பாலையின் கள்ளிச்சொட்டுகளில்
கலக்கும் ஒரு துளி மழை
வந்து போன காலங்கள்
வேர்களில் தங்கியிருக்கிறாதா
நந்தனா

சல்லிவேர்கள் நீர் உறிஞ்ச
வாய்க்காத
சகதியென உன் நிலத்தை
மாற்றிப்போய்விட்டதா அம்மழை
நந்தனா

பழையபாடல்களை மீண்டும்
ஒலிக்கவிட்டு
வேனல்காலங்களில்
மீள்வாழ்வு கொண்டிருக்கியா
நந்தனா

ப்ரிய நந்தனா நான் உனக்குச் சொல்வேன்

நீ கிழித்து வந்தாலும்
உனக்கிழித்து எடுத்தாலும்
நீரற்ற உன் நுரையீரல்களை
காற்று நிரப்ப கற்றுக்கொடு
நந்தனா

o

நந்தனா

நந்தி மறைப்பதாய் நீ நினைத்துக்கொண்டிருக்கும்
சிவம்

சுவர்களுக்குள் ஊழ்கத்திலிருந்ததாய்
நம்பியிருக்கும்
சிவம்

எழுந்து வந்து முகம்காட்ட
வேண்டியிருந்த
சிவம்

கர்ப்பங்களில்
கால்மடக்கி அமர வக்கற்று
என்றோ எழுந்து சென்றுவிட்ட
சிவம்

பெருவான் மேகங்களில்
மின்னிட்டு மறைந்துபோகும்
விரியாத ஒரு சொட்டு
சிவம்

எந்த சிவம்
உந்தன் சிவம்
நந்தானா.

o

கூட்டுப்புழுக்கள் உரிந்தால்தான் வண்ணம்
நாகம் சட்டை உரித்தாலும் நாகமே
நந்தனா

எறும்புகளுக்கு சிறகு முளைக்கும்
சிறு மழைக்காலம்
நந்தனா
அன்பு கொண்டு பறந்து
அன்றே சாகும் மாலைக்காலம்
நந்தனா

பூச்சிகளைத் தின்னும் தாவரம் நந்தனா
தாவரம் தின்னும் பூச்சிகளும்
நந்தனா

நாகம் துப்புகிறது புற்றை
நந்தனா
புற்று தின்னுகிறது நாகத்தை
நந்தனா

O