நேற்று என் நினைவுக்குறிப்பேட்டை
மீண்டும் எடுத்தேன்

முழுக்கவும்

தற்கொலை செய்துகொண்டவர்கள்
முயற்சி செய்து தப்பித்தவர்கள்
பேசிப்பேசியே பிழைத்துக்கொண்டவர்கள்

நினைவுக்குறிப்பேட்டை
இன்றும் எடுத்தேன்

முன்பே சென்று விட்ட ரயிலுக்கு
இன்றும் காத்திருப்பவர்கள்
தவறவிட்ட ரயில் பற்றிய
காவியங்களை எழுத
முயற்சி செய்கிறவர்கள்
மறுபடியும்
அடுத்துவரும் ரயிலில்
விழக்காத்திருக்கும் ஒருவர்.

நாளை எடுத்துப்படிக்க
எப்படியாவது கண்டறிந்து எழுதிவைக்கவேண்டும்

ஏன் அவர்கள் உடல் சிதறவிரும்பினார்கள்
ஏன் அவர்கள் மின்சாரக்கம்பிகளை கடித்தார்கள்
ஏன் அவர்கள் எரிந்து பொசுங்கும் சதைகளை விட்டுச்சென்றார்கள்
ஏன் அவர்கள் போகும்போதும்
அமைதியாக
தூக்கத்தில் நீங்கிச்செல்லாமல்

விழித்திருக்கும்போது
மிச்சமிருப்பவர்களுக்கு குற்ற உணர்ச்சியை
அளிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்கள்

அந்தக்கடைசி நொடியிலும்?

o

மீண்டும் இன்று அந்த விளையாட்டைப்பார்த்தேன்
கடைசியாய் பார்த்துக்கொண்டிருந்தபோது
தொலைக்காட்சி பாதியில்
நிறுத்தப்பட்டது

என்னை உடனடியாக
அந்த அறையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்

ஆச்சி வந்து
தன் தங்கச்சங்கிலியை கழற்றி
அவளுக்குப் போட்டு
திருஷ்டி முறித்து கண்ணீர் உகுத்தார்

நான்
ஜன்னலுக்கு வெளியே நின்று
பயந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே

ஒன்றுமில்லை என புன்னகைத்து
அவள் முகம் சிவந்து
வழியனுப்பி வைத்தாள்

ஒருமுறையாவது
திரும்பிச் சென்று சொல்லவேண்டும்

பெண்ணே
எல்லாமே இனிதான் இருக்கிறது.

o

மிகுந்த தயக்கத்துடன்
கசந்த உதடுகளை
காயவிடாமல் சப்புக்கொட்டியபடி
அருந்திய
முதற்கோப்பை மது இன்னும் உள்ளிறங்காமல்
நினைவில் இருக்கிறது

மிகுபோதையின் கனவொன்றில்
அழிதேசத்தின் கடைசி
எச்சங்களுக்கு கீழே அமர்ந்தபடி
அவளை அழைத்து குரல் கேட்டு
உடனே துண்டித்து
பின் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த இரவும்

தற்கொலை எண்ணிக்கைகள்
அதிகமாக இருக்கின்றன
பெண்களின் எண்ணிக்கை
அதிகமாக இருக்கிறது
மதுவின் எதுக்களிப்பும் அதற்கு
சற்றும் குறைவில்லை

கழிப்பறையின் சுருள்காகிதத்தை
யாருமற்ற
இரவொன்றில்
தன் முழு நகங்களுடன் கிழித்துப்போடும் பூனையொன்றை

தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்

கூர்செய்யப்பட்ட நகங்களுடன் தான்
நிகழவேண்டும் சில மரணங்கள்.