னாடியே பிரிஞ்சுட்டோம்ணே. இன்னும் சொல்லப்போனா அது பிரிவு கூட கிடையாது. எப்பவாது சேர்ந்திருந்தாதான அதுக்கு பேரு பிரிவு. எனக்குத்தான் பீலிங்கெல்லாம். அவளுக்கு அந்த எண்ணமே இல்ல போல குழப்பம் என்னன்னா விலகிப்போறவன விரட்டி உன் கவிதைல வர்ற தேவதையாருன்னு ஏன் கேட்கணும். மூஞ்சில தெரியுற விஷயத்த எழுத்துல கண்டுபிடிச்சு அது யாரு யாருன்னு கேட்டு நீதான்னு வெடிச்சு சொல்ற அளவுக்கு கார்னர்கு கொண்டு போய் நிறுத்தி அப்புறமா இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு சொல்லவேண்டிய அவசியம் என்னண்ணே”

திடீரேன கடைக்காரர் வெடித்துச் சிரித்தார். “கவிதையும் எழுதுவீங்களா தம்பி”

“ நம்மூர்ல யார்ணே எழுதல. சோம்பேறிகளோட முதல் ஆயுதம்ல.”

“பயந்தாங்கொள்ளிகள்னும் சேர்த்துக்கங்க. நேரடியா பேசத் தைரியமில்லாதவன் பேசவேண்டியத புரியாத மாதிரி பொதுவுல எழுதுறதுக்கு பேர்தான உங்களுக்குக் கவிதை.”

நந்து துணுக்குற்றான். தைரியம் இந்த வார்த்தை மீண்டும் இப்படி ஒரு கணத்தில் வெளிவரும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

“தைரியமில்லைன்னும் சொன்னாண்ணே. விலகிப்போனேன்னு சொன்னேன்ல. அப்ப. உனக்கு தைரியமில்ல ஏன் உனக்கு இதெல்லாம்னு கேட்டாண்ணே”

“சொன்னேன்ல. எங்கிட்டையும் இவ கேட்டா தம்பி. நேர்ல வந்து பேச தைரியமில்லாத உன்ன நம்பி எப்படி கழுத்த நீட்றதுன்னு. கேட்கும்போது அந்த கண்ண பாத்தீங்களா. அப்டியே நெருப்ப முழுங்குனாப்ல. புடிச்சிருந்தாதான் தம்பி அப்டியெல்லாம் கேட்பாங்க. புடிக்காதவனுக்கு தைரியமில்லாம இருக்கிறது இவங்களுக்கு வசதிதான் தம்பி விட்ருவாங்க. புடிச்சிருந்தாதான் அந்த கேள்விட் வரும் பாத்துகிடுங்க. டீக்கடைல நின்னுட்டு வழக்கம்போல நின்னு பாத்துட்டு இருந்தேன். முந்தின நாள் கூட லெட்டர பிரண்டுகிட்ட குடுத்துவிட்டேன். போய் பேசுனா பிரச்சினையாகிடும்னு பயம். நாம்பாட்டுக்கு நின்னுட்டு இருந்தேன். வந்தா அப்டியே தங்கு தங்குன்னு வேட்டைக்குப்போற காளி மாதிரி பைல இருந்து லெட்டர எடுத்து நாலாஎட்டா கிளிச்சு பளீர்னு மூஞ்சில அடிச்சா. நேர்ல சொல்ல தைரியமில்லாதவன நம்பி கழுத்த நீட்டக்கூப்ட்றியா எப்பட்றா உனக்கு அப்டி ஒரு ஆசை ஏண்டா இப்படி இருக்கீங்க ஆம்ப்ளைங்கன்னா. அடிவயிறு கலங்கிருச்சு. தசரா காளி வேச ஆவேசம் பாத்திருக்கியா. பயம் வராது. அடிவயுறு புடிச்சு இழுக்கும் அப்டியே கண்ணீர்விட்டு கால்ல விழுந்து என் வம்சத்த காப்பாத்து ஆத்தான்னு கதறும்னு போல இருக்கும். அந்தமாதிரி இருந்துச்சு”

“அதேதாண்ணே. இனிமே பேசாதன்னு சொன்னப்புறம் நானும் பேசல. ஒரு நாள் அவளே மெசேஜ் பண்ணிருந்தா. நான் குடுத்த புக் எதையோ திருப்பிக்குடுக்கணும்னு கூப்டா. போனேன். சொன்ன நேரத்துக்கு முன்னாடியே சொன்ன இடத்துக்கு போய்ட்டேன். ஒரு மாதிரி நீங்க சொன்னமாதிரிதான் அடிவயிறு புடிச்சு இழுத்துச்சு. சரி ஒரு தம் போட்டுட்டு வரலாம்னு வெளிய போய்ட்டேன். திரும்பி வந்தப்ப சொன்ன இடத்துல நின்னுட்டு இருந்தா. மூக்க லைட்டா தட்டும்போதே தெரிஞ்சுருச்சு தம் அடிச்சது புடிக்கலைன்னு. எதுவும் பேசி வாயத் தொறக்க விரும்பல சத்தமில்லாம வாங்கிட்டு வந்துட்டேன். நல்லாருக்கியான்னு கேட்கணும்னு ரொம்ப நேரம் பேசணும்னெல்லாம் தோணுச்சு. சொன்னீங்களே அந்த நெருப்பு முழுங்குன கண்ணூ, அதத்தாண்டி எதுவும் பேசமுடியல. தெரியாம காதலிச்சுட்டேன் என்ன மன்னிச்சிரு ஆத்தான்னு அதே மாதிரி கால்லவிழுந்து கதறத்தான் தோணுச்சு. எப்படிண்ணே நானே மறந்து போன புக்க திருப்பிக் கொடுக்க கூப்டது கணக்க மொத்தமா முடிக்கவா இல்ல மறுபடியும் தொடரவாண்ணு எனக்கெப்பெடி தெரியும். சரி முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்னு வாங்கிட்டு வந்துட்டேன். ஆனா அந்த இடம் மறக்கவே முடியாதுண்ணே அந்த ரெண்டு நிமிசம்”

“எல்லாகாலத்துலையும் இப்படித்தான் தம்பி. எல்லாத்தையும் சொல்றவன் முட்டாள். எதுவுமே சொல்லாதவன் பயந்தாங்கொள்ளி, சொல்லியும் சொல்லாமலும் தடுமார்றவன் பைத்தியக்காரன். எல்லாம் ஒரு விளையாட்டு தம்பி. உங்களுக்குத் தெரிஞ்ச ஒரே விளையாட்ட ஆடிட்டே இருந்தா மொத்தமா தோத்துருவீங்க. எதிராளிக்கும் சூழலுக்கும் எல்லாத்துக்கும் சேர்த்து ஆடணும். அதல்லாம் எல்லாருக்கும் எல்லா நேரமும் நடந்திராது. இந்தா இவ திட்டுனா. நானும் பேன்னு முழிச்சுட்டு நின்னேன். அவ்வளத்தையும் சொல்லிட்டு நாளைக்கு கோயிலுக்கு வாங்க பேசணும்னுட்டு போய்ட்டா தம்பி. எதிர்பாப்பீங்களா சொல்லுங்க. அந்த வார்த்தை அவ சொல்லலைன்னா மறு நாள்ல்ல இருந்து அவ தெரு பக்கம் கூட போய்ருக்கமாட்டேன். அவ்ளோ வீரம் ஆம்ப்ளைக்கு. “

வெயில்தாழ்ந்து நிழல் இறங்கியிருந்தது. நேரம் கடந்ததே தெரியவில்லை. மொபைலை எடுத்துப்பார்த்தான். மணி மூன்றைத்தாண்டியிருந்தது. நந்துவின் பிளான் படி இன்னேரத்திற்கு அதிராம்பட்டினத்தைத் தாண்டி மல்லிப்பட்டினம் போயிருக்கவேண்டும் இருட்டும்போது திருச்செந்தூர் அடைந்தால் மாலை கடலில் கால் நனைக்க நினைத்திருந்தான். ஆனாலும் பயணங்கள் தொலைவுகளைவிட மனிதர்களுக்காகத்தானே. இந்தக் கதையை முழுதுமாக கேட்டுவிட்டே கிளம்பலாம். தாமதமானால் அதிராம்பட்ட்டினத்தில் எதாவது லாட்ஜில் இரவைக்கழிக்கலாம். குறுஞ்செய்தியும் கடைக்காரர் கதையும் சேர்ந்து ரணங்களைத் தோண்டிவிட்டிருந்தது. இரவுக்கு எதாவது குடித்தால் நன்றாக இருக்கும். மது விஷம்தான். ஆனாலும் உள்ளிருக்கும் சில நினைவுகளைக் கொல்வதற்கு ஆபத்திலாத விஷம்.

“போனேன் பாத்துக்கங்க. நல்ல பவுடர் அடிச்சு கர்ச்சீப்ல பவுடர் மடக்கி நெத்தில துன்னூறெல்லாம் பூசி. போனதும் அடிச்சா பாருங்க நெத்தியடி எங்கப்பாட்ட பேச முடியுமா உன்னாலன்னா. ஊரையே எரிச்சுப்புடுவானுக தம்பி. மோசமான ஆளுக புள்ளமுழிக்கமுழி பேளமுழிக்குன்னு தாய்க்கு தெரியாதா. நான் நீங்க கூப்டா வர்றேன். எதாவது வேலையப்பாத்துவைங்க வெளியூர்ல. மொத்தமா போய்ட்லாம்னா. நான் அதெல்லாம் யோசிச்சிருக்கவே இல்லதம்பி. பொம்பள மனசு பாருங்க. நமக்கு கண்ணு கழுத்துக்கீழையே நின்னுபோகுது பாத்துகிடுங்க. அவங்க மொத்த ஒலகத்தையும் மொத்த எதிர்காலத்தையும் ஒரே பார்வைல பாத்துப்புட்றாங்க தம்பி. அது நமக்கு என்னைக்கும் ஆம்ப்ளையா இருக்கவரைக்கும் வரவே வராது. “

நந்து பேச்சற்று நின்றுகொண்டிருந்தான். தொண்டை வறண்டதுபோல் இருந்தது. சிகரெட் தேவையாயிருந்தது. ஆனாலும் திடீர் மரியாதை மனதுக்குள் எழுந்திருந்தது. அவர் முன் ஊத சங்கடமாக இருந்தது. அசைந்து மீண்டும் அமர்ந்தான்.

“அப்புறம் அப்பப்ப கோயில்ல பாத்துகிடுவோம். டீக்கடைல நின்னு தம் அடிச்சுட்டு இருப்பேன். அவ போகும்போது டக்குன்னு தம்ம மறைப்பேன். எரிக்கிறாப்ல பாப்பா. டப்புனு கீழ போட்டுட்டு கேனத்தனமா ஈஈன்னு இளிப்பேன். லைட்டா சிரிப்பா ஓரமா உதட்டும் கண்ணுக்கும் நடுவில மட்டும். இப்பமாதிரி அப்பல்லாம் சிகரேட்டொண்ணூம் ஆளுக்கு ரெண்டு கைல வச்சுட்டு சுத்திறதில்ல தம்பி. அதெல்லாம் ஊருக்கு அடங்காத வீட்டுக்கும் அடங்காத கிறுக்கனுக மட்டும்தான் சிகரெட்டு தண்ணியெல்லாம். வில்லனுக அடையாளம். இப்ப எங்க உங்க ஹீரோக்களே டாஸ்மாக்லதான் குடும்பமே நடத்துறானுக.”

“கல்யாணம் எப்படிண்ணே.. அதே மாதிரி தீப்பந்தத எடுத்துட்டு வயக்காட்டுல துரத்துனாங்களா”
கேட்டவுடன் நாக்கைகடித்துக்கொண்டான். கேட்டிருக்கக்கூடாது மரியாதையை மீறியதுபோல் இருந்தது. கூடவே அதிக உரிமை எடுத்துக்கொண்டதுபோல

“அதெல்லாம் இல்ல தம்பி. தூத்துக்குடில வேலை கிடைச்சு போய்ட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு வந்து ஊருக்கு திரும்பும்போது இவள கூப்டேன். சரி வர்றேன்னா. கூட்டிட்டுப் போய்ட்டேன். அவ்ளொதான். போன இடத்துலையே நண்பர்கள் சூழ கல்யாணம். அப்டியே வாழ்க்கை போய்ச்சு கொஞ்ச வருசம்..

“உங்க வீட்ல அவங்க வீட்ல எதும் பிரச்சினை வர்லியாண்ணே. இந்தா இருக்கு தூத்துக்குடி விரட்டி வந்திருப்பாங்களே”

“அந்தக்கதையெல்லாம் இப்ப எதுக்கு தம்பி நல்லத மட்டும் நினைப்பமே. கேட்கணும் தம்பி கேட்டாத்தான் கிடைக்கும். இல்லைன்னு சொன்னா போக தயாரா இருக்கணும். குழப்பத்தில இருக்கிற மாதிரி தெரிஞ்சா கூட நிக்க யோசிக்கக்கூடாது. ஆனா தம்பி தொழில் முக்கியம். காதலிக்க ஆட்க போதும் , ஆனா காசு வேணும் தம்பி வாழ”

காசுக்கெண்ணண்ணே. முத தடவ இவள பாக்க முன்னாடியே நல்ல வேலை. நல்ல கம்பெனி, நல்ல சம்பளம்.. அதாச்சுண்ணே எட்டுவருசத்துக்கு மேல. அதென்னமொ நீங்க காசு முக்கியம்னு இப்ப சொல்லுதீங்க. ஆனா அதுவரைக்கும் எனக்கு யார்மேலையும் தோணவே இல்லைன்னே அதான் விசயம். அதுக்கு முன்னாடி தோணியிருந்தா நீங்க சொல்றதெல்லாம் யோசிச்சிருப்பேன்னு வைங்க. ஆனா இவதான் மொதல்ல. இவளுக்கு முன்னாடியும் பிரண்ட்ஸ்ல ஆம்ப்ள பொம்பள வித்தியாசமில்லாம கூட்டம் இருந்துது. ஆனா யார் மேலையும் தோணாதது இவ மேல தோணுனதுதாம்ணே ஆச்சர்யம். அதான் இவள விட மனசில்ல. அப்புறம் கூட பாருங்க இன்னைய கணக்குக்கு ஏழுவருசத்துக்கு மேலையே இருக்கும். இப்பவும் அதுக்கப்புறம் வேற எந்த பொண்ணு மேலையும் தோணலைன்னா பாத்துக்கங்களேன். என்னவோ அந்த ஆறூமாசத்துலையே மொத்த வாழ்க்கையும் வாழ்ந்துட்டாப்ல. பெருசா கூட ஒண்ணுமில்ல. சும்மா வருவா போவா. பேசிட்டு இருப்போம். இருபத்து நாலுமணி நேரத்துல பத்துமணி நேரம் ஒரே ஆபிஸு. வீட்டுக்குப் போறபாதைல கம்பெனி பஸ்ஸு வீட்டுக்குப்போனதும் ஒரே எஸ்ஸெமெஸ் மழை. டெய்லி ஒரு தடவையாவது போனு. இருபத்து நாலுமணி நேரத்துல இருபது மணி நேரம் அவகூடையே இருந்தாப்ல ஒரு மயக்கம். ஆனாலும் போதலை. இதுல நமக்கு என்னிக்கு போதும்னு தோணிருக்கு சொல்லுங்க. திருப்பி யோசிச்சுப்பார்த்தா சின்ன சின்ன விசயங்கள்ளெல்லாம் கூட நியாபகம் வருதுண்ணே. ஜன்னல் ப்ரேம்ல அவ முகம் மட்டும். அதுல காத்துல ஆட்ற சின்ன ஜிமிக்கி. ஜன்னல் கண்ணாடில பிரதிபலிக்கிற அந்த குட்டி மூக்குத்தி அவளோட அந்த வாசம். குரல் இப்பதாண்ணே மறக்க ஆரம்பிச்சிருக்கு. மொதல்ல மறக்குறது குரல்தானாமே. பயமா இருக்குண்ணே இதெல்லாம் மறக்காம இருக்கவாது எங்கியாவது எழுதி வைக்கணும்ணே

நந்துவுக்கு மூச்சிரைத்தது.” எழுதுறது மறக்காம இருக்கவா மறக்குறதுக்கான்னு தெரியல. சின்ன சின்ன சம்பவங்களெல்லாம் எழுதன்ப்புறம் மறந்துட்றாப்ல தோணுது. எழுதும்போது நியாபகத்துல இருக்குன்னு தெரியாத சின்ன சின்னவிசயமெல்லாம் நியாபகம் வருது. நிறைய யோசிக்கறேன். கொஞ்சமா எழுதுறேன். ஆனாலும் என்னவோ கிடந்து உறுத்திட்டே இருக்கு. என்ன தப்பு எங்க மிஸ் பண்ணேன் எதுக்காக காதலிக்க ஆரம்பிச்சேன். ஒரே குழப்பம். தூங்கவிடாம கிடந்து உழப்புது. அதுக்குண்ணே கொஞ்சமாவாது குடிக்க வேண்டியிருக்கு பாத்துக்கங்க நைட்ல. ஆனா குடிச்சா இன்னும் கூர்மையா நியாபகம் வருது. போன் பண்ணேன் மெசேஜ் பண்ணேன்ன்னு எதையாவது பண்ணிவச்சிட்றேன். நேத்துகூட பாருங்க குடிச்சுட்டு மெசேஜ் அனுப்பி தொலைச்சிருக்கேன். திட்டி வச்சிருக்கா மறுபடியும். புத்திவரும்ன்றீங்க… ம்ம்ம்ஹும். மறுபடியும் இன்னொரு நாள் நியாபகத்துகாக குடிக்கணும். குடிச்சப்புறம் மறுபடி நியாபகம் வரும். பேச்சு திட்டு. தப்பு பண்றேன்னு தெரியுது. மூளையும் இதயத்துக்கும் கிடந்து அலைபாயுதுண்ணே தர்க்கம். அத கன்றோல் பண்ண முடிஞ்சா நல்லாருக்கும்”

“ இன்னொரு எளனி வெட்டவா. பொழுதே சாஞ்சிருச்சு. இருட்டப்ப்போகுது. வேணா எங்கூட்ல தங்குறீங்களா. நானும் இவளும்தான். புள்ளையெல்லாம் ஒண்ணும் ஆண்டவன் குடுக்கல. தங்கிக்கங்க. நல்லா சமைப்பா காலைல கூட போகலாம்” அவர் பேச்சை மாற்ற முயற்சிப்பது அப்பட்டமாக தெரிந்தது. வீடு மிகச்சிறியதாக இருக்கலாம். இருவரே கஷ்டப்படுவதாக இருக்கலாம். எந்த கிராமத்திலிருந்தோ எங்கியோ பிழைக்கப்போனவர் இத்தனை வயதில் இந்த பெரிய கூட்டமில்லாத தார்ச்சாலை ஓரத்து தார்ப்பாயில் ஒண்டியிருக்க எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். அதையெல்லாம் மீறி இன்னும் துன்பமாக்க நந்து விரும்பவில்லை. கூடவே அவர் கிளம்பிவிடக்கூடாது என்றும் இருந்தது. சொல்வதில் ஒரு ஆசுவாசம். யாரிடமும் சொல்லாத கதைகளை மறுநாள் சந்திக்காத நபர்களிடம் சொல்லிச் செல்வதில் கிடைக்கும் சுதந்திரம்.

“இல்லண்ணே இருக்கட்டும். ஒரு தம் அடிச்சுக்கவா”

“இதென்ன கேட்டுகிட்டு. அடிச்சுக்கங்க தம்பி நீங்க என் புள்ள மாதிரி”

“அதாண்ணே தயக்கமாருக்கு.”

அவர் சிரித்தார். நந்து அடுத்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான். எட்டுமணி நேரப்பயணத்தில் எதுவும் தெரியாத வலிகள் இப்பொழுது மெல்ல எழுந்து வருவதைப்போல் இருந்தது. கணக்கின் படி சென்றிருந்தால் வெளிச்சத்திலேயே திருச்செந்தூர் கால் நனைத்து இரவுக்குள் ஊர் போயிருக்க முடியும். இந்த இரவில் வேகம் சாத்தியமில்லை. மெல்லமாகத்தான் ஓட்டியாகவேண்டும். பைக் சீட்டில் வெப்பம் தணிப்பதற்காக புதிதாக போட்டிருந்த கூல்மெஷ் வெப்பத்தை இறக்கிய தொடை கோடுகள் நெருப்பைப்போல் எரிந்தன. இன்னும் நான்கிலிருந்து ஆறு மணி நேரம் இருட்டில் போகவேண்டியிருக்கலாம்.

“ கண்டுபிடிச்சிட்டாங்க தம்பி” கடைக்காரர் குரலில் நந்துவின் சிந்தனைகளை அறுத்தார். “ எனக்குன்னு அப்பாம்மால்லாம் யாரும் கிடையாது பாத்துக்கங்க. கோயில்மாடுமாதிரி. கிடைச்ச வேலைய பாத்துட்டு கிடந்தேன். இவ வந்தப்புறம்தான் சொந்தம்னு ஒண்ணே தெரிஞ்சுது. தூத்துக்குடில வேலை பாத்துட்டு இருந்த இடத்த கண்டுபிடிச்சுட்டாங்க. வெல்டிங்க் பட்டறை. பழைய இரும்புக்கட்டிலு பாத்திருக்கீங்களா. சட்டத்துல பிளாஸ்டிக் ஒயர் கட்டி வருமே அந்த மாதிரி ஒரு பர்னிச்சர்கடைக்கு சட்டம் செஞ்சு குடுக்கிற வேலை. அறுக்க பத்தவைக்கன்னு ஆயுதம் பொழங்குற இடம். நானும் நல்ல தாட்டியமா ஓடியாடி வேலை செய்யுறவனாச்சா நல்லா ஒட்டிக்கிட்டேன். அதையும் கண்டுபிடிச்சு வந்துட்டானுக. இவ அப்பம்மாரு. சித்தப்பன் பெரியப்பன்னு நாலு பேரு. எனக்கென்ன பயம்னா எளவுக்க வீட்டுல போய் இவள எதும் செஞ்சிருக்கக்கூடாதேன்னு. வீடும் கடைக்கு பொறத்தால ரெண்டு தெரு தள்ளித்தான். வந்த உடனே எடுப்பிடிக்கு கிடந்த பயலுவள விரட்டிவிட்டு செமத்தியான அடி.அடி விழுது நான் அழுதுட்டு கிடக்கேன். பட்டறை ரோட்லருந்து உள்ள தள்ளி சந்துக்குள்ளன்றதால ஆளும் கிடையாது. பக்கத்து கடை பயலுவ வந்துட்டானுவ. எங்க… சட்டருக்கு வெளிய நின்னு யோவ் யேய்னு கத்தறானுவளே தவிர எவனுக்கும் உள்ள வர தைரியமில்ல. வந்தா நமக்கும் அடிவிழும்னு பயம். அவ்ளொ வீரம் இந்த ஆம்ப்ளைங்களுக்கு. அதுல இவ பெரியப்பன் சட்டத்துக்கு எடுத்து வச்சிருருந்த ராடெடுத்து ஓங்கி ஒரு அடி முட்டில ரெண்டு முட்டிலையும். சவத்துக்க தேங்கா உடைஞ்சாப்ல நொச்சுனு ஒரு சவுண்டு. எங்க. கண்ணு இருட்டிட்டு வந்துட்டு முழிச்சு பாத்தா இவ நிக்கா. எங்கருந்து வந்தா எப்படி தெரிஞ்சுது எப்படி உள்ள வந்தா எதுவும் தெரியாது. ஒத்தக்கைல இரும்பு கம்பி பாத்துக்கங்க இந்தா இத்தா தண்டிக்கு. கட்டிலு காலுக்கு வைக்கிறது. புடவைய ஒத்த சைடுக்கு தூக்கிச் சொருவிருக்கா தூக்கப்போறவ வாரியல்லோட நிக்கிறவளாட்டம் கம்பியோட நிக்கா தம்பி எனக்கும் அப்பனுகளுக்கும் நடுவில பேய் மாதிரி. தெய்வம் தம்பி. காளி மாதிரி. இசக்கியம்மன் மாதிரி. காலொடைஞ்சு கிடக்கிற எனக்கே கொலை நடுங்கிருச்சு… சாமீ அவள எப்பவும் அப்படி பாத்ததில்ல அத்தன வருசத்துல அதுக்கப்புறமும். அப்பனுக எம்மாத்திரம் கெட்டவார்த்தையா திட்டுட்டு வச்சுட்டு கூட்டத்த புகுந்து போய்ட்டானுக. கம்பியப்போட்டுட்டு என் தலையத் தூக்கி மடில வச்சுட்டு வலிக்குதான்னா பாருங்க. என்னா கண்ணூங்கிறீங்க. என் தாயே மயானத்துல இருந்து இறங்கி வந்து முலையூட்ட உக்காந்தாப்ல அப்டி ஒரு கண்ணு. பயலுக தூக்கி அள்ளிப்போட்டு ஆஸ்பிட்டல்ல போட்டானுக. இவ பீயள்ளி மூத்தரம் துடைச்சு காப்பாத்துனா பாத்துக்கங்க. அதாச்சு இருவது வருசத்துக்கு மேல. புள்ளையா குட்டியா. தைய மிசினோட்டித்தான் என்னைய காப்பாத்திட்டு இருக்கா. நானும் இருக்கேன் தெண்டத்துக்கு சாகாம.

நந்துவுக்கு இதயம் நடுங்கியது. அத்தனை பிரச்சினைகளும் அத்தனை குழப்பங்களும் மறைந்து தெளிவானது போல் இருந்தது. உடல் நடுங்கியது. ஆனாலும் ஒரு தெளிவு. இருட்டத்தொடங்கியிருந்தது. மணி பார்த்தான் ஆறரை ஆகியிருந்தது. நான்கு மணி நேரத்துக்கு மேலாக கதைபேசிக்கொண்டிருக்கிறோம் என்பது உறைத்தது.

“இந்தக்கடை கூட அவ போட்டு குடுத்தது பாத்துகிடுங்க. ஊருக்குள்ள எங்கியாவது போட்டா வேலை செய்யவேண்டி வருமாம் நானு. அதுக்குன்னு ஒதுக்குப்புறமா போட்டுக்குடுத்துருக்கா. லோடு வாங்குறெல்லாம் அவதான். சும்மா உக்காந்திருப்பேன் பாத்துக்கங்க நாள் பூரா. பதினொண்ணுல இருந்து இரண்டு வரைக்கும் இந்த ரோட்ல போறவங்க கடையப்பாத்தா ஷாக் ஆகித்தான் நிக்கவே செய்வாங்க. அதுலையும் லாபந்தான் பாருங்க. நின்னவங்க சும்மாவாச்சும் எதாது வாங்கணுமேன்னு எளனிவாங்கி குடிப்பாங்க. சிகரெட்டு அது இதுன்னு வச்சிருந்தேன் முன்னாடி. சின்னப்பசங்க வாங்கி நின்னு ஏம்முன்னாடி ஊதுறது அவளுக்கு மரியாதையா இல்லியாம் பாருங்க. அதுக்காகவே அதெல்லாம் விக்கக்கூடாதுன்னுட்டான். அவ சொல்லுக்கு என்னத்துக்கு மறுபேச்சு பேசிட்டுட்டு நானும் கேட்டுகிட்டேன்”

“சாரிண்ணே”

“ஹா ஹா எதுக்கு தம்பி சாரியெல்லாம். நல்லவேளை அவ நடுவில வரல. வந்துருந்தா ஒரு வேளை காளி அவதாரத்த நீங்களும் பாத்திருப்பீங்களோ என்னவோ. ஒண்ணு மட்டும் சொல்றேன் தம்பி. நீங்க யாரு, உங்களுக்கு போன்ல திட்டுன பாப்பா யாரு எதும் தெரியல. ஆனாலும் சொல்லுதேன். அவங்க விட்றச்சொன்னா விட்ருங்க தம்பி. பொண்ணுங்கல்லாம் ஆத்துத்தண்ணிமாதிரி. நாம நக்கிக்குடிக்கிறதுக்காக இல்ல. அவங்களுக்கு உலகத்துல நிறைய வேலையிருக்கு தம்பி. எந்த வயலுக்கு பாயணும் எந்த கூழாங்கல்ல உருட்டி எந்த கரைல சேக்கணும் எந்த கடல்ல எந்த மீனுக்குப் போய் கலக்கணும்னு அவங்களுக்குள்ளேயே தெரிஞ்சிருக்கும். நமக்கெல்லாம் அது புரியாது. வாலாட்டிட்டு போய்ருங்க. அணைக்கட்டெல்லாம் உடைச்சுட்டு வந்துரும் தம்பி ஆறு. கிடக்கிற ஆறேல்லாம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு கிடக்கதா சொல்வானுக. ஆனா இஷ்டப்பட்ட்டு கிடக்குது தம்பி. நீங்க ஒண்ணும் பண்ணமுடியாது. அவங்க போக்குல உட்ருங்க. உங்களுக்குன்னு ஒரு நதி எங்கிருந்தாது கிளம்பியிருக்கும். எல்லா குப்பையையும் அடிச்சு ஒதுக்கிட்டு உங்களுக்கு தாகம் தீக்கண்ணே கிளம்பி வந்துட்டு இருக்கும் தம்பி. சும்மா குடிச்சேன் குடிக்கலைன்னு கதை சொல்லிட்டு ஒரு பொண்ணப்போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்காதீங்க தம்பி புரியுதுங்களா. நான் சொல்லக்கூடாது. ஆனாலும் சொல்தேன்”

கடைக்காரர் பொறிந்து தள்ளியது போல் இருந்தது. மழையடித்து ஓய்ந்தது போல. மூச்சிரைக்காமல். காளியை நேரில் பார்த்தவர்க்ள் சொன்னால் சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

“ஆனாலும் எனக்கான நதி இவதான்னு தோணிட்டே இருக்குண்ணே”

கடைக்காரர் எதோ சொல்ல வாயெடுத்தார். தூரத்தில் பைக் வெளிச்சம் கண்டு நிறுத்திக்கொண்டார்.

“ என்னய்யா… இங்கியே இருந்திட்ட போல. வீட்டுக்கு வர ஆசையில்லையா” டிவியெஸ் பிப்டியில்வந்திறங்கியவருக்கு நல்ல திருத்தமான கண்கள். இசக்கியம்மனுக்கு வரைந்து வைத்ததுபோல. நெற்றியில் பழையகாலத்து ஒரு ரூபாய் போல பெரிய பொட்டு. சொல்வதற்கு முன்பாகவே கடைக்காரர் அவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்த மகாகாளி இவராகத்தான் இருக்கவேண்டும் என்று தெரிந்தது. வந்தவர் படபடவென கடையை மூடினார். பல ஆண்டு பழக்கத்தில் வந்த லாகவம். சாக்குவிரிப்பின் கீழ் இருந்த காசினை எண்ணாமல் மொத்தமாக அள்ளி அள்ளி கடைக்காரர் சட்டைப்பையில் திணித்தார். பிறகு இளனிகளை சாக்கோடு சேர்த்து கட்டி மேலே தார்ப்பாயைப் போர்த்தி நைலான் கயிறை குறுக்கும் நெடுக்குமாக கட்டினார். பிறகு பந்தலுக்கு நடப்பட்ட்டிருந்த கம்புகளை அசைத்து பிடுங்கி தார்ப்பாய் சாக்கு மூட்டையின் மீது மூடுமாறு போர்த்தி கம்புகளை எக்ஸ் வடிவில் மேலே நிரப்பினார். எக்ஸ்க்கு மையப்புள்ளியில் அருகில் கிடந்த ஒரு பெரிய பாறாங்கல். கூரைக்கு வெளியே அமர்ந்திருந்த கடைக்காரரை வலது கை அக்குள் வழியாக ஒரு கை முட்டிகளில் ஒரு கை. ஒரு பெருமூச்சு. டக்கென கடைக்காரரை தூக்கிவிட்டார். நந்து அசந்து போய் நின்றான். அந்தத் தருணத்திலேயே அங்கேயே அவர்காலில் விழுந்து எழவேண்டி எழுந்த வேட்கையை கட்டுப்படுத்திக்கொண்டான்.

நந்து என்ற ஒருத்தன் அங்கில்லாதது போலவே அந்த அம்மாள் அவரைத் தூக்கி வண்டியில் முன்பக்க இடைவெளியில் அமர்த்தினார்.

“யார் தம்பி… என்ன…” குரல் நல்ல அழுத்தமான குரல். மறந்து போன கெளரியின் குரல் நினைவுக்கு வந்ததுபோல் இருந்தது. கிட்டத்தட்ட இதே குரலில்தான் தைரியம் இல்லை என அவள் சொன்னது. இதே குரலில்தான் என்ன பெரிய தியாகின்னு நினைப்பா எனக்கேட்டது. இதே குரலில்தான்.

“கேட்குறன்ல”

“அட அவர ஏம்மா அதட்டுற. கடைக்கு வந்ததுதான். அப்டியே பேசிட்டே இருந்தேன். கூட உக்காந்திருச்சு. எனக்கும் பேச்சுத்துணைக்குன்னு பேசிட்டு இருந்தேன்.”

“ஆமா நீ எல்லாத்தையும் பேசி அப்டியே சாதிச்சிருவ. காலொடைஞ்ச காவியத்த புள்ளையாரு வியாசருக்கு சொல்லிட்டு இருந்தீங்களாக்கும் போய் மகாபாரதம் எழுதுறதுக்கு. போய் எழுதிக்க தம்ப்பி ஆனது ஆச்சு”

நந்து திடுக்கிட்டான். அவன் எழுதுவது இந்த அம்மாவுக்கு எந்தக்கணத்தில் எப்படி தெரிந்திருக்ககூடும்? “ போங்க தம்பி. வீடுபோய்ச்சேருங்க ஆயிரம் பேர் ஆயிரம் கதை சொல்வாங்க. அதையெல்லாம் கேட்டுட்டு எதாவது ஆத்துல விழுந்து அனாதையா போய்டடாதீங்க. உங்களுக்குன்னு எதாவது டம்ப்ளர்ல கிடச்சா உங்க விதி அவ்ளோதான்னு குடிச்சுட்டு கிடங்க தெரியுதா… ஆறெல்லாம் பெரியவிசயம். எல்லார் தலைக்கெல்லாம் படைச்சவன் எழுதல போங்க”

எதையுமே கேட்காமல் எதையுமே சொல்லாமல் இதுவரை கேட்ட சொல்லப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் இந்த அம்மாள் நிஜமாவே பேரன்னைதானா. நந்து உறைந்து நின்று கொண்டிருந்தான். அம்மாள் வண்டியை இலகுவாகத் திருப்பி ஊருக்குள் சென்றுகொண்டிருந்தார். அந்த வெளிச்சம் மறையும் வரை நின்றுகொண்டிருந்தான். பிறகு மொபைலை எடுத்து மெசேஜையும் கெளரியின் நம்பரையும் அழித்தான்.

வண்டியை எடுத்து அதிராம்பட்டினத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தான். முத்துப்பேட்டை ஊரைக்கடந்து சில கிலோமீட்டர் சென்றபிறகு திடீரேன உறைந்து வண்டியை ஒதுக்கி அந்த பாலத்தின் மீது சிகரெட் வேண்டி நிறுத்தினான். பாலத்திற்கு கீழே பாமினி ஆறு சன்னமாக ஓடிக்கொண்டிருந்தது.