இந்த ரகசிய பிசாசுகளுக்கு
பைத்தியம் பிடித்திருக்கிறது

பெயரற்ற கடிதங்களின்
வழியாக
யாரோ
எக்காலத்திற்குமான காதலென
சொல்லியிருக்கிறார்.

இதுவரை விலக்கிய எல்லாருக்காகவும்
ஒரு நிமிட மெளன அஞ்சலி
இன்று முதல் விலக்கப்போகும்
உனக்காக
மேலும் ஒரு நிமிடம்

நினைவிலிருக்கும் எல்லாருக்காகவும்
ஒவ்வொரு நிமிடங்கள்

ரகசிய பிசாசுகளுக்கு
பைத்தியம் பிடித்திருக்கிறது
அவை திசைகளற்ற
நிலத்தில் பயணத்திற்கு ஆயத்தம் கொள்கின்றன.

 

o

நகைச்சுவை நடிகனின்
துயரங்களுக்குக்
கண்ணீர் சிந்தும்
அதே மனதுடன்

உணவிற்கான
ஆட்டை
கருணை எனும் சொல் கொஞ்சமும்
நினைவுக்கு வராமல்
அறுக்க முடிந்திருக்கிறது.

நீரூற்றும் அதே
கரங்களால்தான்
மலர்களைப் பறிக்கிறேன்

வேரும் கிளையும் ஒன்றல்ல
என்கிறார் பிதா
விழுதை வேரென
அஞ்சுவது குமாரனின் தவறல்ல

ஆனாலும்
மரம் கொஞ்சம் கருணையோடிருக்கலாம்.

o

மரண விளையாட்டில்
பல படிக்கட்டுகள் இருக்கிறது
என்று படித்திருக்கிறீர்கள்

கடைசியாக அவர்கள் ஒரு புகைப்படத்துடன்
இந்த இன்னலிலிருந்து
விடைபெற்றுக்கொள்கிறார்கள்

கொஞ்சம் கருணை காட்டுங்கள்

மரணித்துவிட்டவர்களை
நீங்கள் பரிதாபங்களின் மூலம்
கொண்டுவர முடியாது

ஆனாலும்

தற்கொலை பற்றி
பேசிக்கொண்டிருப்பவர்கள் இறைஞ்சுவது
கவனத்தை அல்ல
அன்பை

திரும்பி உங்களால் கொண்டுவர சாத்தியமுள்ள
ஒரு பாதையை.