காலை எழுந்தபோது ஐந்து அல்லது ஆறு தவறிய அழைப்புகள். பேசுவதற்கு முன்பே என்ன தகவல் என்பதை என் ஆழுள்ளம் அறிந்திருந்தது. அதை அறிந்திருந்தேன் என்பதே உடல் நடுக்கத்தைக் கொடுத்தது. நடுக்கத்தோடே எடுத்தேன். நான் ஏற்கனவே உணர்ந்திருந்த அதே தகவல். . அழைத்தது தம்பிக்கு. அவன் மறுபுறத்தில் பதட்டத்தில் இருந்திருக்கவேண்டும் என்று இன்றும் வேண்டிக்கொள்கிறேன். “வரமுடியுமா” என்றொரு கேள்வி.
ஆண்களுக்கே உண்டான அன்பு செலுத்துவதன் தயக்கங்கள். கல்விவிடுதிகளில் தன் பால்யத்தைக் கடந்தவன் என்ற முறையில் குடும்பம் என்ற அமைப்பிற்குள் என்றும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததில்லை. ஆனாலும் வரமுடியுமா என்ற கேள்வி எதோ ஒரு ஆழத்தைச் சீண்டியது. வரமுடியாது என வழக்கமாச் சொல்வதின் பயன்கள். இப்படி ஒரு நேரத்தின் இவன் வரமுடியாது எனச் சொல்வதற்கான சாத்தியங்கள் இருக்குமென்ற எண்ணங்கள்.
எப்படியும் வந்துவிடுவேன் என்றேன். அலுவலகத்திற்கான மின்னஞ்சல்கள். உடனடியான நேர்மறை பதில்கள். உடனடியான பதிவுச்சீட்டுகள். எதை எடுப்பது என்ற குழப்பம் சிறிது நேரம். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. வழக்கமான பயணப்பையில் கிடைத்த துணிகளைத் திணித்தேன். வீட்டிற்கு வெளியே கிடந்த பொருட்களைப் பொறுக்கி உள்ளே எறிந்தேன். கதவை அடைத்துவிட்டு ரயில் நிலையம் நோக்கி நடக்கும்போது வீட்டில் வரவேற்க அம்மா உயிருடன் இல்லை என்ற எண்ணம் முகத்திலறைந்தது.
கடந்த சிலமுறைகளாகவே அவள் வீட்டில் இல்லை. மருத்துவமனையில். அல்லது தாத்தா வீட்டில். கதவைத்தட்டும்போது திறக்கக்காத்திருக்காத கைகள். பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் அழைத்து எங்கிருக்கிறேன் என உறுதி செய்துகொள்ளாத குரல். கடைசி சில வருடங்கள். உடலின் சக்திகள் இழந்து தளர்ந்த நடைகள். மூச்சிறைக்கும் சொற்கள். அத்தனைக்கும் மேலும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஏற்கனவே ஒரு பெண்ணை இழந்திருக்கிறேன். அதற்கும் முன்பே இருந்தவர். அதற்குப் பின்பும் இருந்தவர். அந்தக்கதையின் பெரும்பகுதி உண்மையை அறிந்தவர். இவர் என்னைவிட்டுப்போவதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற நம்பிக்கை.
பெருங்குடும்பத்தின் அரவணைப்பின்றி தனியனாகத்தான் என்னை உணர்ந்திருக்கிறேன். எனக்கும் பெருங்குடும்பத்திற்குமான ஒற்றைக்கண்ணி இவர். இவன் இன்னவாக இன்ன இடத்தில் இருக்கிறான் என்பதாக பிறருக்கு தகவல்கள் அளித்துக்கொண்டேயிருந்தவர். மறுமுனையில் எனக்கும் குடும்பத்தின் இன்ன ஆள் இன்னவாக மாறியிருக்கிறார். இன்ன இடைவெளிகள் உருவாகியிருக்கின்றன. இவர் இதைச் சொன்னார் அவர் அதைச் சொன்னார். தகவல்கள். மேலும் தகவல்கள். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் சில நிமிட அழைப்பிற்கு நடுவிலேயே வந்து சேரும் பெரும் சித்திரங்கள்.
கடைசி வருடங்களில் குரல் கம்மிவிட்டிருந்தது. மூச்சிரைப்பின் ஒலி. ஒவ்வொரு மூன்று நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் இந்தியாப்பயணங்கள். மொத்தமாக விட்டொழித்துவிட்டு வீடுபோய்ச்சேரும் வேட்கைகள். பின் சில நாட்கள் கூட தங்கமுடியாமல் திரும்பி ஓடும் எண்ணங்கள். வலியைச் சந்திப்பது குறித்த பயங்கள். எண்ணங்கள். மேலும் எண்ணங்கள். வலிகளை பொறுத்துக்கொண்டு சொல்லப்படும் சொற்கள் உருவாக்கும் குற்ற உணர்ச்சிகள்.
முழுமுற்றான கிராமத்து ஆள். நகரத்துக்கு நகர்ந்தவன் அங்கே ஏதோ கடும் உடல் உழைப்பில் தன்னை வருத்திக்கொள்கிறான் என்ற கிராமத்தின் வழக்கமான கற்பனைகள். ஒரு வகையில் உண்மைகள் கூட. என்கிராமத்திலிருந்து கிளம்பி நகரத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்தபடி வேலைபாக்கிறவர்கள் மிகக்குறைவு.அப்படி வேலை பாக்கிறவர்களும் சொல்வது அதன் போராட்டங்கள் குறித்த கதைகளின்றி பிற நற்கதைகள் சொன்னால் ‘கண்பட்டுவிடும்’ போன்ற மூட நம்பிக்கைகள். அவள் அறிந்ததெல்லாம் ட்ரைவர்கள். கட்டிடத்தொழிலாளிகள். பட்டறைகளில் வேலை பார்ப்பவர்கள். மும்பையின் இருள்பாதைகளில் விடுதிகளில் எடுபிடிகளாக இருப்பவர்கள். நான் அப்படி இல்லை நன்றாகவே இருக்கிறேன் என்பதை நம்பவைக்கவே பெரும் பிரயத்தனங்கள் தேவைப்பட்டிருந்தது.
பிறகு வெளிநாடு. எனக்கு அது ஒரு முன்னேற்றம். அடுத்த நிலை. குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து குளிரூட்டப்பட்டது போன்ற நகரங்களுக்கு வந்து சேரும் பாய்ச்சல். அவளுக்கு அது வெறும் தொலைவு. எட்டு மணி நேர பேருந்து பயணத்திற்கும் பதினஞ்சு மணி நேர விமானப்பயணத்திற்கும் இடையில் எனக்கு பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவளுக்கு அது தொலைவு. வெகுதொலைவு. மெல்ல மெல்ல மனம் மாற்றி அவளுக்குப் புரியவைப்பதற்கான முயற்சிகள் பாதிவெற்றிபெற்றன என்றளவில்தான் என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது.
இடைமாற்ற விமானம் சிங்கப்பூரில் இருந்தது. அங்கே சில மணி நேர ஜாகைகள். எதோ ஒரு கடையில் காபி.யாரையாவது இழந்தபின் ஒவ்வொரு சிறு நிகழ்வும் அவர்களையே நினைவூட்டுகிறது. காபி அப்பாவிடமிருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். நாளைக்கு ஆறேழு முறை காபி குடிப்பவர் அவர். உடல் உழைப்பில் உணவிற்குப்பதிலாக பாலில்லாத காபியில் வெல்லம் போட்டு குடித்து வாழ்ந்த பழக்கம். ஓரளவு நாங்கள் நிலைகொண்ட பிறகும் தொடர்ந்திருந்தது. ஆறேழுமுறை காபி. பால்,சக்கரை எல்லாம் கலந்து. வெளியே செல்லும்முன் ஒரு முறை. போய்வந்தபின் ஒரு முறை. அவள் தன் வாழ்நாளெல்லாம் காபி போட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் குடித்துக்கொண்டேயிருந்தோம். தூங்குவதற்கு முன் ஒரு முறை. தூங்கி எழுந்ததும் ஒரு முறை.
புகைப்பழக்கத்தை குடிப்பழக்கத்தைப்போல எங்களுக்கு காபி ஒரு போதையாக மாறிவிட்டிருந்தது.உறவினர் வீடுகளின் காபிக்கு அவள் காபியின் சுவையில்லை. உறவினர்வீடுகளில் தங்க நேரும்போது அத்தனை காபிகள் தேவைப்படவில்லை. அவள் அந்த வீட்டிற்கு வரும்போது காபிகள் தேவைப்பட்டன. மேலும் மேலும் கேட்பதற்கான உரிமை அவள் இருக்கும் இடங்களில் எங்களுக்கு இருந்தது.
ஒவ்வொரு உறவின் இழப்பும் நம்மைப் புரட்டிப்போடுகிறது. அம்மாவின் மரணம் என்பது அத்தனையிலும் தனித்துவமானது. அது அத்தனையையிம் நம்மிடமிருந்து பிரிக்கிறது. முழு அனாதையாக நம்மை உணரச் செய்கிறது. அத்தனை கண்ணிகளிலிருந்தும் விடுவிக்கிறது. அத்தனை உறவுகளையும் நண்பர்களையும் ஒரே சமையத்தில் கலைத்துப்போடுகிறது.
சிங்கப்பூரிலேயே ஒரு உணவகத்தில் மாலை உணவு. உண்மையில் நான் அதிகம் சாப்பிடுகிறவனில்லை. ஆனாலும் அன்று பசி சுழன்றுகொண்டேயிருந்தது. தின்று செரிப்பவன் போல. அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே எனும் வரி மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டே இருந்தது. எதையோ அணைப்பவன்போல. எதையோ கடந்து செல்கிறவன் போல. ஒன்று மாற்றி ஒன்றென எதையோ தின்றுகொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் காபி. சிங்கப்பூரிலிருந்து மதுரை. மதுரையிலிருந்து அம்மாவின் உடல் இருந்த குக்கிராமத்திற்கு ஒரு கார். அந்த ஓட்டுனர்க்கு பேசுவதற்கு நிறைய இருந்தன. எனக்கும் யாராவது பேசினால் நன்றாக இருக்குமெனத்தோன்றியது.
நான் கேட்டுக்கொண்டே வந்தேன். அவர் பேசிக்கொண்டேயிருந்தார். எதற்காக ஊருக்குப்போகிறேன் என்பதை அவரிடம் சொல்லவில்லை. எதிர்பாராத அந்த உடைவின் மெளனத்தை விரும்பவில்லை. வழக்கமான வெளினாட்டில்வேலைபார்க்கிறவர்களுக்கு சொல்வதற்கு உள்ளூர் ஓட்டுனர்களுக்கு ஏராளமான கதைகள் இருக்கின்றன. கேட்பதற்கு கேள்விகள். இறுதியாக அந்த நாட்டில் ட்ரைவராக என்ன செய்யவேண்டும் எனும் லெளகீக இடத்திற்கு வந்து சேரவேண்டியிருக்குறது. நான் உம் கொட்டிக்கொண்டேயிருந்தேன்.
அந்தப் பயணத்தில் நினைத்துக்கொண்டேன். உடனே அழைத்துப்புலம்பும் அளவிற்கு எந்த நண்பரையும் நான் மிச்சம் வைத்திருக்கவில்லை. சில குறிப்பிட்ட நம்பிக்கையான வட்டத்து நண்பர்களிடம் இன்ன காரணத்திற்காக வந்திருக்கிறேன் என்றேன். பிறருக்கு வழக்கமான விடுமுறை நாளாகவே இருக்கட்டும்.
நடந்தது நவம்பர் 14. தீபாவளி அக்டோபரில் முடிந்திருந்தது. சென்னையில் இருந்தபோதும் தீபாவளிக்கு ஊருக்குப் போகும் பரபரப்பு இருந்ததில்லை. கூட்ட நெரிசல். டிக்கெட்டுகளுக்கான அடிதடிகள். பண்டிகை நாள் குறித்த ஒவ்வாமைகள். உண்மையில் இந்த ஒவ்வாமை விடுதி நாட்களிலேயே தொடங்கியிருக்க வேண்டும். போகமுடியாமை குறித்த குற்ற உணர்ச்சிகளின் மூலம் பண்டிகை நாட்களிலிருந்து விடுவித்துக்கொண்டேன் எனத்தோன்றுகிறது. பொங்கல் அளவிற்கு தீபாவளி முக்கியம் இல்லை என்பதுவும் மறுகாரணம். ஜப்பானும் அதே நிலை. வழக்கமான மே/டிசம்பர் விடுமுறைகளுக்காக அலுவலக விடுமுறைகளைச் சேர்த்து வைத்து அதனூடாக இந்தியப்பயணம். ஆனால் இந்தமுறை எல்லா கண்ணிகளும் அறுக்கப்பட்ட எல்லா எண்ணங்களும் அறுக்கப்பட்ட ஒரு பெரும் மெளனப்பயணம்.
ஊரை அடைந்தது நள்ளிரவு. ஒரு மணி அருகில். அப்போதும் அம்மாவின் இழப்பைப் பற்றி ஓட்டுனரிடம் மறைக்கத்தோன்றியது. அவர்சொன்ன கதைகள் அவர் உருவாக்க விரும்பிய சிரிப்பின் கணங்கள் குறித்த குற்ற உணர்ச்சியை அவருக்கு அளிக்க விரும்பவில்லை. வீட்டிலிருந்து வெகுதொலைவிலேயே இறங்கிக்கொண்டேன். முதலில் பேசப்பட்டதை விட கேட்ட தொகை அதிகம். கேட்ட தொகையை விட குடுத்தது அதிகம். அவரது குழப்பங்களைப் புறக்கணித்து இருட்டினூடாக நடந்து சென்றேன்.
அந்தத்தெருவில் அதே நேரத்தில் பலமுறை சென்றிருக்கிறேன். வழக்கமாக நாய்கள் குரைத்து வரவேற்கும். வீடுகளிலிருந்து குரைத்தபடி வெளிவந்து பழகிய முகம் தெரிந்த வாசனை உணர்ந்து திரும்பிச்செல்லும். அன்றைக்கு பேரமைதி. சில வீடுகளில் நாய்கள் படுத்திருந்தன. தலைதூக்கிப்பார்த்துவிட்டு படுத்துக்கொண்டன. வரமாட்டேன் என நம்பிக்கை ஏற்படாத அந்த முகங்களுக்கு நன்றி சொல்லத்தோன்றியது. வீட்டு வாசலில் பையை வைத்து உள்ளே சென்றேன். பையை யாரோ எடுத்துச்சென்றார்கள். உள்ளே பெட்டியில் கால் நீட்டித்தூங்கும் அவள்முகம்.
தம்பியையும் அப்பாவையும் சந்தித்து சிலவார்த்தைகள் பேசிவிட்டு வந்து காலமடக்கி கால்மாட்டில் அமர்ந்துகொண்டேன். யாரோ வந்து காபி வேண்டுமா என்றார்கள். மறுத்து அமர்ந்திருந்தேன். எதையும் சொல்லத்தோன்றவில்லை.
லதாமகன். நல்லதொரு அடையாளம். இனி லதா இல்லை இந்த உலகில். உறவுகளை என்னுடன் இணைத்த இறுதிக்கண்ணியும் அறுந்திருக்கிறது. பொறுப்புகள் கூடியிருக்கிறது. எல்லாவற்றையும் கடந்து வரவேண்டும். இணையத்தின் போலிமுகங்களிருந்து இதன் மூலம் கிடைத்த நண்பர்களிலிருந்து மெல்ல துண்டித்துக்கொண்டேன். சொற்களற்று மெளனத்தில் ஆழ்ந்திருத்தல். மெல்ல என்னை மீட்டெடுக்கவேண்டியிருந்தது மீண்டும்.உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து என்னைக் கட்டியமைக்கவேண்டும். பதினைந்து நாட்கள். அர்த்தமில்லாத சடங்குகள். புரியாத மொழியை மீண்டும் மீண்டும் பேசி எதையோ எங்கோ மறு உலகத்திற்கு அனுப்புவது குறித்த பாவனைகள். அவருக்குப்பிறகு மகள்முறையினள், மறுமகள் முறையினள் இந்தக் குடும்பத்தை கை நீட்டிப்பெற்றுக்கொள்ளும் சடங்குகள். அவள் இங்கே இதே கூடத்தில் உறங்குபவள் போல் படுத்திருப்பவளை எங்கே அனுப்ப இந்த நாடகங்கள் எனும் உட்குரல் உள்ளேயே அமிழ்ந்தது.
உறவுக்கண்ணிகள் இதை எதிர்பார்க்கின்றன. அவர்கள் அழுது கண்துடைத்து எழுந்துசெல்ல இந்த சடங்குகள் தேவையாய் இருக்கின்றன. செய்துகொண்டேயிருந்தேன். எதிலும் ஈடுபாடற்று எல்லாவற்றையும் எடுத்து நடத்தும் நாடகங்கள். முடிந்து சில நாட்களுக்குப் பிறகு திரும்பி ஜப்பானுக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள். அவளைக் கொண்டுசென்று எரிக்கும்போது மீண்டும் அதே வரிகள். யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.
திரும்பிவந்து மீண்டும் சடங்குகள். அடுத்த சடங்குகள் செய்வதற்கான நாட்குறிப்புகள். திரும்பிவந்தேன். வேலைகளுக்குள் ஈடுபடுத்திக்கொண்டேன். ஆறுமாதத்தில் அடுத்த பயணம். அதே சடங்குகள். அதே நாடகங்கள்
மீண்டும் ஜப்பான். மீண்டும் கடந்த அக்டோபர் பயணம். ஓராண்டு முடிவு. மறுபடியும் சடங்குகள். மறுபடியும் நாடகங்கள். 2017 தீபாவளி முடிந்து இறந்தவருக்கான ஓராண்டு 2018 தீபாவளிக்கு முன்பே முடிந்துவிட்டது. இந்தக்கணக்குகள் யார் முடிவு செய்கிறார்கள். இதனால் என்ன நிகழப்போகிறது. அத்தனையும் நாடகம். ஆனால் அந்த நாடகங்களுக்கூட சில உணர்வுகள் எழுகின்றன. அவள் மீது கொண்ட தளைகளை அறுத்தெரியச் சொல்கின்றன. அவரிடத்தில் ஒரு தங்கையை ஒரு அத்தையைக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அவர்கள் முன்னிலும் அதிகமாக நம்மை நெருங்குகிறார்கள். ஆனால் நான் எந்தக்கண்ணியில் எங்கே நிற்கிறேன் என்ற குழப்பம் என்னளவில் எஞ்சுகிறது.
கல்பற்றா நாராயணனின் கவிதை வரிகளைப்போல அவள் எங்களைத்தாங்கினாள். குறிப்பாக என்னை. என் பைத்தியக்காரத்தனங்களை. என் இலைகளை நீர் நிலையுடன் இணைக்கும் தண்டாக அவள் இருந்தாள். பெருங்குடும்பத்தின் என் மீதான சீண்டல் சொற்களை நான் எகிறி உடைத்தெரியவிடாமல் என் பக்கம் நின்று எனக்காகப் பேசினாள். இன்று இத்தனை ஆண்டுகளில் கற்றுக்கொள்ளாத ஒன்றை இந்த கடந்த ஓராண்டில் கற்றுத்தெளிந்திருக்கிறேன் என நினைக்கிறேன். அவர்களின் சீண்டல் சொற்களுக்கு புன்னகைத்தபடி பதில் சொல்லும் கலை இந்தச்சடங்குகளுக்குப் பிறகு வாய்த்திருக்கிறது.
இதைக் கற்றுக்கொடுக்க மிகப்பெரிய பயணத்தைத் தேர்த்தெடுத்திருக்கிறாள். .அவள் என்னைப் பெற்றுமுடித்தாள்.இனி அவள் உறங்கட்டும்
நவ் 25, 2018 @ 09:38:57
😦 😦
Sorry da..
Ipo than vishayam therinjadhu..
Take care
நவ் 26, 2018 @ 03:35:27
Heavyness in every word.
சொந்த உணர்ச்சிகள் பிரதிபலிப்பதாலோ என்னவோ… ரொம்பவே பாதிக்குது… நேற்று மாலை இதை படித்ததிலருந்து உங்களின் சில வாக்கியங்கள் திரும்ப திரும்ப வந்து போகுது.
பிப் 07, 2019 @ 05:22:06
தமிழனுக்கு தமிழ் வணக்கங்கள்..
கல்லூரியில் படிக்கையில் ஒரு சில புத்தகங்களை வாசித்த அனுபவமுண்டு..
வாழ்க்கையின் படிக்கட்டுகளில் தடுமாறி விழுந்தவன் வாசிப்பில் திரும்ப எழவே இல்லை.. டிவிட்டர் வந்த புதிதில் மீண்டும் வார்த்தைகள் வலம் வர தொடங்கி அப்படியே மறைந்தும் போனது.. கடந்த இரண்டு ஆண்டுகளாக வாசிக்கும் பழக்கத்தை விட்டிருந்தேன்..
தங்களது இந்த வரிகள் எனக்குள் இருந்த வாசகனுக்கு உயிரூட்டியது..
ஏதாயினும் மனதுக்கு நெருக்கமாக படிக்கையில் அதை பாதியிலேயே நிறுத்தி விட்டு
அதை ரசித்துவிட்டு பிறகு தொடர்வது என்ற எனது வழக்கத்தை உங்களது இந்த கட்டுரை மீட்டெடுத்துள்ளது..
ஏதோ எனக்கே ஏற்பட்ட வலி..
எனக்குள் இருந்த வாசகனை எனக்கு மீண்டும் திருப்பி தந்தமைக்கு நன்றி..