அன்பின் ரேச்சல்,

இந்தக்கடிதம் உனக்கு எழுதுவதாக ஐந்து நிமிடங்களுக்கு முன் எந்த திட்டமும் இல்லை. ஆனாலும் உன்னை எங்காவது சந்திப்பதென்பது எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு சொல்லாக ஒரு அசைவாக ஒரு குரலாக எங்கோ தொலைவில் ஒலிக்கும் ஒரு இசைப்பாடலாக நீ எழுந்து வருகிறாய். உனக்கான கடிதங்களை காற்றில் அனுப்புகிறேன். காற்றில் எழுதப்படும் கடிதங்களுக்கு எளிய நன்மைகள் இருக்கின்றன. யாருக்கும் அனுப்பாமலேயே எல்லாரையும் போய் அடைந்துவிடுகிறது. சொற்கள் இசைப்பிரவாகமென யுகம் யுகமாய் மிதந்தலைந்து யாரோ ஒரு காதலன் யாரொ ஒரு காதலிக்கு அனுப்பக்கூடியாதாய் முடிவற்று பயணத்திலிருக்கிறது. நான் உன்னிடம் சொல்லமுடியாத சொற்கள், என்னைப்போல் ஒருவன் உன்னைப்போல் ஒருத்தியிடம் எதொ ஒரு மூலையில் சொல்லிக்கொண்டிருக்கக்கூடும் சாத்தியங்களை நான் ஏன் தவிர்க்கவேண்டும்?

வலிந்து திணித்துக்கொண்ட, வேலைகளுக்கு நடுவில் , நீண்ட வேகத்துடன் ஏற்றுக்கொண்ட பணிச்சுமைகளுக்கு நடுவில் நீ நினைவுக்கு வருவதென்பது ஒரு கனவிலிருந்து திடீரென்று விழிப்பதைப்போல.யாருமற்ற ஏகாந்தத்தில் ஒரு பழைய கனவை மீண்டும் நினைத்துக்கொள்வதைப்போல. எல்லாம் மங்கலாக நினைவிருக்கும் கனவு. மீண்டும் சென்று அமிழ்ந்துவிட ஏங்கும் அழகிய கனவு. அதன் ஆகச்சிறு துண்டங்கள் நினைவில் மிச்சமிருக்கின்றன. அங்கே நாம் திரும்பிப்போக முடியாதென்பது முகத்தில் அறையும் பனிக்காற்றாய் இருக்கிறது. பெரும் வீட்டின் தனிமையைத் தணிக்கும் சிறு தென்றல். தொலை நகரத்தின் தனியறையில் உன்னை நினைத்தபடி அல்லது எதையும் நினைக்காதபடி நிலைத்திருக்கிறேன். யாரும் வராத இடங்களில் என் முகமூடிகளைக் கழற்றிவிட்டு கவனிக்கும் கண்களற்ற இருளின் நிர்வாண ஏகாந்தம்.

உனக்கான சில அறைகளில் உன்னை மட்டுமே அடையாளமாக உருவாக்கி வைத்திருக்கிறேன். எனது இசைக்கருவிகளை அடுக்கி திரும்பும் இடமெல்லாம் தெரியும் படி உன் புகைப்படங்களை ஒட்டி வைத்திருக்கிறேன். ஆங்காங்கே சில மஞ்சள் மலர்களையும். உன் நினைவூட்டும் ஒவ்வொன்றையும் அடுக்கி அந்த அறையை நிறைத்திருக்கிறேன். அதற்கும் எனது மணமற்ற எரியும் அறைக்குமான இடைவெளி ஒரு கதவு. அந்தக்கதவினை வெறித்தபடியே இந்தக்கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். நிக்கோடின் மணக்கும் அறையிலிருந்து மஞ்சள் மலர்கள் பூத்திருக்கும் அறைக்கு ஒரு கதவு தூரம் இருக்கிறது.

இன்று மீண்டும் அந்த மழை. இரெவெல்லாம் நாம் பார்த்து அமர்ந்திருந்த மழை. இரு வேறு இடங்களிலிருந்து இருவேறு மரங்களின் சொட்டும் நீர்த்துளிகளை ஒருவருக்கொருவர் விவரித்துக்கொண்டு இணைந்திருந்த முடிவற்ற பெரும் இரவின் மழை. கனவில் சிறுதுளிகளாய் மழையை நிலத்திற்கு அனுப்பும் சரக்கொன்றை மர இலைகள் . இரவில் அசையும் தென்றலின் ஒவ்வொரு சிலிர்ப்பிலும் உடலசைந்து நீ என்றோ பற்றிக்கொண்ட கைகளை நானே அணைத்துக்கொண்டேன். ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் பாடல் எங்கோ தொலைவில் ஒலிக்க மெல்ல தூறல் இறங்கி மஞ்சள் ஒளிவழி வழிந்து உடல் தொட்ட கணம் உனக்கு நினைவிருக்கிறதா. அதே கணம். அதே பாடல். அதே இரவு. ஆனால் எல்லாமும் கனவாக மட்டுமே எஞ்சியிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் அகம் உன் அருகிருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் தெளிவாக கனவென்று உணர்கிறது ரேச்சல். மழை விழுகிறது. அந்த இசை. அந்த மழை. அகம் தெளிவாக உணர்கிறது நான் கனவில் படுக்கையில் இருக்கிறேன். உன்னை விட்டு சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில். மொழி மறந்த தீவில். நண்பர்களோ உறவுகளோ அறிந்தவர்களோ உருவாகி விடாத உருவாக்கிக்கொள்ள விரும்பாத தீவிலிருக்கிறேன். வெளியே நிச்சயம் மழை பொழிகிறது. காயாத ஆடைகளை மாலை உலர்த்தியிருந்தேன். என் மின்சாரக்கருவிகள், மடிக்கணினி, அலைபேசி அத்தனையும் நிஜமழை நனைத்துவிடும் தொலைவில் இருக்கிறதென அகம் சொல்கிறது. எழவேண்டும். கனவிலிருந்து. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் பொருட்டு. ஆனாலும் எது ஒழுங்கென்ற கேள்வி எழுகிறது உடனேயே.

இந்தக்கனவிலிருந்து எழுந்தபிறகு மீண்டும் இங்கே திரும்புவதற்கான எந்த வழிகளும் இல்லை. உன் வரியிட்ட விரல் நகங்களின் அழுத்தம் படுக்கையில் தவறவிட்ட எதோ ஒரு எழுதுகோலின் முனையாக இருக்குமென்கிறது அகம். தூரத்தில் ஒலிக்கும் இசை அணைக்க மறந்துவிட்ட ஒரு நினைவுட்டியாக இருக்கக்கூடும். பின்னந்தலையில் விழும் மழைத்துளி நிஜம். பற்றியிருக்கும் உன் விரல்கள் கனவு. நான் கனவில்தான் இருக்க விரும்புகிறேன் ரேச்சல். உன் விரல் பற்றியிருக்கும் இரவு. பற்றுவதற்கு விரல்கள் இருக்கும் இரவு. மழை வெறித்தபின் அழைத்து சின்ன தயக்கத்திற்குப்பிறகு பாடல்கள் பாடும் பெண்ணில் அலைபேசி எண்களில் நான் தடைசெய்யப்பட்டிருக்காத கனவில் இருக்கவிரும்புகிறேன்.

எளிய மெளனத்தின் ரகசிய அசைவுகளின் வழி ஒரு சொல்லை உனக்கு அனுப்புகிறேன். நீ அறிந்திருந்தாய். இடக்கையில் உடல் இறுக்கி மெல்ல சாய்ந்து கொள்கிறாய். நான் அசையாமல் இருக்கிறேன். அத்தனை ஒலிகளுக்கு நடுவில் நீ கண் மூடி அசையாமல் ஆழத்திற்கு செல்கிறாய். என கனவில் உன் கனவினை அறிய முடிகிறதா என அறியேன். மழை பொழிந்துகொண்டிருக்கிறது. கனவின் ஈரம் உன் கண்களில் வழியத்தொடங்கியிருந்தது. நான் மெல்ல துடைக்க எத்தனிக்கிறேன்.

அங்கே நான் அசைந்து எழுந்தேன். உறக்கத்திலிருந்து. ஒரு மிருகம் துரத்தி ஓடத்தொடங்குகிறவன் போலே அந்த கனவிலிருந்து பதறி எழுந்தேன். கனவுகளிலும் உனக்கான கண்ணீரை மட்டும்தான் என்னால் தரமுடிகிறதா? என்மீது எனக்கே வெறுப்பாக இருந்த இரவிலிருந்து வெளிவந்து மழை நனைத்திருந்த ஆடைகளை மடித்து வைத்தேன். மழைவாசம் எழாத சிமெண்ட் தெருக்களில் அணிந்து திரியும் என் ஆடைகள். சில ஆடைகளில் உன் வாசம். உனது உப்பு கலந்த பால் வாசம்.

நம் நகரத்திலிருந்து இந்த நகரத்திற்கு நான் நகர்ந்த கடைசி நாளின் நினைவுகள் உன்னிடம் மிச்சமிருக்கிறதா ரேச்சல்? அந்த விமான நிலையத்தின் ஆள் நடமாட்டமில்லாத படிக்கட்டுகளில் கைபிடித்து அமர்ந்திருந்த மாலை. சொல்லற்ற மெளனத்தில் இருவரும் உள்ளாக உறைந்து முதற்சொல்லுக்கு காத்திருந்த முன்னிரவு. இங்கே இந்த நிமிடத்தில் நமது பாதைகள் பிரிகின்றன இங்கிருந்து இனி சந்திக்கும் நாட்களில் நாமென்ற எதுவுமில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து கண்மூடி அமந்திருந்த அந்த மஞ்சள் ஒளி வீசிய மாலை. அங்கே நம் நினைவுகள் இன்னும் இருக்கக்கூடும்

இன்று தோன்றுகிறது மனிதர்கள் வாசனையின் பழக்கம் மறக்காத மிருகங்கள் என்று. உன் கைகளின் மிருது இன்று நினைவில் இல்லை. உன் குரலை நானும் என் குரலை நீயும் பிரதி செய்ய முடிந்த காலத்திலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறோம். இன்று உன் குரல் நினைவின் அடுக்குகளில் இல்லை. தனித்த இரவின் போதைக்காலங்களில் வெவ்வேறு குரல்களில் உன்னைப் பொருத்த முயற்சி செய்திருக்கிறேன். எதுவும் நீயில்லை எனத்தெரிகிறது. ஆனால் எது நீயெனத் தெரியாமல்தான் இருக்கிறேன். நீயும் என் குரலினை மறந்திருக்கக்கூடும். இனி அழைக்காதே என்று வேண்டிக்கொண்ட உனது கடைசி குரல் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருந்தது. பிறகு அதை மறப்பதற்காகவே விலகி விலகி இன்று மீட்சியின் பாதைகளிலிருந்து ஒளிந்து மறைந்தே விட்டது உன் குரல்.

சீசா ஆட்டத்தை ஒத்த எனது சோர்ந்த நடையை நீ பிரதி செய்த அந்த பொழுதுபோக்குப்பூங்கா நினைவிலிருக்கிறதா? இன்று மீண்டும் அது நினைவுக்கு வந்தது. அந்த நிமிடத்தில் ஒரு அசையும் பருத்த பூனையினை ஒத்த உன் நடையினை நான் பிரதி செய்ய விரும்பினேன். விளையாட்டென எண்ணிச் சிரித்த நண்பர்களுக்கு முன்னதாக நீ அதைச் செய்து காட்டியபோது என்னை எத்தனை தூரம் நீ அறிந்திருக்கிறாய் என்பதைத்தான் முதலில் அறிந்தேன். அதையே நானும் செய்து காட்டி உன்னை எனக்கு எவ்வளவு தெரியும் என்பதையும் காட்டவிரும்பினேன். ஆனால் ஆணுக்கு அந்த சுதந்திரம் இருப்பதாக அன்றும் இன்றும் நான் நினைக்கவில்லை.

ஆண்கள் பெண்களை பிரதி செய்ய்ய விரும்பும்போதே அது கீழ்மையின் முதற் படிக்கட்டிற்குச் சென்றுவிடுகிறது. முற்றிலும் அவமானகரமாக எண்ணுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் அது கொண்டிருக்கிறது. அதே அசைவுகளை அத்தனை அழகாகச் செய்யும் பெண்களை பிரதியெடுக்க முயற்சிக்கும்போது அது ஆபாசமாக இருக்கிறது. அகங்காரங்களைச் சீண்டுவதாக. ஆகவே உன்னைப்பிரதிசெய்வதிலிருந்து விலகி நின்றேன். என்னை மறுவுருவாக்கி நீ நடிக்கும் நாடகத்தை யாரோ போல் பார்த்து நின்றேன். பதில் சொல்லாத தூரத்தில் நான் நிற்பது குறித்த வெறுப்பு உன்னிடம் உருவாகியிருக்குமென இன்று என்னால் நினைத்துப்பார்க்கமுடிகிறது ரேச்சல். ஆனாலும் காலம் கடந்துவிட்டது.

நீ என் தோள் பற்றி நடந்து வந்த சில நிமிடங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிப்பார்க்கிறேன். எதொ ஒரு கணத்தில் விளையாட்டாக யானையில் தும்பிக்கை போல உன் தலையில் கைவைத்தபோது நீ பதறி என்னை விலக்கிய நிமிடத்தையும். ஏன் என மீட்டிப்பார்க்கிறேன். நீ என்னைப் பற்றிக்கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை. நான் உன்னைப்பற்றிக்கொள்வதில் உனக்கு அசூயை இருந்தது. தொடுகை ஒரு நாடகம். நம் நம்பிக்கைகளைத் தெரிவிக்கும் நாடகம். தொடுகை ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. நீ அதை அளித்தாய். நான் அதை அளிக்கவிடாமல் தடுத்தாய். எல்லாம் ஏற்கனவே நீ அறிந்திருந்தாய் என்று இன்று தோன்றுகிறது.

சொற்களின் வழி நம்பிக்கையை உருவாக்க விரும்பியவன் நான். சொற்களன்றி மெளனத்தின் மூலம் உருவாக்குவதின் ஆழத்தை நீ அறிந்திருந்தாய். மெளனத்தால் உருவானவற்றைக் கடந்து சொல்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறேன். சொற்களின் மூலம் உருவாக்கியவற்றை எளிதாக கடந்து வெகுதூரம் சென்றுவிட்டாய். நீ நெருங்கியது விலகுவதற்கான பாதைகளை உருவாக்கியபடிதானா? உன் எல்லா அசைவுகளுக்குப் பின்னாலும் எந்தக்கணத்திலும் என்னைவிட்டு தடயமின்று விலக வாய்ப்பிருக்கவேண்டும் என்பதுதான் உன் நோக்கமாக இருந்ததா?

உன் விலகுதலுக்கு நீ சொன்ன காரணங்கள் அழகாக இருந்தன. சொல்லாத காரணங்களை ஊகித்தறிய முடிந்தாலும் உன்னிடம் சண்டையிட நான் விரும்பவில்லை. என் விலகுதலுக்கு நான் சொன்ன காரணங்கள் அபத்தமானவை என்று எனக்கும் தெரியும். சொல்லாத காரணங்களை நான் அறிந்தது போலவே நீயும் அறிந்திருப்பாய் என உறுதியாக எனக்குத்தெரியும். நாடகங்களால் வாழ்ந்து நாடகங்களாகவே விலகிவிட்டோம். எல்லாம் இதற்குத்தானா? அனைத்து நாடகங்களிலும் நாம் இருந்தோம். எளிய பாவனைகளில் ஒருவருக்கொருவர் பெருங்கூட்டத்தின் நடுவில் நமக்குள் பரிமாறிக்கொண்ட கண்ணசைவில் நாம் இருந்தோம்.

உனக்கு நினைவிருக்கிறதா. அத்தனை பெரிய உணவுக்கூடத்தில் அத்தனை நண்பர்களையும் காணாதவன் போல அலைந்து திரிந்து உன்னைக் கண்டறிந்து உன் அருகே வந்தமர்வேன். உன்னை முதல் முறை பார்ப்பவன் போல தற்செயலாக உன் இடத்திற்கு வந்துவிட்டவன் போன்ற ஒரு பாவனை. எனக்குத் தெரியும். அந்த நேரத்தில்தான் நீ உணவிற்கு வருவாய் என எனத்தெரியும். உன் வழக்கமான இடம் தெரியும். அங்கே உன் அருகிருக்கும் நாற்காலியில் உன் கைப்பை வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரியும். நான் வரும் வரை கைப்பையை மறந்துவிட்டவள் போல, யாரோ ஒருவர் வைத்துவிட்டது போனதுபோல நீ நடித்து அமர்ந்திருப்பாய் என எனக்குத் தெரியும். உனக்கும் அந்த கைப்பையின் நாற்காலிக்கும் இடையே பெரும் இடைவெளியிருக்கும் எனத் தெரியும்.

பிறர் ஒருவர் வந்து ஒதுக்கும்போதுதான் அந்த கைப்பை உன்னுடையது எனக்காட்டிக்கொள்வாய் எனத்தெரியும். தானே நகர்த்தாமல் யாருடையது என்று கேட்பவர்களுக்கு யாரோ வைத்துப்போன கைப்பை எந்த நேரத்திலும் அவர்கள் வருவார்கள் என்று நாடகம் ஒன்றை நீ நிகழ்த்தியிருப்பாய். நான் வரும்போது அதற்காக காத்திருந்த கணங்களைக் காட்டிக்கொள்ளாமல் அந்தக்கைப்பையை நீக்கி எனக்கு இடமளிப்பாய். எந்த நாடகமும் அறியாத சிறுபிள்ளை போல உன்னருகே அமர்ந்துகொள்வேன். மெல்ல வேலையைப்பற்றி உன் வீட்டைப்பற்றி ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக குறுஞ்செய்தியில் விட்ட இடத்திலிருந்து நம் உரையாடல்கள் தொடரும். ஒவ்வொரு முறை அலுவலகத்தின் உணவு இருக்கைகளில் அமர நேரும்போதும் அந்த நாட்களைத்தான் நினைத்துக்கொள்கிறேன் ரேச்சல்.

ஒரு முறை இந்த மாநகரத்தில் உன்னைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட மாநகரத்தில் அலுவலக உணவுக்கூட இருக்கையில் யாரோ மறந்து விட்டுப்போன ஒரு மஞ்சள் மலர் இருந்தது ரேச்சல். அன்று உணவு இறங்கவில்லை. அதை அசைக்கவும் மனமின்றி அங்கேயே அமர்ந்திருந்தேன். யாருக்கோ காத்திருப்பவன் போல. யாரோ வந்த உடன் உணவுப்பையைத் திறக்க இருப்பவன் போல அங்கேயே அமர்ந்திருந்தேன். யாரும் அருகில் வரவில்லை. அடுத்த இருக்கையை யாரும் நிறைக்க நினைக்கவில்லை. அவர்களும் எண்ணிக்கொண்டிருக்கக்கூடும் யாரோ அந்த இருக்கைக்கு வரப்போகிறார்கள் என்று. ஆனால் எனக்குத் தெரியும் எத்தனை தூரம் எத்தனை வருடங்கள் காத்திருந்தாலும் அந்த இருக்கைக்கு வரக்கூடாதென்ற உறுதி உனக்கு இருக்கிறதென எனக்குத் தெரியும். ஆனாலும் இறுதியாக ஒரு நாள் மஞ்சள் மலர் உதிரும் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வாய்ப்பை நான் ஏன் தவறவிடவேண்டும்?

இந்த நகரத்தில் தேவாலயங்கள் மிகக்குறைவு ரேச்சல். புத்தவிகாரைகளின் மணியோசை கேட்டுக்கொண்டேயிருக்கிறது. மணியோசை எழும்போதெல்லாம் விரல்களால் சிலுவை அணிந்துகொள்ளும் உனது பழக்கத்தை அனிச்சையாக கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.பிதாவே எனை ஏன் கைவீட்டிர் என்றொரு வாசகம் ஒவ்வொரு முறையும் நினைவுக்கு வருகிறது.அதைத்தவிர நீ சொன்ன கதைகளிலிருந்து எதையுமே நான் எடுத்துக்கொள்ளவில்லை. நீ இருக்கும்போதும். அதன் காரணங்கள் இன்று துலங்கிவருகிறது. எப்பொழுதாவது எங்காவது தொலைதூரப்பயணங்களின் நடுவில் நிலவரைபடங்களில் சிலுவையைச் சந்திக்கும்போது உடைந்து போகிறேன். என் பாதைகளை மாற்றிக்கொண்டு வேறு திசை சென்று சுற்றி என் இடங்களைச் சென்றடைகிறேன். அல்லது எனது பயணங்களை ரத்து செய்து கிளம்பிய இடத்திற்கு திரும்பிவருகிறேன். உன் காலத்திற்கு முன் நான் கிளம்பிய இடத்திற்கு திரும்பி வர விரும்பிக்கொள்கிறேன். ஆனாலும் வீடடையும்போது உன்னையே திரும்பிவந்து அடைந்தாக உணர்கிறேன். மஞ்சள் மலர் காற்றில் அசையும் அறையினை சுத்தம் செய்கிறேன். இசைக்கருவிகளை அருகிலுள்ள வீட்டிலுள்ளவர்கள் வந்து வேண்டிக்கொள்ளும்வரை உரக்க இசைக்கிறேன். உள்ளே அலறும் கூக்குரலை உச்சஒலியின் இசைக்கருவிகள் சமன் செய்யமுடியுமென்பதை நீ அறிவாயா ரேச்சல்?

நீ விலகியதில் பெரிதாய் எனக்கு வருத்தமில்லை ரேச்சல். உண்மையில் நீ விலகிவிட்டதாகவே இன்னும் நான் உணரத்தொடங்கவில்லை. இந்த தெருவில் மழைபெய்து ஓய்ந்தபிறகு நிகோடின் மணக்க நான் நடந்துகொண்டிருக்கிறேன். அந்த வாசம் கண்டறிந்து எந்த நிமிடமும் நீ அருகிருந்து விரல் நீ தட்டிவிடுவாய் எனத் தோன்றுகிறது. காதணிபாடிகளில் பாடல் ஒலிக்க நடக்கும்போது இப்போதும் ஒரு பக்கத்தை அணிந்துகொள்வதில்லை. உன் ஒருபக்கத்தில் அவை இணைந்திருக்கும் என்ற நினைவு மிச்சமிருக்கிறது. பிடிக்காத பாடல் வரும்போது அதைக்கேட்காதவன் போல காத்திருக்கிறேன். நீ அறிந்து அதை எனை கேட்காமலேயே பாடலை மாற்றிய நாட்கள் நினைவில் இருக்கின்றன. தேங்கியிருக்கும் மழைச்சகதிகளைத் தாண்டும்போது உன் தோள் பதிந்து குதிப்பவன் போல ஒரு கையை நீட்டிக்கொள்கிறேன். பிறகு யாரோ தொடர்ந்து வருகிறது போல உனக்குக் கை நீட்டி பிறகுதான் மடித்துக்கொள்கிறேன். பார்க்கிறவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் எனது ஒவ்வொரு அசைவிற்குப்பின்னாலும் உனது எதோ ஒரு நினைவு இருக்கிறது.

இன்றைக்கெல்லாம் நண்பர்களுக்கு நடுவில் நான் அறிவுரை கூறும் அளவு உறவுகளில் வல்லவன். தனித்து அமர்ந்திருக்கும் யாரோ ஒருவனுக்கு ஆறுதல் சொல்லும் அலைபேசி எண்ணாக என் எண் நினைவுக்கு வருகிறது தற்கொலைக்கடிதங்கள் எழுத விரும்பும்போதெல்லாம் எனது பழைய கவிதையொன்றை மீண்டும் படிக்கும் நண்பரொருவனை எனக்குத் தெரியும். பேச யாருமில்லாதவர்களுக்கு என்னுடன் பேச விருப்பம் இருக்கிறது. அவர்களின் வலிகளைப் பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு ஆசுவாசம் கிடைக்கிறது. இவற்றையெல்லாம் நான் கடந்துவிட்டேன் என்றொரு முகமூடியை நான் அணிந்திருக்கிறேன். அதைக் கழற்றும் உத்தேசமில்லை. உண்மையில் நீ இருந்திருந்தால் இந்த முகமூடியைத் தாண்டி என்னை அறிந்திருக்கக்கூடும் ரேச்சல். உன்னைத் தவிர வேறு யாரையும் முகமூடியின்றி சந்திக்கவும் நான் விரும்பவில்லை. உனக்கான இந்தக்கடிதம், இதற்கு முன்னதாக எழுதப்பட்ட நூற்றுச் சொச்சம் கடிதங்கள், இனி எழுதப்போகும் பல்லாயிரம் கடிதங்கள் உன்னை வந்தடையுமா என்ற எந்தச் சந்தேகமும் இல்லை. நீ எனக்கு சொற்களை பொதுவில் வைக்கும் தைரியத்தை உருவாக்கியவள். உனக்கான சொற்களையும் நீ என்ற சொல்லிலேயே வைப்பதன்றி வேறெந்த நோக்கமும் இல்லை ரேச்சல்.

நீ என் வாழ்வின் தேவாலய மணியோசை. நீ என் பாதையின் மாறிச்செல்லவிரும்பும் ஒரு சிலுவை. நீ என் பயணங்களை ரத்துசெய்யத் தூண்டும் ஒரு அச்சம். நீ என் கனவில் ஒலிக்கும் நினைவூட்டிப் பாடலின் இசை. நீ என் அசைவுகளை பிரதிசெய்யும் ஒரு நிழல். நீ எனை அச்சம் கொள்ளத்தூண்டும் ஒரு நாடகம். நீ என் வாழ்வினைப் புரட்டி அடித்த ஒரு பெருமழை. நீ சமனற்று என் சூழலை அதிரச்செய்யும் ஒரு பேரிசை முழக்கம். நீ என் தற்கொலை விளையாட்டின் இறுதி நிலை.

நீங்கா அன்புடன்
ஷிவா

 

[[வாசகசாலை இதழில் வெளியானது]]