ஒரு விதை இருளின் ஆழத்திலிருந்து
வெளிச்சம் நோக்கிப் பயணப்படுகிறது

புத்தகத்தின் அடையாளமான
மஞ்சள் மலர்
எடுத்து வெளியில் வைக்கும்போது
எழுத்துக்களை
எடுத்துவருகிறது இதழ்

ஓநாய்கள் அந்த
வனத்தில் கூட்டமாகவும்
முன்னெப்போதோ அலைந்திருக்கின்றன

கண்ணாடிகளை வீடெங்கும் வாங்கி
மாட்டிய அதே பைத்தியம்தான்
அவற்றை உடைத்து
வீடெங்கும் சிதறடிக்கிறது

அத்தனை கண்ணாடிகள்
எத்தனை சிதறல்கள்

அந்தோ
ஒரே முகம்

O

தன் கழுத்துக்கயிறை தானே
பிடித்துச் செல்லும்
வெளிநாட்டு நாய்

தனது பாயிண்டிலேயே
செருகப்பட்டிருக்கும்
எலக்ரிக் பிளக்

ஒரு பிளாஸ்டிக் குழாயைச்
சுழற்றி தனக்கே
ஐ லவ் யூ சொல்லிக்கொள்ளும் ஒருவன்

வேறென்ன இருக்கிறது
நீங்கள் சிரிப்பதற்கு

மரஉச்சியில் பனிக்குள்
தன் சிறகுகளுக்குள்ளேயே
தலைமறைத்து
தன்னையே கோதிக்கொள்ளும்
பறவை?

தன் பாதைகளை தட்டித்தட்டி
பலர் மீது மோதி
சுவர் ஒட்டி கடந்து செல்லும் ஒருவன்?

பரபரப்பான சாலையில்
அடுத்த அடி எடுத்து வைக்கச் சிரமப்பட்டாலும்
சூழலுக்குச் சம்பந்தமில்லாமல்
மெதுவாகச் செல்லும் வயசாளி?

நல்லது.
நீங்கள் கூட்டமாக சிரிக்கிறீர்கள்
அவர்கள் தனியாக இருக்கிறார்கள்
என்பதை அறிந்திருக்கிறீர்கள்தானே?

O

அனாதைகள் கனவிலும்
அனாதையாக
இருக்கிறார்கள்

பெரிய அறைகளை எடுத்திருக்கிறார்கள்
இசைக்கருவிகள்
தனியறையில் அடுக்கப்பட்டிருக்கின்றன

தனி ஒருவருக்காக புதிய உணவுகளை
நிறைய பதார்த்தங்களை
சமைத்து அடுக்குகிறார்கள்

தனியர்களின் கதைகள்
கொண்ட புத்தகங்கள்
இசைக்கருவிகளின் அறையில்
விரிந்து சிதறிக்கிடக்கிறது.

அனாதைகள்
கனவிலிருந்து விழிக்கும்போதும்
அனாதைகளாகவே
விழித்தெழுகிறார்கள்.

பார்வையற்றவனின் கனவில்
இருள்தான் வருமென
கண்ணாடியைப் பார்த்துச் சொல்லிக்கொள்கிறார்கள்.