அநாதைகளை எப்பொழுதும் மொழிதான்
தத்தெடுத்துக்கொள்கிறது

பிதாக்களைக் கொல்ல
விரும்பவிரும்புகிறவர்கள்
மொழியில்
வந்து ஒளிந்துகொள்கிறார்கள்

அன்னைகள்
தன் மார்பினை சுவற்றில்
பீய்ச்சி அடிக்கிறார்கள்

குழந்தை
தன் விரலை தான் சப்பிக்கொள்கிறது
தன் விரலை
பிற அனாதைகளுக்குச்
சப்பக்கொடுக்கிறது

தன் கொலையை
மொழியாக மாற்றி காற்றில் பரவவிடுகிறது

o

கால் மாற்றி ஆடும் நடராஜன்
தன் ஆடலை
பெயரெனச் சொல்கிறான்

நியாபகமற்ற
மடங்கள் அனாதைகளைக்
கடவுளாக்கி திருப்பி அனுப்புகிறது

கடவுள்கள் தன் பாதைகளை
மறந்துவிட்டு
தன் காலங்களை மறந்துவிட்டு
தன் இரவுகளை மறந்துவிட்டு
தன் கயிறுகளை மறந்துவிட்டு

ஒருமுறை
அமர்ந்திருக்கிறார்கள்
அந்த மாபெரும் தாமரைத்தண்டின் முன்பாக

புன்னகைகள் எரிந்து
புகைகிளம்பும் பெரும் சிதையின்
முன்பாக

o

தங்கைகள் தங்கள் குழந்தைகளைக்
கொண்டுவந்து
கிடத்தும் மடி

சகோதரர்கள்
தன் காதலை முதல்முறை
அறிவிக்கும்
செவி

அன்னைகள் தங்கள் கடைசிக்
குரலை
எழுதி கொடுக்கும்
கடைசிக் கரங்கள்

பிதாக்கள் தங்கள் அன்பினை
மெளனமாகப் பகிர்ந்துகொள்ளும்
விழிகள்

அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் காத்திருக்கிறார்கள்.