வெறுப்புக்குரியவர்கள்

பழைய புகைப்படங்கள்
பிறர் நினைவுகளில்
தானாகவே
அழிந்துவிடவேண்டும் என
வேண்டிக்கொள்கிறார்கள்

பகிரப்பட்ட முத்தங்களுக்கு
மழலை அன்பு
எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்கிறது

இடைவெளிகளின் பெரும்பாதைகளில்
திரும்பிப் பார்க்கும்போது

எல்லாமும் இருக்கிறது
எதுவும் இல்லை

o

தண்ணீரில் விழும்
நிலவின் புகைப்படத்தை
அழிப்பதற்கு விரல்சுழற்றிக்கொண்டிருக்கிறான்

ஒரு சிறுவன்
இரவெல்லாம்

பிடிவேரில் ஈரமண் அற்ற
செடியை எங்காவது நடுவதற்கு
தாகத்துடன் அலைந்துகொண்டிருக்கிறான்
ஒரு சிறுவன்
பகலெல்லாம்

எல்லாருக்குமான மழை
யாருக்குமற்று
கடலில் பொழிந்துகொண்டிருக்கிறது

காலமெல்லாம்
o
திடீர் அன்பின்
பிரவாகம் கொண்டு

கைவிடப்பட்ட மிருகங்களுக்கு
நீங்கள் அளிக்கும்
ஒரு வேளை உணவு

பசி நாட்களை
நீட்டிப்பதை மட்டுமே செய்கிறது
என்பதை அறிந்திருக்கிறீர்களா?