மலையடிவாரத்தின்
பாழடைந்த கோயில் சுவற்றில்
உறை பிரிக்கப்படாத மிட்டாய்களை
வைத்துச் சென்ற
குழந்தைக்காக

தொலைவின் மரத்தடியில்
காக்கைகளை விரட்டியபடி
அமர்ந்திருக்கிறேன்

ஒரு குழந்தை வருகிறது
உறைகளைப் பிரித்துவிட்டு
மிட்டாய்களை
அங்கேயே வைத்துச் செல்கிறது

வேறு குழந்தையாக இருக்கலாம்
என
எண்ணிக்கொள்கிறேன்
அதே குழந்தையாகவும் இருக்கலாம்

நான் ஏன் அந்த உறைகளைப்
பிரிக்காமல்
மிட்டாய்களைக் காவல்காத்து அமர்ந்திருந்தேன்?

o

வரையாடுகள் மலைவிட்டு
இறங்கிவருகின்றன

அவை வழக்கமாக இறங்கிவருவதில்லை
வந்தாலும் அவற்றின் பாதை
இந்த
மனிதக்காலடிகள் உருவாக்கிய
பாதையில்லை

அவை கடந்துசெல்கிறன
ஒரு ஆடு நிற்கிறது
நின்று திரும்பிப்பார்த்து
நான் அமர்ந்திருந்த பாறையில்
உரசிக்கொள்கிறது

நான் கால்களை அகட்டி அதன்
கொம்புகள் உரச
இடமளிக்கிறேன்
அதுவும் தலையசைத்து
ஏற்றுக்கொள்கிறது

அவை சென்றுவிட்டன
மந்தை
அது சென்றுவிட்டது
ஆடு
நான் இனி
அப்பாறையைச் சுமந்துதான் அமர்ந்திருக்க வேண்டுமா?

o

மலையுச்சியின்
கன்னிதெய்வத்திற்கு
பக்கத்திற்கு இரண்டாக
எட்டு கைகள்

மலையுச்சியின் கன்னிதெய்வத்திற்கு
மார்இடைவெளிகள்வரை
நீண்ட நாக்கு

மலையுச்சியின்
கன்னிதெய்வத்திற்கு இருபுறமும்
கோரப்பற்கள்

மலையுச்சியின் கன்னிதெய்வத்திற்கு
கூரிய முலைகள்
மலையுச்சியின் கன்னிதெய்வத்திற்கு
கருணை பொங்கும் கண்கள்

மலையுச்சியின் கன்னிதெய்வத்திற்கு
ஒரு
நவகண்ட படையல்

மலையுச்சியின் கன்னிதெய்வங்களுக்கு வந்தனம்.