வெள்ளத்தனைய நீர்மட்டம்

பின்னூட்டமொன்றை இடுக

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலின்
எனது இசை
கடைசியாக ஒலிக்கட்டும்

அழியும் பெருங்கடல் என்னை முதலில்
மூழ்கடிக்கட்டும்

முத்தங்களின் பேருண்மை
எரியும் காலம்
நெருங்கிக் கொண்டிருக்கிறது.

என் இசைக்கருவிகள்
எங்கே
நான் எங்கே
மொழி எங்கே
கடவுள் எங்கே

ஒரு கவி தன் பாடலை எழுதத் தொடங்குகிறான்
எல்லா அழிவின் விளிம்புகளிலும்.

o

அனாதைகளின் எளிய கேவல்கள்
இந்தத்தெருவின்
எல்லா திசைகளிலும்
ஒலிக்கக்கூடும்

ஆசுவாசங்களின் மொழி
உங்களுக்கு அன்னியமானதாக
இருக்கக்கூடும்

சிப்பிகள் தாங்கள்
ஒளித்து வைத்திருக்கும்
முத்துக்களை
யாராவது வந்து திருடும்
வரை காத்திருக்கின்றன

ஒரு நாள்
ஒரு நாளாவது
திரும்பிப்பாருங்கள்

மூழ்கும் சிப்பிகளின் கடைசிப் புன்னகையை.

o

முதல் பிறந்தநாள் வாழ்த்து
நினைவிருக்கிறது

அலைபேசியின் மறுமுனை
புன்னகை
அந்தச் சொற்களின்
கடைசி நிம்மதி

சொற்களற்று அலைந்திருந்த
நள்ளிரவின் தெருக்கள் இன்னும் அங்கேயே இருக்கின்றன

நான் நகர்ந்திருக்கிறேன்

ஒரு புதிய நகரத்திற்கு

உறைந்த பனிக்கட்டி ஒத்த
குளிர் கொண்ட
சிறுநதியின் நகரத்திற்கு

அடுத்த சொல் எடுத்துத் தர என் மொழியின்
அடையாளங்களற்ற
தீப்பெட்டி அடுக்குகளின் நகரத்திற்கு

ஹேப்பி பர்த்டே வினோத்

சொல் துரத்துகிறது
மொழி துரத்துகிறது
ஞாபகம் துரத்துகிறது
நிறம் துரத்துகிறது

கால்களுக்குக் கீழே மறைந்து கொண்டே போகிறது பாதை

நீங்கள் திரும்பிப்போக முடியாது.

இனி ஒரு ஜென்மம் வரும்
அன்றாவது சொல்லாமலிரு

அடுத்த ஜென்மத்தில் சந்திக்கலாமென.

மாலை கழற்றப்படாத உடல்கள்

பின்னூட்டமொன்றை இடுக

அழகிய
பழக்கப்பட்ட மிருகங்களின்
தேவை
திடீரென அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது

பழைய அலைவிரிந்த தலைமுடிகளின்
நியாபகம் சில நாட்களில்
முகத்தில் உரசிப்போகிறது

சடங்குகளில் மடியில்
வைக்கப்பட்ட முகங்கள்
காத்திருக்கின்றன

எங்கேயோ

மாலை கழற்றப்படாத உடலுடன்.

o

நள்ளிரவில் பதறி விழித்து
நடுங்கியபடி தனித்தமர்ந்திருக்கிறவனுக்கு
ஆறுதலுக்கான ஆட்கள்
வெளியிலிருந்து
வரமுடியாது

படிக்கட்டுகளில் அழுதபடி
அமர்ந்திருப்பவள்
தெரியாதவர்கள் கடக்கும்போது
வேகமாக கண்ணைத் துடைத்து
வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாள்

தன்குழந்தையை அடிக்கும் தந்தைக்கு
உரசப்பட்ட தகர ஓசை கேட்டதுபோல

கூசி முகஞ்சுளிப்பவன்

அந்த இரவில்
பதறி தனித்தெழக்கூடும்

கூசிமுகஞ்சுளிப்பவள்

இன்னொரு படிக்கட்டில் அமர்ந்து
கண்ணீர் மறைக்கக்கூடும்

o

அலைபேசியின் உடைந்த கண்ணாடிகளுக்குப்
பின்னால் இரண்டு
சாத்தியங்கள் இருக்கின்றன

எதிர்பாராத அணைப்பில்
தவறி விழுந்தவை

அல்லது

கையாலாகாத வெறுப்பில்
சுவற்றில் எறியப்பட்டவை

எந்தச்சுவற்றில்
சுண்ணாம்பு காரை பெயர்ந்திருக்கிறது

எந்தத்தரையில்
சில்லுகள்
சிதறியிருக்கின்றன.

எனது
தரை பளிங்கென இருக்கிறது

எனக்கு
முழுமையான சுவர்கள் இல்லை.

விதியின் சிற்றெழுத்துக்கள்

பின்னூட்டமொன்றை இடுக

இனி
எந்த எண்ணையும் அழிப்பதாக
இல்லை

இன்று எண்கள் மறுசுழற்சிக்கு
அனுமதிக்கப்படுகின்றன
இறந்தவர்களின் எண்களை
இறக்காதவர்கள்
பெற்றுக்கொள்கிறார்கள்

தங்கள் புகைப்படங்கள்
வாயிலாக
புதிய முகங்கள்
புன்னகைக்கும்போது

எதற்காக
மீண்டும் இழக்கவேண்டும்

ஏற்கனவே இழந்துவிட்டவர்களை.

o

புலிவாலைப் பிடித்திருப்பவை
புலிக்குட்டியின் பற்கள்தான்
சற்று
பொறுத்திருங்கள்

தனித்த மரத்தில் கள்பெறுகிறவர்கள்
கூட்டமாகத்தான் வருகிறார்கள்
அவசரப்படாதீர்கள்

மின்கருவிகள் உறிஞ்சிப்பீய்ச்சிய
பால்
எங்கோ ஒரு குழந்தைக்குத்தான்
கொண்டு சேர்க்கப்படும்
கவலை கொள்ள வேண்டாம்

ஆனால்
ஆனால்

எந்தக்கடைசித்தருணத்திலும்
கண்ணுக்குத்தெரியாத
சிற்றெழுத்துகளில் மறைக்கப்பட்ட விதிகளின்
வழியாக

மேற்சொன்னவை மாறிவிடக்கூடும்
பத்திரம்.

o

முலைக்காம்புகளுக்குப் பதிலீடாக
விரல் நுனிகள்

சப்பிச்சுவைத்து
சுவைமறந்து பழக்கம் நின்றபின்

அந்தக்குழந்தை
ஒவ்வொரு முறையும்
எதிர்பார்க்கிறது

ஒவ்வொரு இழப்பிற்குப் பிறகும் ஒரு பதிலீடு
ஒன்றை

துயரங்களின் நாய்க்குட்டி

பின்னூட்டமொன்றை இடுக

வீழ்கின்ற இலையை
ஓடும் நதியில்
சந்தித்துக்கலக்குகிறது
வெளியேற்றப்பட்ட ரசாயன நதி

மீன்கள் தன் செதில்களின்
எழுதும் மெளனம்
பன்னெடுந்தொலைவு
வரை எடுத்துச் சென்று

பாறையில் மோதிச் சிதறும்
உப்புக்கரைந்த
அதே நதி

o

துயரங்களின் நாய்க்குட்டியை நாங்கள்
பழக்கும்போது

அதன் கால்களில் ஒன்றை
அதுவே ஒடித்துக்கொண்டு
வந்து
அழாமல் நின்றது

அழுவதற்குப் பழக்கப்படாத
நாய்க்குட்டியை
துயரத்திற்கு
எப்படி
பழக்கப்படுத்துவீர்கள்

அல்லது

எதற்காக?

o

மீண்டும் துரத்துகின்றன

சற்று மூச்சுவாங்க
இடைவெளிக்காக நின்றிருந்த
மரணங்கள்

உடைதலின் பொருட்டு மண்ணிலான
பூந்தொட்டிகள்
தன் விரிசல்களை
ஒரு முறை
வேர்களால் நிரடிக்கொள்கின்றன

இனியாவது துயரங்களை
விரும்பத்தொடங்குவோம்

இனியாவது
அவை நமைப் பிரிய விரும்பட்டும்

நீருற்றும் அதே கரங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

இந்த ரகசிய பிசாசுகளுக்கு
பைத்தியம் பிடித்திருக்கிறது

பெயரற்ற கடிதங்களின்
வழியாக
யாரோ
எக்காலத்திற்குமான காதலென
சொல்லியிருக்கிறார்.

இதுவரை விலக்கிய எல்லாருக்காகவும்
ஒரு நிமிட மெளன அஞ்சலி
இன்று முதல் விலக்கப்போகும்
உனக்காக
மேலும் ஒரு நிமிடம்

நினைவிலிருக்கும் எல்லாருக்காகவும்
ஒவ்வொரு நிமிடங்கள்

ரகசிய பிசாசுகளுக்கு
பைத்தியம் பிடித்திருக்கிறது
அவை திசைகளற்ற
நிலத்தில் பயணத்திற்கு ஆயத்தம் கொள்கின்றன.

 

o

நகைச்சுவை நடிகனின்
துயரங்களுக்குக்
கண்ணீர் சிந்தும்
அதே மனதுடன்

உணவிற்கான
ஆட்டை
கருணை எனும் சொல் கொஞ்சமும்
நினைவுக்கு வராமல்
அறுக்க முடிந்திருக்கிறது.

நீரூற்றும் அதே
கரங்களால்தான்
மலர்களைப் பறிக்கிறேன்

வேரும் கிளையும் ஒன்றல்ல
என்கிறார் பிதா
விழுதை வேரென
அஞ்சுவது குமாரனின் தவறல்ல

ஆனாலும்
மரம் கொஞ்சம் கருணையோடிருக்கலாம்.

o

மரண விளையாட்டில்
பல படிக்கட்டுகள் இருக்கிறது
என்று படித்திருக்கிறீர்கள்

கடைசியாக அவர்கள் ஒரு புகைப்படத்துடன்
இந்த இன்னலிலிருந்து
விடைபெற்றுக்கொள்கிறார்கள்

கொஞ்சம் கருணை காட்டுங்கள்

மரணித்துவிட்டவர்களை
நீங்கள் பரிதாபங்களின் மூலம்
கொண்டுவர முடியாது

ஆனாலும்

தற்கொலை பற்றி
பேசிக்கொண்டிருப்பவர்கள் இறைஞ்சுவது
கவனத்தை அல்ல
அன்பை

திரும்பி உங்களால் கொண்டுவர சாத்தியமுள்ள
ஒரு பாதையை.

பேச்சி, மாரி மற்றும் சிலர்

1 பின்னூட்டம்

பேச்சியின் மருதாணி மரங்களில்
கட்டப்பட்ட
தொட்டில்களை எண்ணிக்கொண்டு
மாவிளக்கு வயிற்றில் சுட
அங்கேயே படுத்திருக்கிறாள்
அப்பேர் கொண்டவள்

வரிகளை மீறிய வலிகளைச்
சுமந்த நினைவுகள்
அங்கேயே
சிவந்து மலர்ந்திருக்கின்றன

நான் எதிரில் அமர்ந்திருக்கிறேன்
தொலைவில்
வெகுதொலைவில்

மழையின் கடைசி சொட்டு கண்டு
நாளாகிவிட்டது

o

அரிசியும் ஆலைச் சர்க்கரையும்
மாரியம்மனின் எதோ ஒரு
பழங்கால நினைவிலிருந்து
வெளியேறியிருக்கக்கூடும்

அவள் கண்கள்
வெறித்திருக்கின்றன
உபயம்
கொண்டையனாசாரி
டியூப்லைட்டின் மீது

செப்பிலடித்த ஆசாரி
தன் உளியினை திருப்பிப்பார்த்தப்படி
அங்கேயே
அந்த கொண்டாட்டும் முடியும்வரை
காத்திருக்கிறான்

பசியுடன் இருக்கும்
அத்தனை உயிர்களுக்கும் ஒற்றை இலை
பாயாசம் தேவையாயிருக்கிறது.

விறகினை நீக்கிக்கொண்டேயிருக்கிறார்கள்
பொங்கல்பானை கொதித்துக்கொண்டிருக்கிறது

தளதளவென.

o

தேரடிமாடனுக்கு
திருத்தமான கைகளை வாழைமட்டையில்
செதுக்கி

நீண்ட ஈட்டிமுனையில்
அறுக்கப்பட்ட ஆட்டை
இலாகவமாக பொருத்தி வெளியேறியவன்

வெளிப்பிரகார சுவரில் வெளிப்புறம் திரும்பியமர்ந்து
தன் பீடியை
இழுக்கிறான்

சிறப்பு பிளாஸ்டிக் கப்பில்
சிறப்பான காப்பி
அவனுக்காக காத்திருக்கிறது

சிரட்டையின் நிறம் சில நேரங்களில்
வெள்ளை என்பது
ஒரு ஓவியனாக
அவனுக்கு தெரியும்.

பிசாசுகளின் கதவுகள்

பின்னூட்டமொன்றை இடுக

முலைகுலுங்க ஓட்டப்பயிற்சியிலிருக்கும்
பெண்ணின் கண்களைச் சந்திக்க நேரும்போது

மூத்திர நாற்றத்தின் நடுவேயும்
என்றோ
கால்விரித்து அதே
இடத்தில் அமர நேர்ந்தவளின்
இறுகிய தொடைகளை
கற்பனை செய்துகொள்ள முடியும்போது

நெருப்பில்
அலறும் சிறுமியின்
வரையப்பட்ட கண்களுக்குள்

அனல் நகரத்தின்
ஒரு துளியை மீண்டும்
பருகிக் கொள்வேன்.
o

வெகுதொலைவில் இருப்பவரைச்
சந்திப்பதற்காக
ஒரு
கதவு வரைந்தேன்

பிறகு அதைத் திறந்து
அவரை உள்ளே அழைத்தேன்
வந்தவர் திரும்பிப்போகிறார்.
கதவை அடைத்துக்கொள்கிறார்

மீண்டும் திறப்பதற்காக காத்திருக்கும்போது
ஒரு முறை அவர் முகம்
ஜன்னலருகே வந்து
படீரென மறைகிறது

இனி கதவுகளுக்கு
இங்கே தேவையில்லை.
o

சருகைத்தாளுக்குள் அலையும் தலையை மீறி
வெளியேறும் பாம்பின் வாலில்

குவிக்கப்பட்ட விரல்களிலிருந்து
அச்சத்துடன் கொத்தித்தின்னும்
தேன்சிட்டின்
கூரலகுகளில்

சிரிப்பின் குலுங்கலில்
உதட்டோரம் முலைப்பாலை
ஒழுகவிடும் கைக்குழந்தையின்
பாதங்களின் சிவப்பில்

அந்தப்பிசாசினையும்
மீண்டும் புதைத்தழிப்பேன்.

Older Entries Newer Entries

%d bloggers like this: