பந்தயக்குதிரைகளின் தடங்களுக்கு
தவறி
உள் நுழைந்துவிட்ட
மேய்ச்சல் குதிரைகளின் கண்கொண்டவர்களை
நாம் அறிந்திருக்கிறோம்

தொலைவில்
முடிவற்று சுழலும் காற்று

கொஞ்சம் மழையை
நிறைய அனலை
இந்த ஜன்னலில்
வைத்துவிட்டுப்போகிறது

வெண்சங்கில் காது வைத்துக் கேட்கும்
சிறுவன் அப்போது சொல்வான்

கடல் இங்கே இருக்கிறதென்று.

இப்போதும் அங்கேதான் இருக்கிறதா?

o

அன்றைக்கெல்லாம்

ரெண்டெட்டு நடந்தால்
வயல் வந்துவிடும்
ரெண்டெட்டு நடந்தால்
கிணறு வந்துவிடும்
ரெண்டு படி ஏறினால்
தென்னைக்கீற்றுகளை பாய்ந்துசாடி
தொட்டுவிட்டு
நீர் இறைப்பானின் குழாய்களைப் பிடித்துச் சென்று
மண் எடுத்து வரலாம்

நேற்றைக்கெல்லாம்

அடுத்த பேருந்து நிறுத்தலிலிருந்து
கொஞ்சம் எட்டி நடந்தால்
நதி வந்துவிடும்
கொஞ்சம் எட்டி நடந்தால்
அருவி விழுந்துகொண்டிருக்கும்
கொஞ்சம் எட்டி நடந்தால்
பளபளக்கும் கூழாங்கற்களை
எடுத்து வரலாம்

காலையில்

சில ரெயில் நிறுத்தங்களுக்கப்பால்
கடல் இருக்கிறது
சில பாலங்களுக்கு அப்பால்
தீவு போல
மணல் திட்டு இருக்கிறது
சில பாதைகளுக்கு அப்பால்
வழுக்குப்பாறைகளில் தெத்தி அமர்ந்து
காலில் கடல்பட பேசிக்கொண்டிருக்கலாம்
தனியாக

இரவு

மழை வரும்.

o

அம்மலர்
தன் ஈரமற்ற நிழல்மரத்து
மறைவிலிருந்து
தொலைவில்
பார்த்திருக்கிறது அடித்துப்பெய்யும் மழையை

புரட்டிச்செல்லும்
பெருங்காட்டாற்றை

மெல்ல அசைந்து செல்லும்
எறும்புப்புற்றின் கரைகளை
ஒட்டிய வாய்க்காலை

எங்கோ கிளையில் மறைவில்
தங்கிவிட்ட ஒரு துளியை

வேறேதோ கிளையை அசைக்கும்போது

வழிந்துவரச் செய்கிறாள் ஒரு சிறுமி

ஒரு கணம்
ஒரே கணம்
அத்துளி
மலர் மீது விழுகிறது
சிலிர்க்கும் குளிர்

மறுகணம்
மழைத்துளி
இறங்கத்தொடங்கிவிடுகிறது

மலர் விட்டு
மரம் விட்டு
மண் விட்டு