பிசாசே என்றொரு குறுஞ்செய்தி

அழிப்பதற்கு முன்னால்
இன்னொரு முறை
பார்த்துக்கொள்கிறேன்

என் மடி பிசாசே
என்றவள் சொன்னாள்

தற்கொலை இரவே யாருமின்றி இருக்கிறேன்
என்றெழுதியிருக்கிறேன் அன்றுதான்

பேரமைதியின் காலங்கள் கடந்து
மீண்டும் புதியவர்களாக
மாறியிருக்கும் நாளில்

குறுஞ்செய்தியின் ஒலி
மீண்டும்
ஒருமுறை அதிர்கிறது
கடைசியாக

o

பிசாசு பீடித்தவனை
அவளிடத்து கொண்டு வந்து
சொஸ்தமாக்குங்கள் மாதாவே என்றார்கள்

அன்று அவனை
அவள் அழைத்துச் சென்று
சிறிது நேரம் சிரிக்கவைத்து
திருப்பி அனுப்பினாள்

அவன் திரும்பிச்சென்று
அதே சிரிப்பை
பலமுறை செய்ய முயற்சித்து
தோற்றுப்போய்
அவளிடத்தே வருவதற்கான பாதையைத் தேடிச்சென்று
தொலைந்து போனான்

அவனைப் பார்த்தவர்கள்
அவளிடத்தே அனுப்பி வையுங்கள்
என்று

தேவன்
தன் தொடர்புகளின் வழியாக
நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பணித்தார்

அங்கேதான்
மூன்றாவது பக்கம் பத்தாவது பகுதி.

o

உம் உடுக்கையொலி
அதிரும் பெருங்காடு பிசாசே

உம் கால்பாவா நிலங்களில்
விழுதுகளுடன் வளர் மரம் பிசாசே

உம் ஞாபங்களில் நிலம் மிதக்கும்
பெருங்கடல்கள் பிசாசே

உம் கொலைகளில் காத்திருக்கும்
கழுகுப்பார்வை பிசாசே

உம் தற்கொலைகளின்
எழுதப்படாத இறுதிக்கடிதம்
பிசாசே.