ஆம்
என் காமம் தன் வழிதவறி
தன் கடைசி மூச்சிருக்கும்வரை
திசையற்ற பாலைவனத்தில்
இரவுகளை கழிக்கும்படி
நிர்பந்திக்கப்பட்டிருகிறது

ஆம்
என் காலங்கள்
சாத்தான்களால் ஆசீர்வதிக்கப்பட்ட
கறி உண்ணும் நெப்பந்தஸ் பூக்களின்
மணமற்ற நிழல்களைக் கொண்டிருக்கிறது

ஆம்
இந்த வானம் தன் நட்சத்திரங்களை
எரித்து
பூமியின் மீது எறிந்துகொண்டிருக்கிறதுதான்

இல்லை
கவலைப்படாதீர்கள்
எரியும் நட்சத்திரங்கள் வீழும்போது
நீங்கள் கொள்ளும் பிரார்த்தனைகள்
நிச்சயம் நிறைவேற்றப்படும்

கொஞ்சம் டைம் கொடுங்கள்.

o

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு
உள்ளது
எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்
முல்லைச்சிரிப்பாலே
என் மூர்க்கந்தடுத்திடுவாய்

இவர்கள் இறக்கிறார்கள்

நான்
காத்திருக்குறேன்

இப்படி எதாவது சொற்களுக்கு
இப்படி எதாவது மரணத்திற்கு
o

அவள் அன்று சொன்னாள்
நீச்சல் தெரியாத என்னிடம்

நான் சொன்னா வரமாட்டியா

நான் நடக்கத்தொடங்குகிறேன் நீரில்
ஆழத்தை நோக்கி

அவள் சென்று விடுகிறாள்

இன்னும் ஆழத்தை நோக்கி நடக்கிறேன்

அவள் மறைந்துவிட்டாள்

இன்னும் ஆழத்தை நோக்கி நடக்கிறேன்

அவள் இல்லை

இன்னும் ஆழத்தை நோக்கி நடக்கிறேன்

எனக்கு
நினைவிருக்கிறது.
ஆம் இது என் கடைசி நடை.