கூட்டிலிருந்து தவறி விழும் பாவனையுடன்
பறப்பதற்கான வானத்தினைத்
தேடிக் கிளம்பும்
பறவையை

தன் ஆயத்த வேர்களின் கடைசி
சல்லியினை
பாலைச் சுனை
நோக்கி நகர்த்திச் செல்லும்
மரத்தை

எவர் பாதத்தையும்
மிதித்துவிடாத
அக்கறையுடன் ஓசையின்றி
வெளியேறும்
மனிதனை

ஒரு கை அழைக்கிறது
பழைய காலத்தின் நெருப்புகளுக்கு

o

தூரிகைகளின் ரகசியத் தாம்புகளை
விரல் மறைவுகளிலிருந்து
வெளியேற்றுபவன்

ஓவியனாக இல்லாமலிருப்பதன்
பொருட்டு
வண்ணங்களிலிருந்து
துண்டித்துக்கொள்கிறான்

எரி நெருப்பின் பொறிகளை
வழியாறுகளில் கரைப்பவன்

விறகாகுதல் பொருட்டு
எஞ்சாத சாம்பலை
நியாபகத்தில் வைத்திருக்கிறான்

வலியென்பதே
ஆறுதல்களிலிருந்துதான் தொடங்குகிறது
என்பதை
யாரிடம் சொல்லக்கூடும்

புன்னகைகளினால் நீராடுகிறவன்?

o

எறிந்த பந்தினை
நாய்க்குட்டிக்கு
தானே தேடி எடுத்துக்கொடுக்கும் சிறுமியை

புன்னகையுடன் பார்த்தபடி
பழுத்த கிழவர்கள்
தன் துணையுடன் சொல்லற்று அமர்ந்திருக்கும்
பூங்காவில்

வீழ்ந்த மரத்தின் வேரிலிருந்து
ஒரு விதை
எழுகிறது
வானம் பார்ப்பதற்காக.