எந்தத்தயக்கமும் இன்றி உறையைப் பிரித்து சீவாளியை நாலு முறை உதறி ஊதினார். அத்தனை பேரும் குடிப்பதை ஒரு நொடி நிறுத்தி பிறகு தொடர்ந்ததைப்போல் தோன்றியது. பாதிபேர் திரும்பி எங்கள் இருவரையும் பார்த்தனர். நான் என்ன செய்வதெனத் தெரியாமல் மலங்க முழித்தேன். அவர் சீவாளியை பொருத்தி வாசிக்க ஆரம்பித்தார். நாலா புறங்களிலிருந்தும் கெட்டவார்த்தைகள் வந்து விழுந்தன. நான் அவரைத் தடுக்க விரும்பி முடியாமல் யாரையோ யாரோ திட்டுகிறார்கள் போல அமர்ந்திருந்தேன். பணியாள் அல்லது மேலாளர் எந்த நேரத்திலும் வந்து எங்களை வெளியேறச் சொல்லலாம் என இருந்த கடைசி குவளையை வேகமாக குடிக்க ஆரம்பித்தேன்.

அவர் கண்களை மூடி ஆதுரமாக முழு மூச்செடுத்து வாசிக்கத் தொடங்கினார். நேர் எதிரில் அமர்ந்திருந்தவன் முகத்திற்கு நேராக நாதஸ்வரத்தின் விரிந்த வாயினை நீட்டி தனது முகத்தை மறைத்துக்கொண்டபடி எதைப்பற்றியும் கவலைப்படாதவர் போல அழுத்தி வாசிக்கத்தொடங்கினார். மூன்று நட்சத்திர ஓட்டலின் பார் தனது மெல்லிசையை இழந்து அவரின் மூச்சுக்காற்றின் நாதஸ்வர இசையால் நிறைந்து வழிந்தோடியது.

ஆதூரமாய் வாசித்து முடித்து திரும்பி எப்படி என்பது போல் என்னைபார்த்தார். தூண்களுக்கு மறுபுறம் இருந்த மேசையிலிருந்து யாரோ சிலர் கைதட்டினார்கள். பின்பக்கம் திரும்பி அவர்களைப் பார்க்க முயற்சி செய்தார். யாரும் தெரியாததால் தூணுக்கு தலைவணங்கினார்.

“குடிச்சா நம்மாள்களுக்கு ரசனை கொப்பளிக்குது என்ன, இது என்ன ராகம்னு தெரியுதா”

மேசையிலிருந்த தட்டிலிருந்து வெள்ளரித்துண்டுகளில் ஒன்றை எடுத்து தட்டில் ஒட்டியிருந்த மிளகுத்தூளில் அழுந்தத்தேய்த்து வாயில் போட்டுக்கொண்டார்.

“தெரியலீங்க, இசையெல்லாம் தெரியாது. பாட்டுக்கேக்குறதோட சரி”

“ஹ்ம். எங்கையாது கேட்ருக்கியளா”

“கந்தசஷ்டி கவசம் மாதிரி இருக்கு. ஒரு கமல் படத்துல ஸ்ரீதேவி வீணை வாசிக்குமே”

“எளையராசா போடாத ராகமே இல்ல என்னா”

“ஓ”

“எங்கய்யா குடுத்த இசை. படிக்கவிடாம ஜால்ரா தட்ட இடுப்புல துண்டக்கட்டி நல்ல நீளமா பட்டையப்போட்டு கூட்டிப்போய்ருவாரு எல்லா எடத்துக்கும். அப்ப என்னவோ பள்ளிக்கூடக் கண்டத்துல இருந்து தப்பிச்சு சந்தோசமா இருக்கதா ஒரு நினைப்பு இருந்துச்சு. அப்புறம் மேளம் கத்துக்கச் சொன்னாரு சொல்லிக்குடுத்தவரு வீட்ல கைவச்சு ரசாபாசமாயிருச்சு”

திடுக்கிட்டு விழித்தேன். கையை நீட்டி அடுத்த கிளாஸ் கொண்டுவரும்படி பணித்தேன். அவர் பேசாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.

“கைன்னா…”

“திருடிடேட்டேன்னு நினைச்சீங்களா. காதல். அந்தவயசுல மட்டுமே வர்ற தெய்வீகக்காதல். அய்யர்குடுத்த குங்குமத்த கோயில் தூண்ல வச்சு அத அவ எடுத்துகிட்டா கிளுகிளுப்பு அடையுற அளவுக்கு தெய்வீகக்காதல். ”

“ம்ம்.”

“அப்புறம் வெளிய விடக்கூடாதுன்னு அவரே கத்துக்குடுத்தாரு. காலைல கோழிகூவ மொட்டை மாடில நாதத்த வாய்ல வச்சுட்டு சாதகம். நெஞ்செல்லாம் அடச்சுப்போகுன். அப்புறம் பட்டைய நீட்டமா அடைச்சுகிட்டு கோயில் மண்டபத்தில”

“அவங்க வருவாங்களா, நீங்க குங்குமம் குடுத்த பொண்ணு”

“குங்குமம் வச்ச தூணு இருக்கும் அவ்ளோதான். அதப்பாத்துகிட்டே சாமிப்பாட்டுகளா வாசிக்கிறதுதான். ”

மேஜையைக் கண்ணால் பார்க்காமல் கையால் துழாவினார். நான் மெல்ல என் கேரட் துண்டங்கள் இருந்த தட்டை அவர் பக்கம் தள்ளினேன். அவர் பார்த்துவிட்டு ஒரு துண்டெடுத்து முன்போலவே மிளகுத்தூளில் தோய்த்து பாதிகடித்துவிட்டு தனது கிண்ணத்தை மொத்தமாய் வாயில் கவிழ்த்துக்கொண்டார். மீதி துண்டு கேரட் அதற்குபிறகு.

“அப்புறம் கோயில் வேல. கல்யாண வீடுக. அப்புறம் தனிக்கச்சேரிக. அய்யா பேரு வட்டாரத்துல பிரசித்தம்ன்றதால சுத்துவட்டாரம் எல்லாம் எங்க வீட்டுக்குத்தான் மொதல்லவரும். அப்புறம் எங்களால முடியலைன்னா நாங்க கைகாட்டுற ஆளுக்குப் போகும். அப்புறம் ரொம்ப நாள் கழிச்சுத்தான் கொழா கொண்டுவந்தாங்க. கேசட்ல பதிஞ்சத குழாய்ல மாட்டி அலறவிட்றது. அப்புறம் என்னென்னவோ பண்ணிட்டு இப்ப நல்ல ஆளுயரத்துக்கு கருகும்னு பீரோலாட்டம் கொண்டாந்து வாசல்ல வச்சிட்றாய்ங்க

“நீங்களும் கேசட் போட்ருக்கவேண்டிதான. நேர்ல வாசிக்கலைன்னாத்தான் என்ன” கேட்கும்போதே அவர் பதில் தெளிந்து வந்தது.

“மனுசங்களுக்கு மண்டபத்துல வாசிக்கிறதும் மைக்குக்குன்னு கண்ணாடி ரூம்புல வாசிக்கிறதும் ஒண்ணாச்சொல்லுங்க. மொதல்லல்ல்லாம் எங்கள மண்டபத்துல வாசிக்க உட்டு மிசின் வச்சு புடிச்சுட்டு போவாங்க. இப்ப அவங்க எடத்துக்கு கூப்டு வாசிக்கச்சொல்லிட்டு கதவ மூடிட்டு போய்றாங்க”

” ம்ம்ம்.”

“விழாவுக்கு கூப்டாப்போறது. இல்லைன்னா அப்டியே இருந்துட்றது. என்னைக்கோ வாங்கிப்போட்ட காட்டுல இருந்து குத்தக வருது. தங்குறதுக்கு கூரை அய்யா கட்டிவச்சுச்டுப்போய்ருக்காரு. ஒண்டிக்கட்டைக்கென்ன”

“கல்யாணம் ஆகலையா புள்ளைங்களுக்கு கத்துக்குடுக்க ஆரம்பிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்” என் குரல் உரத்தது போல் தோன்றவே குரலைத்தாழ்த்திக்கொண்டேன் “இசை பாருங்க. அப்டியே விட்டுப்போய்ரும்”

“அதெல்லாம் உண்டு. ஊர்ல இருக்க ஆசைப்பட்ற புள்ளைங்களுக்கு கத்துக்குடுக்கிறது. வாத்தியாரும் அப்பந்தான என்ன. என்னெளவு எல்லாம் நான் வாசிக்கும்போது திரும்பி நின்னு போன்ல போட்டோபுடிக்குதுக. அப்புறம் கொஞ்சங்கொஞ்சமா வரத்த குறைச்சுக்குதுக. நானும் போகட்டும்னு விட்டுட்டேன்.”பெருமிதமும் குழறலும் கலந்து பேசிக்கொண்டிருந்தார்.

புறநகரின் வழக்கமான பாரில் தனியாகப் போகும்போது கிடைக்கும் ஓரிரவுச் சினேகிதங்கள். நகரத்தின் பணக்காரவிடுதிகளின் ஓரிரவுப் பெண் சினேகிதங்களில் அலுத்துப்போய் மாற்றிக்கொண்டு சில வருடங்கள் ஆகிறது. பெரிய துணிச்சுருக்கு போன்ற பையில் நாதஸ்வர வடிவம் பார்த்து வந்தமர்ந்து ஆரம்பித்து வைத்த பேச்சு.

வலதுபுறம் எதோ ஒரு கிராமத்தின் உடனுறையும் அம்பாளின் அருள்மிகு குடமுழுக்குக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்ட ஜிப் வைத்த தோள்ப்பை. விழாமுடிந்து போகிறவர் என்ற சித்திரம் முதலில் எழுந்தது. நாதஸ்வரம் வாசிக்கிறவர் தொழிலுக்கு முன் குடிக்கிறவர்கள் இல்லை என்ற எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும் என்றெண்ணி தலையை உலுக்க்கிக்கொண்டேன்.

“மண்டைல பிடிச்சுருச்சு போல,வெத்தல போடுதீங்களா. நயம். தலைவலி போய்டும். வெளிய போய் காத்த்தாட?”

“இல்ல. அதெல்லாம் பழக்கமில்லிங்க.”

“மூக்குப்பொடி வெத்தலையெல்லாம் கெட்டப்பழக்கம் சிகரெட்டு பிராந்தியெல்லாம் நல்லபழக்கமா பழகிவச்சிருக்கீங்க. உங்களச்சொல்லி என்னா காலம் அப்டி”

“ஊருக்குப் போறிங்களா அப்டியே” பேச்சை மாற்றவேண்டும் எனத் தோன்றியது.அல்லது அவர் சொற்கள் முழுமையாக மூளையைச் சென்றடைந்திருக்கவில்லை.

“ஆமா. விழாமுடிஞ்சுது. மிச்சக்காசு கைக்கு வந்துது. அப்டியே உடனே குடிக்கணிம்னும் தோணுச்சு. அதான அப்டியே வந்தேன். ரயில்ல ஏறிப் படுத்தா ஆறுமணி நேரம் அந்த நாத்தம் பாதிக்காம தூங்கலாம் பாருங்க.”

“குடி கூட அதானே” சொன்னதை உணர்ந்து எனக்கே சிரிப்பு வந்தது. “நான் ரூம்லபோய் தூங்குறவன். நீங்க நாலு மக்களுக்கு நடுவுல…”

“இது நம்ம சொந்த நாத்தமுல்லா. சொந்த நாத்தம் தெரியாத மூக்கல்லா குடுத்துருக்கான் ஆண்டவன் அத மாத்தச் சொல்லுதிய”

“அதுவும் சரிதான்”. புன்னகைத்தேன். அவரவர் கோப்பைகளைக் கவிழ்த்துக்கொண்டோம். வெற்றிலை கேட்கும் உணர்வெழுந்ததை அடக்கிக்கொண்டேன்.

பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா என என் அலைபேசி அடித்தது. மேலாளர்.எடுத்தேன். கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். உடனே தந்திருக்கவேண்டிய ஒரு கோப்பு ஒன்று வரவில்லை போன்ற சில்லறைக் குழப்பங்கள்.மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன் என்பதைச் சொன்னேன். மீண்டும் அனுப்புவதாகச் சொல்லி துண்டித்தேன். மின்னஞ்சலைத் திறந்து கடைசியாக அனுப்பியதையே திருப்பி அனுப்பினேன். ஏற்கனவே அனுப்பிவிட்டதற்கான ஆதாரம். அலுவலக அரசியல் குழப்பங்கள் மனதில் எழுந்தன. அடுத்த கோப்பைக்கு கைகாட்டினேன்.

அவர் தலை பின்புறம் சாய்த்து விட்டத்து விளக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். சின்னச்சின்ன கண்ணாடிக்குமிழ்களுக்குள் மின்னல்கள் ஓடும் அலங்கார விளக்குக்கொத்து.

“பழைய பட பாட்டுப்போல. குரு. இளையராஜா. இன்னும் இதயெல்லாம் நீங்கல்லாம் போன்ல வைக்கிறீங்களா”

என்ன சொல்வதெனத்தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.

“எதோ ஒரு பொண்ணு என்ன. நீங்க தூண்ல குங்குமம் வச்ச பொண்ணு. சரியா”

மெலிதாகச் சிரித்தேன். ” கிட்டத்தட்ட. நீங்க தூண்ல குங்குமம் வச்சீங்க. நான் இண்டெர்னெட்ல கவிதை எழுதுனேன். ஆனா கதை ஒண்ணுதான்” புதிய கோப்பையிலிருந்து ஒரு மிடறு விழுங்கி வைத்தேன்.

சத்தமாக சிரித்தார். குலுங்கிக்குலுங்கி. சீவாளியைச் சோதிக்கும் போது வந்த பீப்பீப்ப்பீ சத்தத்தை ஒத்த ஒரு சத்தம் அவர் சிரிக்கும்போது எழுந்தது. நாதஸ்வரமாகவே மாறிவிட்ட மனிதர். அல்லது உள்ளே இறங்கிய ஆல்கஹால் வேலையாக இருக்கலாம் என்ற குழப்பம் வந்தது. இன்னொரு மிடறு குடித்தேன்.

“எறந்தகாலம் கடுமையான போதை என்ன. எல்லாத்துல இருந்து மீட்கவும் மருந்து கண்டுபிடிச்சுருக்கான். ஆனா ஞாபவத்துல இருந்து மீட்க மருந்தே இல்ல கேட்டியளா”

மீண்டும் ஒரு மிடறு அருந்திவிட்டுத்தொடர்ந்தார். “இன்னும் வந்தவேலை முடியல. ஊர்ல அவ தவறிட்டாளாம். தகவல் வந்துது அதான் துட்டின்னு சொல்லிட்டு கிடைச்சகாச வாங்கிட்டு கிளம்புறேன்”

“யாரு… ” எனது குரல் நடுங்கத்தொடங்கியிருந்தது. போதை இறங்கி வியர்க்கத்தொடங்கியது. வியர்வைக்கு மேலேயே குளிரூட்டியின் குளிர்ந்தகாற்று. உடலும் நடுங்கிக்கொண்டிந்தது.

“வேற யாரு. நான் தூண்லகுங்குமம் வச்சவதான்.எங்கூருக்குத்தான் கொண்டாராங்களாம். எதோ ஐஸ்பொட்டில. அதான் சரி கடைசியா ஒருதடவ கழுதையப்பாத்துருவோம்னு கிளம்பிட்டேன்.”

“ம்ம்”. எனது குரல் எனக்குள்ளேயே அமுங்கியது.

“அவளுக்கும் பிள்ளையில்லை. புருசங்காரன் கட்டுன கொஞ்ச வருசத்துலையே பிச்சுகிட்டு வடக்க எங்கியோ போய் ஒளிஞ்சுட்டான்.. தனியா சமைச்சு உண்டு ஒறங்கிக்கிடந்தா. இப்ப முடிஞ்சுது என்னா”

எனக்கு சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. குழப்பமான புருவ முடிச்சுகளுடன் அவரே பேசட்டும் என காத்திருந்தேன்.

“ஆம்பள தனியா கிடந்தா திங்கக்கஷ்டம் பொம்பள தனியா கிடந்தா தூங்கக்கஷ்டம்பாங்கல்லா. அந்தக்கதைதான். என்னத்த நினைச்சிருந்தாளோ. என்னென்ன பொலம்பிருப்பாளோ. குடி ஒண்ணு ஆம்பளைக்கு. குடிக்காதபொம்பள என்ன பண்ணிருப்பா யார் கண்டா”

“அவங்க உங்கள லவ் பண்ணாங்களா”

சத்தமில்லாமல் சிரித்தார். வெட்கம் எனத்தோன்றும் உள்ளார்ந்த ஒரு புன்னகை. “லவ் என்னா. காலம் போன காலத்துல லவ் என்னத்த வேண்டிக்கிடக்கு”

“இப்ப இல்ல முன்னாடி”, அவர் லவ் என்பதை ஒருவிதமாக அழுத்தி ‘ளவ்’ என்பதற்கும் ‘ழவ்’ என்பதற்கும் இடையினால ஒரு ஒலியில் உச்சரித்தார்.
“முன்னாடி லவ்வு இப்ப இல்லைன்னெல்லாம் எங்ககாலத்துல கிடையாது கேட்டிளா. புடிச்சிருக்கு புடிக்கல அவ்ளோதான். புடிச்சுதா இல்லையான்னெல்லாம் தெரியல. புடிக்கலைன்னு சொல்லாத வரைக்கும் சந்தோசமா இருந்துட்டு போகலாம் அவ்ளோதான்”
மெல்ல மூச்சுவிட்டார். மார்புக்கூடுகள் கூட அசையாத மூச்சு.

“நாய்மனசு தம்பி. குழிதோண்டுற நாயி. படுக்கவும் மனசில்லாம நிக்கவும் மனசில்லாம ஓடி ஓடி குழிதோண்டி மோந்து பாத்து உருண்டுட்டு அடுத்த இடத்துல தோண்ட அப்டியே போய்டுது என்னா”

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். இருளில் மினுமினுக்கும் கருப்பு. இடதுகாதுமுதல் வலது காது வரை நீளும் திருநீற்றுப்பட்டை. இருபத்தைந்துகாசு அளவு பிசிறில்லாத வட்டக்குங்குமம். ஆல்கஹால் ஏற ஏற சூடாகி குளிரூட்டப்பட்ட அறையிலும் வியர்த்துக்கொட்டும் அக்கினி உடம்பு.

“நாதஸ்வரம்லாம் கேப்பீங்களா தம்பி” மெல்ல அசைந்து அமர்ந்தார்.

“ஆர்வம்னு இல்ல, ஊர்க்கொடைகள்ள கேட்ருக்கேன். அப்புறம் சினிமாவுல.”

“என்னைய இங்கன வாசிக்கச்சொன்னீங்களென்னு கேட்டேன். என்ன நினைக்கிறீங்க”

“என்னது”

“நாதஸ்வரம்பத்தி. இந்த இசை பத்தி. போன்லையே வேலைய முடிக்குறவுங்க. ஓஓன்னு கத்துற பாட்டுகள இந்தமாதிரி கிளப்புல உக்காந்து கேக்குறவுங்க”

மூன்று நட்சத்திர குடிக்குமிடத்தை கிளப் என அழைத்தது வேடிக்கையாக இருந்தது.கிளப்புக்கடை காலத்து மனிதன்.

“சினிமாப்பாட்டுதான எல்லாம் கேட்டது. ஆனா புல்லாங்குழலையும் இதையும் ஒப்பிட்டா என்னவோ நாதஸ்வரத்துல அதே பாட்ட கேட்கும்போது நெஞ்ச அறுக்கிறாப்ல…”

எனக்கும் போதை ஏறிக்கொண்டிருக்கிறது என்றுணர்ந்தேன். நெஞ்சை அறுப்பது பற்றிச் சொல்லும்போது குரல் நடுங்கியது.

“எல்லாம் சீவாளி பண்ற வேலைதம்பி. குழாய்க்குள்ள ஆயிரம் வேலைப்பாடு இருக்கு பாத்துக்கங்க. ஆனாலும் மூக்கடச்சி நாங்க ஊதுறத இன்னும் அடைச்சு குழாய்க்குள்ள தள்ளுறதுல இருக்கு அத்தனையும்”

குழப்பாகவும் தெளிவடைவது போலவும் இருந்தது.

“கிடைக்கிறத மடைமாத்தி வெளித்தள்ளுற பொம்பள புல்லாங்குழல்னா, கிடைக்கிறத அழுத்தி அழுத்தி உள்ள வச்சு கொஞ்சமா தள்ளுற ஆம்பளதம்பி இது. அதையும் தள்ள வழியில்லைன்னா சிரமந்தான் என்னா”

கேட்கும்போதே மூச்சடைப்பதுபோல் இருந்தது.

“உள்ளவச்சே செத்துப்போனவந்தான் பூரா ஆம்பளையிம். எங்கப்பன் உட்பட. ஏன் எனக்கும் அதான் நாளைக்கி”

“எனக்கும்தான” சூழலை அமைதிகொள்ளச்செய்யும் ஆறுதல் வார்த்தைகள் இல்லாமல் தடுமாறத்தொடங்கினேன்.

“உங்களுக்கென்னா அதுக்குள்ள. காலங்கிடக்கு. பிள்ளை நெறய பாக்கணும் இன்னும் என்னா”

எதற்காக எனக்கு ஆறுதல் சொல்கிறார் என்று புரியாமல் அமர்ந்திருந்தேன்.

“ழவ் இருந்துது தம்பி எங்களுக்குள்ள. தூண்ல இருந்து மாறி கைல இருந்து குங்குமம் எடுக்குற அளவுக்கு. கோயில் நந்தவனத்துல உக்காந்து கதையா பேசிருக்கோம். எல்லை மீறுனதில்ல. ஆனா ஒண்டியா சாகணும்னு எனக்கெழுதிருந்தா எவன் மாத்தமுடியும் சொல்லுங்க”

“கல்யாணத்துக்கப்புறம் பாத்திருக்கீங்களா”

“ஒண்ரெண்டு தடவ ஆரம்பத்துல. சவுத்துமூதிக்கு பிள்ளை குடுக்கல ஆண்டவன், அவளும் ஊருக்கு வரத்த குறைச்சு அப்டியே போய்டுச்சு”

“நீங்க நாலு எடம் போறவரு” முடிவு தெரிந்த திரைப்படத்தின் இடை நிகழ்வுகளைக் காணும் ஆர்வத்தில் கேட்டேன்.

“அவ ஊர்ல எதும் சோலி ஏத்துக்கிறதில்ல. மெல்ல எஞ்சொக்காரனுக பக்கம் தள்ளிவிட்ருவேன். அப்புறம் ஊர்க்காரனுவளுக்கு என்ன புரிஞ்சிதோ கூப்ட்றத நிறுத்திட்டானுக”

“அவங்க எப்படி… எப்ப…” வார்த்தைகள் திக்குவது போல் இருந்தது.

“மதியந்தான். என்னவோ நெஞ்சக்கரிக்குதுன்னுருக்கா. சுக்காபிய போட்டுக்குடிச்சுட்டு படுத்தவ இருட்டியிம் எந்திரிக்கலையாம். புண்ணியாத்மா”

இதயக்கோளாறுகள் பற்றி பேசவிரும்பவில்லை. தூக்கத்தில் இறந்த புண்ணியாத்மாவாகவே இருக்கட்டும் என்று தோன்றியது.

“கோடித்துணி போடலாம். அவளுக்குப்புடிச்ச செந்தூரக்கலர் புடவை வாங்கணும்னு தோணுச்சு. சீதேவி வாங்க மருமகளோ மகனோ இல்லாத ஒருத்தி.குடியானவன வச்சு குடம் ஒடைப்பாங்கன்னு நினைக்கேன். நம்ம கைல என்ன இருக்கு. ஊர்வாய்க்கு பாக்க வேண்டிருக்கு. நல்லபடியா வந்து நல்லபடியா போனவ நம்மாள ஒரு சொல் வந்துரக்கூடாது என்னா”

அவரது செந்தூர நிற நெற்றிப்பொட்டு வியர்வையில் கரைந்து கண்ணில் இறங்கியது. அழுத்தி துடைத்துக்கொண்டார்.

“அடக்கி வச்ச சனியனெல்லாம் பிச்சுகிட்டு வருது என்னா. இதுக்குத்தான் இதுகளைக் குடிக்கிறானுவ போல. “

“நாதஸ்வரம் மாதிரி” என் குரல் ஏறியிருந்தது.

“சரி இனி கண்ணாடிரூம்புக்குள்ள இசை பிச்சியடிச்சு யாருக்கென்ன ஆச்சு. கச்சேரிதான் முடிஞ்சிருச்சே” சலிப்பின் சாயல் அவர் குரலில் இருந்தது போல் தோன்றவில்லை. ஒருவித நீரற்ற கிணத்தின் ஆழப்படிக்கட்டிலிருந்து வரும் மெல்லிய குரல். “போலாமா தம்பி, டிரைனுக்கு நேரமாச்சு” அவர் உடலில் நிலையில்லாத ஒரு சுணக்கம்தெரிந்தது.

பில் கொண்டுவரச்செய்து, மொத்தமாக எடுத்துக்கொள்ளச் சொல்லி எனது கார்டை அளித்தேன்.

பையைத்துழாவினார். “இருக்கட்டுங்க. ரெண்டு மூணு ரவுண்டுதான. என் கார்டுக்கு இங்க டிஸ்கவுண்டுல்லாம் உண்டு. பரவால்ல இருக்கட்டும்” என்றேன்.

“இல்ல தம்பி, சோத்துக்கூட கையேந்தலாம், நாலுபேர்ட்ட வாங்குனா நாளப்பின்ன நாலுபேருக்கு குடுத்து தீர்த்துக்கலாம். இது வெசம். சொந்தக்காசுலதான் குடிக்கணும். எவனுக்கும் குடுக்கக்கூடாது கேட்டியளா”

சில நூறுகளை அள்ளியெடுத்து எண்ணாமல் எனது பையில் திணித்தார்.நிச்சயம் ஆயிரங்களைத்தாண்டியிருக்கும்.அவரிடம் அதைச் சொல்லாமல் புன்னகைத்தேன்.

“இப்படி கடைக்கு நான் இதன் மொததடவ பாத்துக்கிடுங்க அவளுக்கு இப்படி ஏசி போட்ட கிளப்புக்கடைல எங்கூட ஒண்ணா ஒக்காந்து சாப்டணும்னு ஆச இருந்துது. முன்னாடி சொல்லியிருக்கா. அவ துட்டியச் சொன்னதும் எனக்கு வரணும்னு தோணுச்சு, அதான் சாப்டலாம்னு வந்தேன், இங்க வந்து பாத்தா எல்லாம் குடிச்சுட்டு இருந்தாங்க. சரி சனியனக்கொண்டான்னு நானும் கொண்டாரச்சொல்லி உக்காந்துட்டேன் என்னா”

அவர் குரலில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

“இன்னிக்குத்தான் மொதமுறையா சாராயம் குடிக்கேன். லைட்டா தொண்ட எரியுது. நாக்கு கொஞ்சம் தடிச்சாப்ல இருக்கு. வேறொண்ணுமில்ல என்னா. உடம்புக்கு ஆகாதுன்றாங்க. குறைச்சுக்கிடுங்க என்னா”

நிலையழிந்து என்ன சொல்வதெனத்தெரியாமல் அமர்ந்திருந்தேன். “ரசீது வரணும்” மெல்லச் சொன்னேன்.

“நான் வாசிச்சது கேட்டேனே அது வந்து ஆபேரி ராகம். அப்ப பாக்கலாம் என்னா”

வாள் உருவும் அரசனின் இலாவகத்துடன் சீவாளியை உருவினார். குழாயின் கூர்ப்பகுதியில் இணைத்திருந்த குங்கும நிறக்கயிறில் தூக்கிலாடுபவனைப்போல தொங்கியது. பட்டுத்துணியிலான உறையை விரித்து நாதஸ்வரத்தை உள்ளே வைத்து ஒருகையில் தோள்பையைப்போல மாட்டிக்கொண்டார். கடைசியாக ஒருமுறை என் முகத்தைப்பார்த்து சிரித்துவிட்டு தள்ளாடியபடி நடந்து கதவைத்திறந்து வெளியேறினார்.

அவர் வெளியேறும்போது யாரோ கைதட்டினார்கள். கதவைத்திறக்கும்போது எனக்கு எங்கோ தொலைவில் நாதஸ்வர இசை ஸ்பீக்கரில் ஒலிப்பதுபோல் தோன்றியது.