மாயநதி

2 பின்னூட்டங்கள்

“ you know what , you ruined it. எனக்கு புடிச்ச விசயம் எல்லாத்தையும் வெறுக்கிற அளவு பண்ணிட்ட. புடிச்ச பாட்டுக்கள நீ அனுப்பிட்டன்ற ஒரே காரணத்துக்காக வெறுக்க ஆரம்பிச்சிட்டேன். Don’t Write about me anymore. Gud bye for ever. Dont ever think about message me again”

இந்தக்குறுஞ்செய்தி வந்தபோது நந்து வேளாங்கண்ணிக்கும் அதிராம்பட்டினத்துக்கும் இடையில் எதோ ஒரு கிலோமீட்டரில் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு இளநீர் குடித்துக்கொண்டிருந்தான். கை நடுங்குவது போலிருந்தது. இள நிக்கூடு தவறி விழுந்துவிடக்கூடும் நடுக்கம். கூட்டினை எறிந்துவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்தான். வண்டிக்காரர் இவனையே கூர்ந்து பார்ப்பது போலிருந்தது. பர்ஸிலிருந்து ரூபாயை எடுத்துக்கொடுத்தான். வண்டிக்காரர் இள நிகளுக்கு கீழே விரித்திருந்த சாக்கை உயர்த்தி மீதப்பணத்தை எடுத்து நீட்டினார். கைகள் சுண்டிவிட்ட நரம்பைப்போல தொடர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தன.

கடைக்காரருக்கு எதாவது தோன்றியிருக்கவேண்டும். “தம்பி வெளியூருங்களா.. பாத்தமாதிரியே இல்லியே” கருத்த தேகம். உழைத்தே இறுகிய உடல். நிறம் மங்கிய லுங்கி. கோடுபோட்ட சட்டை. பொட்டல்காட்டின் தார்ச்சாலை ஓரத்தில் தார்ப்பாய் பந்தலுக்கு கீழே இ ள நிகளை அடுக்கிவைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்தவர். பாதையின் பயணிகளின்றி யாரும் இறங்காத இந்த இடத்தில் எ ந்த நம்பிக்கையில் வியாபாரத்தில் இறங்கியிருக்கக்கூடும் என்றொரு குழப்பம் வந்தது. எப்பொழுதுவாது வருகிறவர்கள் அன்றி யாரிடமும் பேசமுடியாது என்பதால் வருகிறவர்கள் எல்லாரிடமும் பேச்சுக்குடுப்பவராக இருக்கக்கூடும். நந்துவுக்கும் யாரிடமாவது பேசவேண்டியிருந்தது. கை நடுக்கம். மேலும் நடுக்கம். குழப்பமாக இருந்தது.. என்ன கேட்டார்?

“என்னன்ணே”

“இல்ல முகம்புதுசாருக்கே வெளி யூரான்னு கேட்டேன்”

“ஆமாண்ணே.. பைக் ட்ரிப் போய்ட்டு இருக்கேன். சென்னைல இருந்து திருனெல்வேலி”

அதான. வேளாங்கண்ணிக்கும் அதிராம்பட்டினத்துக்கும் அலையுற பசங்க எல்லாரையும் தெரியும். அதான் கேட்டேன். குடிச்சிருக்கீங்களா

இல்லண்ணே பைக் ஓட்டும்போது குடிக்கிறதில்ல

ம். நல்ல பழக்கம்தான். முடிஞ்சா எப்பவுமே குடிக்காதீங்க தம்பி. போன மாசம் கூட ஒருத்தன் இதே ரோட்லதான் குடிச்சுட்டு டவுன்பஸ்ல போய் விழுந்து… எந்தூர் தம்பி.

திருனேலிதாண்ணே. இப்படியே அதிராம்பட்டினம் திருச்செந்தூர்வரைக்கும் போய் அங்கிருந்து அப்டியே உள்ள போய்ரலாம்னு..

ம்ம். இப்படி நடுங்கிகிட்டுன்னு போனா ஊருக்கில்ல அடுத்த ஸ்டாப் கூட போமாட்டீங்க எங்கியாவது விழுந்துவச்சா யாராவது பாக்குறதுக்கு கூட பாதி நாள் ஆகும் இந்த காட்ல. போன்ல எதும் கெட்ட செய்திங்களா. இல்ல போனப்பாத்தப்புறம்தான் உடம்பு நடுங்குச்சு…. அதான். பேசுனா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்தம்பி. என் பையன் வயசு இருப்பீங்க. தப்பா எதும் இருந்தா மன்னிச்சுக்கங்க

அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்லைண்ணே

சில வார்த்தைகளில் நெருங்கிவிடுவது கிராமங்களின் எளிய மனிதர்களுக்கு எளிதாக இருக்கிறது. மெல்ல கைபிடித்து அழைத்துச் செல்பவர்கள். பிடித்த கையை இருப்பிடம் சேரும்வரை விடாதவர்கள். பிடித்த கையை இடம் சேரும்முன்பாக விட்டுச் செல்பவர்கள்தானே எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறார்கள்.

அதெல்லாம் ஒண்ணுமில்லைண்ணே. ஒரு பொண்ணு…

என்ன தம்பி காதல் விவகாரமா. ஆனாலும் இப்பல்லாம் பசங்களுக்கு எல்லாத்துலையும் அவசரம். சீக்கிரமே கல்யாணம் பண்ணி சீக்கிரமே புள்ளபெத்து சீக்கிரமே செத்தும் போய்ட்றீங்க. எங்ககாலத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணாலும் பாத்துக்க யாராவது இருந்தாங்க. இப்பல்லாம் மொத வேலையே பெத்தவங்கள எங்கியாவது அனுப்பிவச்சுட்டு தனியா கிடந்து சாகணும்னுதான் ஆசப்பட்றீங்க என்னா

தன் கதையைக் கேட்கவிரும்புகிறாரா அல்லது அவர்கதையைச் சொல்ல விரும்புகிறாரா என்ற குழப்பம் வந்தது. ஆனாலும் கதைகேட்க காதுகொடுப்பவர்களுக்கும் ஒரு கதை இருக்கும்தானே அதையும் கேட்டுத்தான் ஆகவேண்டும். ரோட்டோரத்தில் நின்றிருந்த வண்டியை மெல்ல மரத்தடிக்கு இற்க்கினான். மணல் இழுக்கையில் அத்தனை கனமான வண்டியை உள்ளே தள்ளுவது சிரமமாக இருந்தது. இளநிகடைக்காரர் இருந்த இடத்தை விட்டு எழாமல் பார்த்துக்கொண்டேயிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு கடைக்காரர் அருகில் கிடந்த பிளாஸ்டிக் சேரில் வந்து அமர்ந்தான். சேர் மணலில் புதைந்தது. பின்பக்கம் விழுவதைப்போல.

“பாத்து உக்காருங்க. சொன்னேன்ல. அவசரம். மணல்ல கிடக்குற சேர்ல உக்காரும்போது ஒரு அழுத்து அழுத்திடு உக்காரணும் . அசையாது. ஆனா சேர் கிடச்சிருச்சுன்னு வந்து விழறீங்க பாருங்க அந்த அவசரம்தான் எல்லா பிரச்சினைக்கு காரணம் தம்பி. ”

நம்மை அறியாதவர்களிடம் நம் கதைகளைச் சொல்வதில் சில நன்மைகள் இருக்கிறது. முற்றிலுமாக நம்மை நல்லவனாகக் காட்டிக்கொள்ளலாம். திரும்பி இன்னொரு நாள் எதையாவது கேட்டு நினைவூட்ட மாட்டார்கள். முகமில்லாதவனின் கதையாகவே காற்றில் அழிந்துவிடும்.

“ அவசரம் இல்லைண்ணே. நான் கொஞ்சம் மெதுவாத்தான் பேசுனேன். அதுதான் பிரச்சினைக்கு காரணம்னு நினைக்கிறேன். அவ நெருங்கும்போதெல்லாம் விலகி விலகித்தான் போனேன். எனக்கே தெரியும் என் கேரக்டருக்கு காதல் கீதல்லாம் செட்டாகும்னு தோணல. ஆனா அவள காதலிக்க ஆரம்பிச்சதும் மட்டும் தெளிவா தெரிஞ்சுது. மெல்ல அப்டியே அடிவயித்துல யாரோ கத்திய சுழட்றமாதிரி அவளபாக்கும்போதெல்லாம். ஒவ்வொரு நாளும் அவ கூட தனியா இருக்கிற பத்து நிமிசத்துகாக வெயிட் பண்ற மாதிரி. அந்த பத்து நிமிசமும் மொத்த வாழ்க்கையையும் பாஸ்ட்பார்வேர்ர்ட்ல வாழ்ற மாதிரி. இதெல்லாம் புரியவைக்கமுடியாதுண்ணே. சரி ஆனது ஆகட்டும்னு நெருங்க ஆரம்பிக்கும்போதுதான் அந்த பொண்ணு விலக ஆரம்பிச்சா. என்னால முடியலைண்ணே. ஒரே குழப்பம். விலகிப்போறவன நெருங்குறவங்க ஏன் நெருங்க ஆரம்பிச்சப்புறம் விலகணும் சொல்லுங்க. இப்பவும் தண்ணியடிக்கும்போது அவ நியாபகந்தான். மத்த நேரத்துல மட்டும் என்ன குறை. என்ன மத்த நேரத்துல பேசவேண்டாம்ன்ற வைராக்யம் இருக்கும். எதுக்கு விலகிப்போன பொண்ண விரட்டணும்னு.. ஆனாலும் கொஞ்சம் மப்பான வைராக்யம் யோக்கிய முகமூடியெல்லாம் தேவைப்பட்றதில்ல் பாருங்க. அவ முகம் மட்டும்தான் நியாபகத்துல இருக்கும் அந்த போதையிலையும். பேசியே ஆகணும்னு ஒரு ஆதங்கம். சின்ன சண்டைல வாழ்க்கை மொத்தத்துமும் பிரிஞ்சமாதிரி ஆகிடக்கூடாதுன்ற பயம். சினிமாவேற இப்பல்லாம் எந்த சினிமாவுலையாவது காதலிச்சவங்க பிறர எதுத்து ஜெயிக்கிறாங்களா பாருங்க. எலலாருக்கும் எதிரி அவங்களேதான். அவங்களே காதலிச்சு அவங்களே சண்டை போட்டு அவங்களே பிரிஞ்சுட்டு அப்புறம் கிளைமேக்ஸ்ல அவங்கங்க துணையோட ரெண்டு நிமிசம் கண்கலங்கி அதையும் மறைச்சு… “ நந்து மூச்சுவாங்கினான். இன்னொரு சிகரெட் எடுத்து பற்றவைத்தான்.

“ நானும் காதலிச்சிருக்கேன் தம்பி” சொல்லும்போது கடைக்காரரின் கண்கள் வெயில்பட்டு மின்னின. திடீர் வெளிச்சம் முகமெங்கும் பாய்ந்தது. “அப்பல்லாம் போனேது. லெட்டர்தான். அதுவும் திருட்டுத்தனமா பொண்ணு முகத்துல போற பாதைல எறிஞ்சு எப்படியாவது கைல சேர்த்தா போதும்னு அடிச்சு புடிச்சு. முக்காவாசி கொண்டுபோய் வீட்ல குடுக்கும் அவன் அருவாளதூக்கிட்டு விரட்டுவான். உங்க கதை பரவால்லன்னு வைங்க”

அப்போதுதான் கவனித்தான். அருகில் நந்துவின் வண்டியைத் தவிர வேறெதுவும் வண்டியில்லை. இள நியை அங்கேயே மூட்டைகட்டி முடிச்சுப்போட்டு வைக்குமளவுதான் இருந்தது. முந்தைய கிராமம் முப்பதுகிலோமீட்டருக்கு முன்பு பார்த்தது. அடுத்து எதாவது அருகில் இருக்கலாம் ஆனாலும் நடந்து போவதன் சாத்தியங்கள் குழப்பமாகவே இருந்தன.

“பஞ்சாயத்து தலைவர் பொண்ணு தம்பி என்னவோ அதப்பாத்ததும் அப்டி ஒரு இது. முந்தின தலைமுறை பாருங்க. காதல்னெல்லாம் சொல்லத்தோணல. கல்யாணம் பண்ணிக்கணும்ற ஆசை. இப்பதான் காதலையும் கல்யாணத்தையும் ரெண்டா பிரிச்சு பாக்குறீங்க. அப்பல்லாம் ஒண்ணுதான். அவ அப்ப தையல்கிளாஸுக்கு போய்ட்டு இருந்தா. அந்த தெருவுல டீக்கடைல தம் வாங்கி பத்தவைச்சுட்டே வெறிக்க வெறிக்க பாக்குறது. அப்புறம் வீட்டு வாசல் அடிபம்புல தண்ணி புடிக்க வரும்போது மறுபடியும் அதுக்கு பக்கத்துல கடைல நின்னு வெறிக்க வெறிக்க பாக்குறது. அதென்னவோ தம்பி.. இதெல்லாம் உங்ககிட்ட சொல்றேன். ஒருத்தர பாத்துட்டே இருந்தா கூட கொஞ்சம் கொஞ்சமா அன்பு அதிகமாகிடுதில்ல தம்பி. இப்பல்லாம் லிப்ஸ்டிக் மேட்சிங்னு என்னென்னவ்வோ போட்டுட்டு அலையுதுங்க. பாண்ட்ஸ் பவுடரும் கனகாரம்பமும் சேர்ந்த ஒரு வாசம் தம்பி. இந்தத்தலைமுறைக்கு கனகாம்பரமே தெரியுமோ என்னவோ. இதெல்லாம் ஒரு செகண்டுக்குத்தான் தம்பி. மொத முறை அந்தப்பொண்ணு நம்மகுள்ள பதியிற்துக்கு. அதுக்கப்புறம் அந்த அழகு பாத்துக்கிட்டே இருக்கணும்னு நம்ம மூளைக்குள்ள கிடந்து குடைஞ்சுகிட்டே இருக்கும். தூங்கவிடாது. எத்தன நடு ராத்திரி திடீர்திடீர்னு அந்த வாசம் வந்து எழுந்து உக்காந்திருக்கேன் தெரியுமா. ஆனா கடைசி வரைக்கும் நானா போய் சொல்லல பாருங்க”

நந்துவிற்கு பதட்டம் அடங்கி மெல்லிய சிரிப்பு வந்தது. நடுக்கம் நின்றிருந்தது. காதல் அத்தனை தலைமுறைகளிலும் ஒரே முகத்துடன் இருப்பதாக தோன்றியது. ஊர்களுக்கு பதிலாக அலுவலகங்கள், பெரு நகரங்கள். எறியப்படும் கடிதங்களுக்குக்காக பதில் வராத குறுஞ்செய்திகள்.

“முன்னாடியே பிரிஞ்சுட்டோம்ணே. இன்னும் சொல்லப்போனா அது பிரிவு கூட கிடையாது. எப்பவாது சேர்ந்திருந்தாதான அதுக்கு பேரு பிரிவு. எனக்குத்தான் பீலிங்கெல்லாம். அவளுக்கு அந்த எண்ணமே இல்ல போல குழப்பம் என்னன்னா விலகிப்போறவன விரட்டி உன் கவிதைல வர்ற தேவதையாருன்னு ஏன் கேட்கணும். மூஞ்சில தெரியுற விஷயத்த எழுத்துல கண்டுபிடிச்சு அது யாரு யாருன்னு கேட்டு நீதான்னு வெடிச்சு சொல்ற அளவுக்கு கார்னர்கு கொண்டு போய் நிறுத்தி அப்புறமா இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு சொல்லவேண்டிய அவசியம் என்னண்ணே”

திடீரேன கடைக்காரர் வெடித்துச் சிரித்தார். “கவிதையும் எழுதுவீங்களா தம்பி”

“ நம்மூர்ல யார்ணே எழுதல. சோம்பேறிகளோட முதல் ஆயுதம்ல.”

“பயந்தாங்கொள்ளிகள்னும் சேர்த்துக்கங்க. நேரடியா பேசத் தைரியமில்லாதவன் பேசவேண்டியத புரியாத மாதிரி பொதுவுல எழுதுறதுக்கு பேர்தான உங்களுக்குக் கவிதை.”

நந்து துணுக்குற்றான். தைரியம் இந்த வார்த்தை மீண்டும் இப்படி ஒரு கணத்தில் வெளிவரும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

“தைரியமில்லைன்னும் சொன்னாண்ணே. விலகிப்போனேன்னு சொன்னேன்ல. அப்ப. உனக்கு தைரியமில்ல ஏன் உனக்கு இதெல்லாம்னு கேட்டாண்ணே”

“சொன்னேன்ல. எங்கிட்டையும் இவ கேட்டா தம்பி. நேர்ல வந்து பேச தைரியமில்லாத உன்ன நம்பி எப்படி கழுத்த நீட்றதுன்னு. கேட்கும்போது அந்த கண்ண பாத்தீங்களா. அப்டியே நெருப்ப முழுங்குனாப்ல. புடிச்சிருந்தாதான் தம்பி அப்டியெல்லாம் கேட்பாங்க. புடிக்காதவனுக்கு தைரியமில்லாம இருக்கிறது இவங்களுக்கு வசதிதான் தம்பி விட்ருவாங்க. புடிச்சிருந்தாதான் அந்த கேள்விட் வரும் பாத்துகிடுங்க. டீக்கடைல நின்னுட்டு வழக்கம்போல நின்னு பாத்துட்டு இருந்தேன். முந்தின நாள் கூட லெட்டர பிரண்டுகிட்ட குடுத்துவிட்டேன். போய் பேசுனா பிரச்சினையாகிடும்னு பயம். நாம்பாட்டுக்கு நின்னுட்டு இருந்தேன். வந்தா அப்டியே தங்கு தங்குன்னு வேட்டைக்குப்போற காளி மாதிரி பைல இருந்து லெட்டர எடுத்து நாலாஎட்டா கிளிச்சு பளீர்னு மூஞ்சில அடிச்சா. நேர்ல சொல்ல தைரியமில்லாதவன நம்பி கழுத்த நீட்டக்கூப்ட்றியா எப்பட்றா உனக்கு அப்டி ஒரு ஆசை ஏண்டா இப்படி இருக்கீங்க ஆம்ப்ளைங்கன்னா. அடிவயிறு கலங்கிருச்சு. தசரா காளி வேச ஆவேசம் பாத்திருக்கியா. பயம் வராது. அடிவயுறு புடிச்சு இழுக்கும் அப்டியே கண்ணீர்விட்டு கால்ல விழுந்து என் வம்சத்த காப்பாத்து ஆத்தான்னு கதறும்னு போல இருக்கும். அந்தமாதிரி இருந்துச்சு”

“அதேதாண்ணே. இனிமே பேசாதன்னு சொன்னப்புறம் நானும் பேசல. ஒரு நாள் அவளே மெசேஜ் பண்ணிருந்தா. நான் குடுத்த புக் எதையோ திருப்பிக்குடுக்கணும்னு கூப்டா. போனேன். சொன்ன நேரத்துக்கு முன்னாடியே சொன்ன இடத்துக்கு போய்ட்டேன். ஒரு மாதிரி நீங்க சொன்னமாதிரிதான் அடிவயிறு புடிச்சு இழுத்துச்சு. சரி ஒரு தம் போட்டுட்டு வரலாம்னு வெளிய போய்ட்டேன். திரும்பி வந்தப்ப சொன்ன இடத்துல நின்னுட்டு இருந்தா. மூக்க லைட்டா தட்டும்போதே தெரிஞ்சுருச்சு தம் அடிச்சது புடிக்கலைன்னு. எதுவும் பேசி வாயத் தொறக்க விரும்பல சத்தமில்லாம வாங்கிட்டு வந்துட்டேன். நல்லாருக்கியான்னு கேட்கணும்னு ரொம்ப நேரம் பேசணும்னெல்லாம் தோணுச்சு. சொன்னீங்களே அந்த நெருப்பு முழுங்குன கண்ணூ, அதத்தாண்டி எதுவும் பேசமுடியல. தெரியாம காதலிச்சுட்டேன் என்ன மன்னிச்சிரு ஆத்தான்னு அதே மாதிரி கால்லவிழுந்து கதறத்தான் தோணுச்சு. எப்படிண்ணே நானே மறந்து போன புக்க திருப்பிக் கொடுக்க கூப்டது கணக்க மொத்தமா முடிக்கவா இல்ல மறுபடியும் தொடரவாண்ணு எனக்கெப்பெடி தெரியும். சரி முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்னு வாங்கிட்டு வந்துட்டேன். ஆனா அந்த இடம் மறக்கவே முடியாதுண்ணே அந்த ரெண்டு நிமிசம்”

“எல்லாகாலத்துலையும் இப்படித்தான் தம்பி. எல்லாத்தையும் சொல்றவன் முட்டாள். எதுவுமே சொல்லாதவன் பயந்தாங்கொள்ளி, சொல்லியும் சொல்லாமலும் தடுமார்றவன் பைத்தியக்காரன். எல்லாம் ஒரு விளையாட்டு தம்பி. உங்களுக்குத் தெரிஞ்ச ஒரே விளையாட்ட ஆடிட்டே இருந்தா மொத்தமா தோத்துருவீங்க. எதிராளிக்கும் சூழலுக்கும் எல்லாத்துக்கும் சேர்த்து ஆடணும். அதல்லாம் எல்லாருக்கும் எல்லா நேரமும் நடந்திராது. இந்தா இவ திட்டுனா. நானும் பேன்னு முழிச்சுட்டு நின்னேன். அவ்வளத்தையும் சொல்லிட்டு நாளைக்கு கோயிலுக்கு வாங்க பேசணும்னுட்டு போய்ட்டா தம்பி. எதிர்பாப்பீங்களா சொல்லுங்க. அந்த வார்த்தை அவ சொல்லலைன்னா மறு நாள்ல்ல இருந்து அவ தெரு பக்கம் கூட போய்ருக்கமாட்டேன். அவ்ளோ வீரம் ஆம்ப்ளைக்கு. “

வெயில்தாழ்ந்து நிழல் இறங்கியிருந்தது. நேரம் கடந்ததே தெரியவில்லை. மொபைலை எடுத்துப்பார்த்தான். மணி மூன்றைத்தாண்டியிருந்தது. நந்துவின் பிளான் படி இன்னேரத்திற்கு அதிராம்பட்டினத்தைத் தாண்டி மல்லிப்பட்டினம் போயிருக்கவேண்டும் இருட்டும்போது திருச்செந்தூர் அடைந்தால் மாலை கடலில் கால் நனைக்க நினைத்திருந்தான். ஆனாலும் பயணங்கள் தொலைவுகளைவிட மனிதர்களுக்காகத்தானே. இந்தக் கதையை முழுதுமாக கேட்டுவிட்டே கிளம்பலாம். தாமதமானால் அதிராம்பட்ட்டினத்தில் எதாவது லாட்ஜில் இரவைக்கழிக்கலாம். குறுஞ்செய்தியும் கடைக்காரர் கதையும் சேர்ந்து ரணங்களைத் தோண்டிவிட்டிருந்தது. இரவுக்கு எதாவது குடித்தால் நன்றாக இருக்கும். மது விஷம்தான். ஆனாலும் உள்ளிருக்கும் சில நினைவுகளைக் கொல்வதற்கு ஆபத்திலாத விஷம்.

“போனேன் பாத்துக்கங்க. நல்ல பவுடர் அடிச்சு கர்ச்சீப்ல பவுடர் மடக்கி நெத்தில துன்னூறெல்லாம் பூசி. போனதும் அடிச்சா பாருங்க நெத்தியடி எங்கப்பாட்ட பேச முடியுமா உன்னாலன்னா. ஊரையே எரிச்சுப்புடுவானுக தம்பி. மோசமான ஆளுக புள்ளமுழிக்கமுழி பேளமுழிக்குன்னு தாய்க்கு தெரியாதா. நான் நீங்க கூப்டா வர்றேன். எதாவது வேலையப்பாத்துவைங்க வெளியூர்ல. மொத்தமா போய்ட்லாம்னா. நான் அதெல்லாம் யோசிச்சிருக்கவே இல்லதம்பி. பொம்பள மனசு பாருங்க. நமக்கு கண்ணு கழுத்துக்கீழையே நின்னுபோகுது பாத்துகிடுங்க. அவங்க மொத்த ஒலகத்தையும் மொத்த எதிர்காலத்தையும் ஒரே பார்வைல பாத்துப்புட்றாங்க தம்பி. அது நமக்கு என்னைக்கும் ஆம்ப்ளையா இருக்கவரைக்கும் வரவே வராது. “

நந்து பேச்சற்று நின்றுகொண்டிருந்தான். தொண்டை வறண்டதுபோல் இருந்தது. சிகரெட் தேவையாயிருந்தது. ஆனாலும் திடீர் மரியாதை மனதுக்குள் எழுந்திருந்தது. அவர் முன் ஊத சங்கடமாக இருந்தது. அசைந்து மீண்டும் அமர்ந்தான்.

“அப்புறம் அப்பப்ப கோயில்ல பாத்துகிடுவோம். டீக்கடைல நின்னு தம் அடிச்சுட்டு இருப்பேன். அவ போகும்போது டக்குன்னு தம்ம மறைப்பேன். எரிக்கிறாப்ல பாப்பா. டப்புனு கீழ போட்டுட்டு கேனத்தனமா ஈஈன்னு இளிப்பேன். லைட்டா சிரிப்பா ஓரமா உதட்டும் கண்ணுக்கும் நடுவில மட்டும். இப்பமாதிரி அப்பல்லாம் சிகரேட்டொண்ணூம் ஆளுக்கு ரெண்டு கைல வச்சுட்டு சுத்திறதில்ல தம்பி. அதெல்லாம் ஊருக்கு அடங்காத வீட்டுக்கும் அடங்காத கிறுக்கனுக மட்டும்தான் சிகரெட்டு தண்ணியெல்லாம். வில்லனுக அடையாளம். இப்ப எங்க உங்க ஹீரோக்களே டாஸ்மாக்லதான் குடும்பமே நடத்துறானுக.”

“கல்யாணம் எப்படிண்ணே.. அதே மாதிரி தீப்பந்தத எடுத்துட்டு வயக்காட்டுல துரத்துனாங்களா”
கேட்டவுடன் நாக்கைகடித்துக்கொண்டான். கேட்டிருக்கக்கூடாது மரியாதையை மீறியதுபோல் இருந்தது. கூடவே அதிக உரிமை எடுத்துக்கொண்டதுபோல

“அதெல்லாம் இல்ல தம்பி. தூத்துக்குடில வேலை கிடைச்சு போய்ட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு வந்து ஊருக்கு திரும்பும்போது இவள கூப்டேன். சரி வர்றேன்னா. கூட்டிட்டுப் போய்ட்டேன். அவ்ளொதான். போன இடத்துலையே நண்பர்கள் சூழ கல்யாணம். அப்டியே வாழ்க்கை போய்ச்சு கொஞ்ச வருசம்..

“உங்க வீட்ல அவங்க வீட்ல எதும் பிரச்சினை வர்லியாண்ணே. இந்தா இருக்கு தூத்துக்குடி விரட்டி வந்திருப்பாங்களே”

“அந்தக்கதையெல்லாம் இப்ப எதுக்கு தம்பி நல்லத மட்டும் நினைப்பமே. கேட்கணும் தம்பி கேட்டாத்தான் கிடைக்கும். இல்லைன்னு சொன்னா போக தயாரா இருக்கணும். குழப்பத்தில இருக்கிற மாதிரி தெரிஞ்சா கூட நிக்க யோசிக்கக்கூடாது. ஆனா தம்பி தொழில் முக்கியம். காதலிக்க ஆட்க போதும் , ஆனா காசு வேணும் தம்பி வாழ”

காசுக்கெண்ணண்ணே. முத தடவ இவள பாக்க முன்னாடியே நல்ல வேலை. நல்ல கம்பெனி, நல்ல சம்பளம்.. அதாச்சுண்ணே எட்டுவருசத்துக்கு மேல. அதென்னமொ நீங்க காசு முக்கியம்னு இப்ப சொல்லுதீங்க. ஆனா அதுவரைக்கும் எனக்கு யார்மேலையும் தோணவே இல்லைன்னே அதான் விசயம். அதுக்கு முன்னாடி தோணியிருந்தா நீங்க சொல்றதெல்லாம் யோசிச்சிருப்பேன்னு வைங்க. ஆனா இவதான் மொதல்ல. இவளுக்கு முன்னாடியும் பிரண்ட்ஸ்ல ஆம்ப்ள பொம்பள வித்தியாசமில்லாம கூட்டம் இருந்துது. ஆனா யார் மேலையும் தோணாதது இவ மேல தோணுனதுதாம்ணே ஆச்சர்யம். அதான் இவள விட மனசில்ல. அப்புறம் கூட பாருங்க இன்னைய கணக்குக்கு ஏழுவருசத்துக்கு மேலையே இருக்கும். இப்பவும் அதுக்கப்புறம் வேற எந்த பொண்ணு மேலையும் தோணலைன்னா பாத்துக்கங்களேன். என்னவோ அந்த ஆறூமாசத்துலையே மொத்த வாழ்க்கையும் வாழ்ந்துட்டாப்ல. பெருசா கூட ஒண்ணுமில்ல. சும்மா வருவா போவா. பேசிட்டு இருப்போம். இருபத்து நாலுமணி நேரத்துல பத்துமணி நேரம் ஒரே ஆபிஸு. வீட்டுக்குப் போறபாதைல கம்பெனி பஸ்ஸு வீட்டுக்குப்போனதும் ஒரே எஸ்ஸெமெஸ் மழை. டெய்லி ஒரு தடவையாவது போனு. இருபத்து நாலுமணி நேரத்துல இருபது மணி நேரம் அவகூடையே இருந்தாப்ல ஒரு மயக்கம். ஆனாலும் போதலை. இதுல நமக்கு என்னிக்கு போதும்னு தோணிருக்கு சொல்லுங்க. திருப்பி யோசிச்சுப்பார்த்தா சின்ன சின்ன விசயங்கள்ளெல்லாம் கூட நியாபகம் வருதுண்ணே. ஜன்னல் ப்ரேம்ல அவ முகம் மட்டும். அதுல காத்துல ஆட்ற சின்ன ஜிமிக்கி. ஜன்னல் கண்ணாடில பிரதிபலிக்கிற அந்த குட்டி மூக்குத்தி அவளோட அந்த வாசம். குரல் இப்பதாண்ணே மறக்க ஆரம்பிச்சிருக்கு. மொதல்ல மறக்குறது குரல்தானாமே. பயமா இருக்குண்ணே இதெல்லாம் மறக்காம இருக்கவாது எங்கியாவது எழுதி வைக்கணும்ணே

நந்துவுக்கு மூச்சிரைத்தது.” எழுதுறது மறக்காம இருக்கவா மறக்குறதுக்கான்னு தெரியல. சின்ன சின்ன சம்பவங்களெல்லாம் எழுதன்ப்புறம் மறந்துட்றாப்ல தோணுது. எழுதும்போது நியாபகத்துல இருக்குன்னு தெரியாத சின்ன சின்னவிசயமெல்லாம் நியாபகம் வருது. நிறைய யோசிக்கறேன். கொஞ்சமா எழுதுறேன். ஆனாலும் என்னவோ கிடந்து உறுத்திட்டே இருக்கு. என்ன தப்பு எங்க மிஸ் பண்ணேன் எதுக்காக காதலிக்க ஆரம்பிச்சேன். ஒரே குழப்பம். தூங்கவிடாம கிடந்து உழப்புது. அதுக்குண்ணே கொஞ்சமாவாது குடிக்க வேண்டியிருக்கு பாத்துக்கங்க நைட்ல. ஆனா குடிச்சா இன்னும் கூர்மையா நியாபகம் வருது. போன் பண்ணேன் மெசேஜ் பண்ணேன்ன்னு எதையாவது பண்ணிவச்சிட்றேன். நேத்துகூட பாருங்க குடிச்சுட்டு மெசேஜ் அனுப்பி தொலைச்சிருக்கேன். திட்டி வச்சிருக்கா மறுபடியும். புத்திவரும்ன்றீங்க… ம்ம்ம்ஹும். மறுபடியும் இன்னொரு நாள் நியாபகத்துகாக குடிக்கணும். குடிச்சப்புறம் மறுபடி நியாபகம் வரும். பேச்சு திட்டு. தப்பு பண்றேன்னு தெரியுது. மூளையும் இதயத்துக்கும் கிடந்து அலைபாயுதுண்ணே தர்க்கம். அத கன்றோல் பண்ண முடிஞ்சா நல்லாருக்கும்”

“ இன்னொரு எளனி வெட்டவா. பொழுதே சாஞ்சிருச்சு. இருட்டப்ப்போகுது. வேணா எங்கூட்ல தங்குறீங்களா. நானும் இவளும்தான். புள்ளையெல்லாம் ஒண்ணும் ஆண்டவன் குடுக்கல. தங்கிக்கங்க. நல்லா சமைப்பா காலைல கூட போகலாம்” அவர் பேச்சை மாற்ற முயற்சிப்பது அப்பட்டமாக தெரிந்தது. வீடு மிகச்சிறியதாக இருக்கலாம். இருவரே கஷ்டப்படுவதாக இருக்கலாம். எந்த கிராமத்திலிருந்தோ எங்கியோ பிழைக்கப்போனவர் இத்தனை வயதில் இந்த பெரிய கூட்டமில்லாத தார்ச்சாலை ஓரத்து தார்ப்பாயில் ஒண்டியிருக்க எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். அதையெல்லாம் மீறி இன்னும் துன்பமாக்க நந்து விரும்பவில்லை. கூடவே அவர் கிளம்பிவிடக்கூடாது என்றும் இருந்தது. சொல்வதில் ஒரு ஆசுவாசம். யாரிடமும் சொல்லாத கதைகளை மறுநாள் சந்திக்காத நபர்களிடம் சொல்லிச் செல்வதில் கிடைக்கும் சுதந்திரம்.

“இல்லண்ணே இருக்கட்டும். ஒரு தம் அடிச்சுக்கவா”

“இதென்ன கேட்டுகிட்டு. அடிச்சுக்கங்க தம்பி நீங்க என் புள்ள மாதிரி”

“அதாண்ணே தயக்கமாருக்கு.”

அவர் சிரித்தார். நந்து அடுத்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான். எட்டுமணி நேரப்பயணத்தில் எதுவும் தெரியாத வலிகள் இப்பொழுது மெல்ல எழுந்து வருவதைப்போல் இருந்தது. கணக்கின் படி சென்றிருந்தால் வெளிச்சத்திலேயே திருச்செந்தூர் கால் நனைத்து இரவுக்குள் ஊர் போயிருக்க முடியும். இந்த இரவில் வேகம் சாத்தியமில்லை. மெல்லமாகத்தான் ஓட்டியாகவேண்டும். பைக் சீட்டில் வெப்பம் தணிப்பதற்காக புதிதாக போட்டிருந்த கூல்மெஷ் வெப்பத்தை இறக்கிய தொடை கோடுகள் நெருப்பைப்போல் எரிந்தன. இன்னும் நான்கிலிருந்து ஆறு மணி நேரம் இருட்டில் போகவேண்டியிருக்கலாம்.

“ கண்டுபிடிச்சிட்டாங்க தம்பி” கடைக்காரர் குரலில் நந்துவின் சிந்தனைகளை அறுத்தார். “ எனக்குன்னு அப்பாம்மால்லாம் யாரும் கிடையாது பாத்துக்கங்க. கோயில்மாடுமாதிரி. கிடைச்ச வேலைய பாத்துட்டு கிடந்தேன். இவ வந்தப்புறம்தான் சொந்தம்னு ஒண்ணே தெரிஞ்சுது. தூத்துக்குடில வேலை பாத்துட்டு இருந்த இடத்த கண்டுபிடிச்சுட்டாங்க. வெல்டிங்க் பட்டறை. பழைய இரும்புக்கட்டிலு பாத்திருக்கீங்களா. சட்டத்துல பிளாஸ்டிக் ஒயர் கட்டி வருமே அந்த மாதிரி ஒரு பர்னிச்சர்கடைக்கு சட்டம் செஞ்சு குடுக்கிற வேலை. அறுக்க பத்தவைக்கன்னு ஆயுதம் பொழங்குற இடம். நானும் நல்ல தாட்டியமா ஓடியாடி வேலை செய்யுறவனாச்சா நல்லா ஒட்டிக்கிட்டேன். அதையும் கண்டுபிடிச்சு வந்துட்டானுக. இவ அப்பம்மாரு. சித்தப்பன் பெரியப்பன்னு நாலு பேரு. எனக்கென்ன பயம்னா எளவுக்க வீட்டுல போய் இவள எதும் செஞ்சிருக்கக்கூடாதேன்னு. வீடும் கடைக்கு பொறத்தால ரெண்டு தெரு தள்ளித்தான். வந்த உடனே எடுப்பிடிக்கு கிடந்த பயலுவள விரட்டிவிட்டு செமத்தியான அடி.அடி விழுது நான் அழுதுட்டு கிடக்கேன். பட்டறை ரோட்லருந்து உள்ள தள்ளி சந்துக்குள்ளன்றதால ஆளும் கிடையாது. பக்கத்து கடை பயலுவ வந்துட்டானுவ. எங்க… சட்டருக்கு வெளிய நின்னு யோவ் யேய்னு கத்தறானுவளே தவிர எவனுக்கும் உள்ள வர தைரியமில்ல. வந்தா நமக்கும் அடிவிழும்னு பயம். அவ்ளொ வீரம் இந்த ஆம்ப்ளைங்களுக்கு. அதுல இவ பெரியப்பன் சட்டத்துக்கு எடுத்து வச்சிருருந்த ராடெடுத்து ஓங்கி ஒரு அடி முட்டில ரெண்டு முட்டிலையும். சவத்துக்க தேங்கா உடைஞ்சாப்ல நொச்சுனு ஒரு சவுண்டு. எங்க. கண்ணு இருட்டிட்டு வந்துட்டு முழிச்சு பாத்தா இவ நிக்கா. எங்கருந்து வந்தா எப்படி தெரிஞ்சுது எப்படி உள்ள வந்தா எதுவும் தெரியாது. ஒத்தக்கைல இரும்பு கம்பி பாத்துக்கங்க இந்தா இத்தா தண்டிக்கு. கட்டிலு காலுக்கு வைக்கிறது. புடவைய ஒத்த சைடுக்கு தூக்கிச் சொருவிருக்கா தூக்கப்போறவ வாரியல்லோட நிக்கிறவளாட்டம் கம்பியோட நிக்கா தம்பி எனக்கும் அப்பனுகளுக்கும் நடுவில பேய் மாதிரி. தெய்வம் தம்பி. காளி மாதிரி. இசக்கியம்மன் மாதிரி. காலொடைஞ்சு கிடக்கிற எனக்கே கொலை நடுங்கிருச்சு… சாமீ அவள எப்பவும் அப்படி பாத்ததில்ல அத்தன வருசத்துல அதுக்கப்புறமும். அப்பனுக எம்மாத்திரம் கெட்டவார்த்தையா திட்டுட்டு வச்சுட்டு கூட்டத்த புகுந்து போய்ட்டானுக. கம்பியப்போட்டுட்டு என் தலையத் தூக்கி மடில வச்சுட்டு வலிக்குதான்னா பாருங்க. என்னா கண்ணூங்கிறீங்க. என் தாயே மயானத்துல இருந்து இறங்கி வந்து முலையூட்ட உக்காந்தாப்ல அப்டி ஒரு கண்ணு. பயலுக தூக்கி அள்ளிப்போட்டு ஆஸ்பிட்டல்ல போட்டானுக. இவ பீயள்ளி மூத்தரம் துடைச்சு காப்பாத்துனா பாத்துக்கங்க. அதாச்சு இருவது வருசத்துக்கு மேல. புள்ளையா குட்டியா. தைய மிசினோட்டித்தான் என்னைய காப்பாத்திட்டு இருக்கா. நானும் இருக்கேன் தெண்டத்துக்கு சாகாம.

நந்துவுக்கு இதயம் நடுங்கியது. அத்தனை பிரச்சினைகளும் அத்தனை குழப்பங்களும் மறைந்து தெளிவானது போல் இருந்தது. உடல் நடுங்கியது. ஆனாலும் ஒரு தெளிவு. இருட்டத்தொடங்கியிருந்தது. மணி பார்த்தான் ஆறரை ஆகியிருந்தது. நான்கு மணி நேரத்துக்கு மேலாக கதைபேசிக்கொண்டிருக்கிறோம் என்பது உறைத்தது.

“இந்தக்கடை கூட அவ போட்டு குடுத்தது பாத்துகிடுங்க. ஊருக்குள்ள எங்கியாவது போட்டா வேலை செய்யவேண்டி வருமாம் நானு. அதுக்குன்னு ஒதுக்குப்புறமா போட்டுக்குடுத்துருக்கா. லோடு வாங்குறெல்லாம் அவதான். சும்மா உக்காந்திருப்பேன் பாத்துக்கங்க நாள் பூரா. பதினொண்ணுல இருந்து இரண்டு வரைக்கும் இந்த ரோட்ல போறவங்க கடையப்பாத்தா ஷாக் ஆகித்தான் நிக்கவே செய்வாங்க. அதுலையும் லாபந்தான் பாருங்க. நின்னவங்க சும்மாவாச்சும் எதாது வாங்கணுமேன்னு எளனிவாங்கி குடிப்பாங்க. சிகரெட்டு அது இதுன்னு வச்சிருந்தேன் முன்னாடி. சின்னப்பசங்க வாங்கி நின்னு ஏம்முன்னாடி ஊதுறது அவளுக்கு மரியாதையா இல்லியாம் பாருங்க. அதுக்காகவே அதெல்லாம் விக்கக்கூடாதுன்னுட்டான். அவ சொல்லுக்கு என்னத்துக்கு மறுபேச்சு பேசிட்டுட்டு நானும் கேட்டுகிட்டேன்”

“சாரிண்ணே”

“ஹா ஹா எதுக்கு தம்பி சாரியெல்லாம். நல்லவேளை அவ நடுவில வரல. வந்துருந்தா ஒரு வேளை காளி அவதாரத்த நீங்களும் பாத்திருப்பீங்களோ என்னவோ. ஒண்ணு மட்டும் சொல்றேன் தம்பி. நீங்க யாரு, உங்களுக்கு போன்ல திட்டுன பாப்பா யாரு எதும் தெரியல. ஆனாலும் சொல்லுதேன். அவங்க விட்றச்சொன்னா விட்ருங்க தம்பி. பொண்ணுங்கல்லாம் ஆத்துத்தண்ணிமாதிரி. நாம நக்கிக்குடிக்கிறதுக்காக இல்ல. அவங்களுக்கு உலகத்துல நிறைய வேலையிருக்கு தம்பி. எந்த வயலுக்கு பாயணும் எந்த கூழாங்கல்ல உருட்டி எந்த கரைல சேக்கணும் எந்த கடல்ல எந்த மீனுக்குப் போய் கலக்கணும்னு அவங்களுக்குள்ளேயே தெரிஞ்சிருக்கும். நமக்கெல்லாம் அது புரியாது. வாலாட்டிட்டு போய்ருங்க. அணைக்கட்டெல்லாம் உடைச்சுட்டு வந்துரும் தம்பி ஆறு. கிடக்கிற ஆறேல்லாம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு கிடக்கதா சொல்வானுக. ஆனா இஷ்டப்பட்ட்டு கிடக்குது தம்பி. நீங்க ஒண்ணும் பண்ணமுடியாது. அவங்க போக்குல உட்ருங்க. உங்களுக்குன்னு ஒரு நதி எங்கிருந்தாது கிளம்பியிருக்கும். எல்லா குப்பையையும் அடிச்சு ஒதுக்கிட்டு உங்களுக்கு தாகம் தீக்கண்ணே கிளம்பி வந்துட்டு இருக்கும் தம்பி. சும்மா குடிச்சேன் குடிக்கலைன்னு கதை சொல்லிட்டு ஒரு பொண்ணப்போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்காதீங்க தம்பி புரியுதுங்களா. நான் சொல்லக்கூடாது. ஆனாலும் சொல்தேன்”

கடைக்காரர் பொறிந்து தள்ளியது போல் இருந்தது. மழையடித்து ஓய்ந்தது போல. மூச்சிரைக்காமல். காளியை நேரில் பார்த்தவர்க்ள் சொன்னால் சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

“ஆனாலும் எனக்கான நதி இவதான்னு தோணிட்டே இருக்குண்ணே”

கடைக்காரர் எதோ சொல்ல வாயெடுத்தார். தூரத்தில் பைக் வெளிச்சம் கண்டு நிறுத்திக்கொண்டார்.

“ என்னய்யா… இங்கியே இருந்திட்ட போல. வீட்டுக்கு வர ஆசையில்லையா” டிவியெஸ் பிப்டியில்வந்திறங்கியவருக்கு நல்ல திருத்தமான கண்கள். இசக்கியம்மனுக்கு வரைந்து வைத்ததுபோல. நெற்றியில் பழையகாலத்து ஒரு ரூபாய் போல பெரிய பொட்டு. சொல்வதற்கு முன்பாகவே கடைக்காரர் அவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்த மகாகாளி இவராகத்தான் இருக்கவேண்டும் என்று தெரிந்தது. வந்தவர் படபடவென கடையை மூடினார். பல ஆண்டு பழக்கத்தில் வந்த லாகவம். சாக்குவிரிப்பின் கீழ் இருந்த காசினை எண்ணாமல் மொத்தமாக அள்ளி அள்ளி கடைக்காரர் சட்டைப்பையில் திணித்தார். பிறகு இளனிகளை சாக்கோடு சேர்த்து கட்டி மேலே தார்ப்பாயைப் போர்த்தி நைலான் கயிறை குறுக்கும் நெடுக்குமாக கட்டினார். பிறகு பந்தலுக்கு நடப்பட்ட்டிருந்த கம்புகளை அசைத்து பிடுங்கி தார்ப்பாய் சாக்கு மூட்டையின் மீது மூடுமாறு போர்த்தி கம்புகளை எக்ஸ் வடிவில் மேலே நிரப்பினார். எக்ஸ்க்கு மையப்புள்ளியில் அருகில் கிடந்த ஒரு பெரிய பாறாங்கல். கூரைக்கு வெளியே அமர்ந்திருந்த கடைக்காரரை வலது கை அக்குள் வழியாக ஒரு கை முட்டிகளில் ஒரு கை. ஒரு பெருமூச்சு. டக்கென கடைக்காரரை தூக்கிவிட்டார். நந்து அசந்து போய் நின்றான். அந்தத் தருணத்திலேயே அங்கேயே அவர்காலில் விழுந்து எழவேண்டி எழுந்த வேட்கையை கட்டுப்படுத்திக்கொண்டான்.

நந்து என்ற ஒருத்தன் அங்கில்லாதது போலவே அந்த அம்மாள் அவரைத் தூக்கி வண்டியில் முன்பக்க இடைவெளியில் அமர்த்தினார்.

“யார் தம்பி… என்ன…” குரல் நல்ல அழுத்தமான குரல். மறந்து போன கெளரியின் குரல் நினைவுக்கு வந்ததுபோல் இருந்தது. கிட்டத்தட்ட இதே குரலில்தான் தைரியம் இல்லை என அவள் சொன்னது. இதே குரலில்தான் என்ன பெரிய தியாகின்னு நினைப்பா எனக்கேட்டது. இதே குரலில்தான்.

“கேட்குறன்ல”

“அட அவர ஏம்மா அதட்டுற. கடைக்கு வந்ததுதான். அப்டியே பேசிட்டே இருந்தேன். கூட உக்காந்திருச்சு. எனக்கும் பேச்சுத்துணைக்குன்னு பேசிட்டு இருந்தேன்.”

“ஆமா நீ எல்லாத்தையும் பேசி அப்டியே சாதிச்சிருவ. காலொடைஞ்ச காவியத்த புள்ளையாரு வியாசருக்கு சொல்லிட்டு இருந்தீங்களாக்கும் போய் மகாபாரதம் எழுதுறதுக்கு. போய் எழுதிக்க தம்ப்பி ஆனது ஆச்சு”

நந்து திடுக்கிட்டான். அவன் எழுதுவது இந்த அம்மாவுக்கு எந்தக்கணத்தில் எப்படி தெரிந்திருக்ககூடும்? “ போங்க தம்பி. வீடுபோய்ச்சேருங்க ஆயிரம் பேர் ஆயிரம் கதை சொல்வாங்க. அதையெல்லாம் கேட்டுட்டு எதாவது ஆத்துல விழுந்து அனாதையா போய்டடாதீங்க. உங்களுக்குன்னு எதாவது டம்ப்ளர்ல கிடச்சா உங்க விதி அவ்ளோதான்னு குடிச்சுட்டு கிடங்க தெரியுதா… ஆறெல்லாம் பெரியவிசயம். எல்லார் தலைக்கெல்லாம் படைச்சவன் எழுதல போங்க”

எதையுமே கேட்காமல் எதையுமே சொல்லாமல் இதுவரை கேட்ட சொல்லப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் இந்த அம்மாள் நிஜமாவே பேரன்னைதானா. நந்து உறைந்து நின்று கொண்டிருந்தான். அம்மாள் வண்டியை இலகுவாகத் திருப்பி ஊருக்குள் சென்றுகொண்டிருந்தார். அந்த வெளிச்சம் மறையும் வரை நின்றுகொண்டிருந்தான். பிறகு மொபைலை எடுத்து மெசேஜையும் கெளரியின் நம்பரையும் அழித்தான்.

வண்டியை எடுத்து அதிராம்பட்டினத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தான். முத்துப்பேட்டை ஊரைக்கடந்து சில கிலோமீட்டர் சென்றபிறகு திடீரேன உறைந்து வண்டியை ஒதுக்கி அந்த பாலத்தின் மீது சிகரெட் வேண்டி நிறுத்தினான். பாலத்திற்கு கீழே பாமினி ஆறு சன்னமாக ஓடிக்கொண்டிருந்தது.

[சிறுகதை] சாலமனின் பாடல்

பின்னூட்டமொன்றை இடுக

சென்னைப் புறநகரின் அந்த தேவாலயத்திற்குள் நந்து நுழைந்தபோது வெயில்தாழத்தொடங்கியிருந்தது. தூரத்துச் சுற்றுச் சுவர் பழுப்பேறிக்கிடந்தது. வேப்பமரங்கள் மெல்ல அசைந்துகொண்டிருந்தன. கால்கள் புதையும் மணலுக்குள் நடப்பது கடற்கரையில் நடக்கும் உணர்வைத்தந்தது. கிட்டத்தட்ட சில ஆண்டுகளுக்குப்பிறகு அந்த தேவாலயத்திற்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாள்களில் வெளி நாட்டுப்பயணம். அதற்கு முன்னதாக ஒருமுறையாவது ஜெஸ்ஸியைப்பார்க்கவேண்டும். அதுவும் இந்த குறிப்பிட்ட தேவாலயத்திலிருந்து. இது நந்துவும் ஜெஸ்ஸியும் முதல்முறை இணைந்து வந்த வழிப்பாட்டுத்தலம். அனேகமாக இந்த வெளிநாட்டுப்பயணம் முற்றிலுமாக இருவரையும் இரண்டு தனிமனிதர்களாக ஆக்கிவிடக்கூடும். இனி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை. கடைசி நாளைப்போல வாழும் வாழ்வின் கடைசியாய் கேட்கும் கேள்விகள் எதையாவது திருப்பிப்போட்டுவிடும் என நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது இல்லையா?

 

வேப்பமரத்தடியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி மஞ்சள் நிற ஆடையணிந்து விளையாடிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு அசைவிலும் அவள் கண்களில் சிரிப்பு பூத்தது. இரண்டு நிமிடங்களில் குறைந்தது நான்குமுறையாவது சிரித்தாள். வழக்காமன புன்முறுவலில்லை. கண்ணிலிருந்து தொடங்கி பல்வரிசைகள் வெளித்தெரிந்து அருகில் நடந்துசெல்பவர்களைத் திரும்ப வைக்கும் அளவு சப்தத்துடனான முழுச்சிரிப்பு. நந்துவுக்கு அவளைபார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் எனத்தோன்றியது. சந்திக்கும் நேரத்திற்கு ஐந்து நிமிடங்களே பாக்கியிருந்தன. அவளைச் சந்திக்குமுன் ஒருமுறை ஜெபம் செய்துவிட்டுப்போகும் எண்ணமும் இருந்தது. மனதை அசைத்து நந்து தேவாலயத்தை நோக்கி நடந்தான். உள்ளே போய் மரபெஞ்சில் அமர்ந்தான். ஆங்காங்கே ஒவ்வொருவர் மரபெஞ்சின் கீழ்கட்டையின் மீது முழங்காலிட்டு ஜெபித்துக்கொண்டிருந்தனர். இவனும் முழங்காலிட்டான். மனம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்றே வெடித்துக்கொண்டிருந்தது. குற்ற உணர்ச்சியாக இருந்தது. எழுந்தான். வெளியே நடந்தான்.

நீ வருவியா ஜெஸ்ஸி? என் மெசேஜ் பாத்தேன்னு தெரியும். கூப்டு வரச்சொல்லிருக்கலாம். போன் பண்ணா நீ கட் பண்ணியிருப்ப. அல்லது எடுத்தும் பேசியிருக்கலாம். பேசுனா கண்டிப்பா எதாவது திட்டிட்டு வரமாட்டேன்னு சொல்லியிருப்ப. வருவேன்னு கூட சொல்லியிருக்கலாம். ஆனா அந்த உறுதியான மறுப்பு அல்லது ஏற்பவிட இந்த குழப்பம் இந்த தவிப்பு இந்த காத்திருப்பு எனக்கு புடிச்சிருக்கு ஜெஸ்ஸி. இந்த வலியா சந்தோஷமான்னு சொல்லத் தெரியாத உணர்வு. வரமாட்டேன்னு தெரிஞ்சாலும் வந்திருந்தா எப்படி இருக்கும்ன்ற ஒரு நப்பாசை. இந்த பழமொழி கேட்ருப்பியே. ”எதுலையாவது முடிவெடுக்க முடியலைனா காசச் சுண்டி விடு, காசு பதில் சொல்லாட்டியும், காசு காத்துல இருக்கும்போது உங்க மனசு உங்க முடிவச் சொல்லிடும்”னு, கிட்டத்தட்ட மனசு பூரா நீ வந்துருவ வந்துருவன்னு வெடிக்குது. வரமாட்டான்னு மூளை சொல்லுது. ஆனா அதப்பத்தி கவலப்படாம வந்து உனக்காக காத்திருக்கிறதுலையும் ஒரு சந்தோஷம் இருக்கு ஜெஸ்ஸி.

போன் நம்பர வச்சுட்டு கால் பண்றதவிட மெசேஜ் பண்றதுல நிறைய அர்த்தம் இருக்கு ஜெஸ்ஸி. ஒண்ணு. நாம முதல்ல பேச ஆரம்பிச்சது எஸ்ஸெமெஸ் காலத்துல. அதோட ஆரம்ப கால நினைவுகள். ஒரு ரீவைண்ட் பட்டன் அடிச்சு அந்த ஆரம்ப நிமிசங்களுக்கே போன உணர்வு இருக்கு. அப்பல்லாம் ஒரு மெசேஜ் உனக்குக் கிடைச்சுதா இல்லையான்னு தெரியாம, மொபைல கைல வச்சுட்டு பதில் வர்றவர்றைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அதிகபட்சம் ஒரு நிமிசம். அதுக்குமேல போனா அங்க அதப் பண்ணேன். இங்க இந்த வேலையில இருந்தேன்னு ஒரு சமாதானம். என்ன… இப்ப உன் மொபைலுக்கு எப்ப வருது, நீ எப்ப வாசிக்கிற எல்லாம் வாட்சப் காட்டிக்குடுக்குது. ஆனா பதில் மட்டும் வர்றதில்லை. ரெண்டாவது காரணம், அழைக்கிறது ஈசி, நீ எடுத்து பேசவும் செய்யலாம். ஆனா அதுல ஒரு திணிப்பு இருக்கு. அடிக்கிற போன எடுக்கவைக்கிற தொழில் நுட்ப காலத்தோட குறுகுறுப்பு. ஆனா மெசேஜ்  அப்டியில்ல. வந்தா வரட்டும்னு இருக்கலாம். அத வாசிக்கிறதோட கைகழுவிட்டு போய்டலாம். ரிப்ளை பண்ணியே ஆகணும்ன்றதில்லை. உண்மையிலேயே விருப்பம் இருந்தா மட்டும்தான் ரிப்ளை பண்ணுவோம். எனக்கு அது தெரியணும் ஜெஸ்ஸி. உண்மையிலேயே உன் விருப்பம் என்னன்னு தெரியணும்.

 

நந்து மணல்பரப்பைக் கடந்து வேப்பமரத்தடியின் சிமெண்ட் பெஞ்சுகளை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.இரண்டு நிமிடம் நடப்பதற்குள்ளாவே மூளை சொற்களை  அள்ளி எறிந்துகொண்டிருந்தது.  நினைவுகளை. அதைப்பற்றி பழைய அலுவலகத்தின் வலைத்தளத்தில் எழுதிக்குவித்த கவிதைகளை, அதையொட்டி உருவான நண்பர்களை, அவர்களின் சூழலை. உண்மையில் ஜெஸ்ஸிதான் என்றும் நந்துவின் எழுத்தாக இருக்கிறாள். தேவதைக்கவிதைகள், மழைக்காலமாலை நேரம், பிறழ்வுகள், அல்லது…. தூரத்தில் சிமெண்ட்பெஞ்சில் நீல உடையில் ஜெஸ்ஸி. மனம் நடுங்கத்தொடங்கியது.

O

”ஹேய் ஹாய்….” நந்து தன்னை மெல்ல கட்டுப்படுத்த முயற்சி செய்தான், முடியவில்லை. கத்திவிட்டதாகத் தோன்றியது.

“ஹாய்”

ஜெஸ்ஸியிடம் அதே அழுத்தம். அதே மோன நிலை முகம். எதையும் வெளிப்படுத்திவிடக்கூடாதென இறுக்கமாக காதுகளையும் வானத்தையும் நோக்கும் கண்கள். இவ உன்ன மறுபடியும் பைத்தியமடிக்கப்போறா நந்து கேர்புல்கேர்புல்ல்.

” நீ… நீங்க.. நீ… வருவேன்னு.. வருவீங்கன்னு..”

“ நீன்னே சொல்லலாம் நந்து. இன்னும் அந்த அளவுக்கு மாறிடல”

“அப்ப மாறியிருக்கன்னு உனக்கே தெரியுதுல்ல ஜெஸ்ஸி?”

“ நான் மாறல நந்து. நான் அப்டியேத்தான் இருக்கேன், நீ மாறிட்ட. உன் பேச்சு மாறிடுச்சு. உன் கண்ணு இப்போ தப்பு தப்பா பாக்குது. அப்பப குடிச்சுட்டு எதாவது மொழம் மொழமா டைப் பண்ணி மெசேஜ் அனுப்புற. இப்ப கொஞ்ச நாளா அது அதிகமாகியிருக்கு”

”மறுபடியும் சண்டை போடத்தான் வந்தியா ஜெஸ்ஸி?”

“பாத்தியா… கத்துற… குரல் உயர்த்துனா நீ சொல்றது சரின்னு ஆகிடாது நந்து. நீ பண்ணது எதும் சரியில்ல. நீ சொல்ற வார்த்தைகள். அப்புறம் இந்த மெசேஜஸ். இது உனக்கு  நேர் சொல்லணும்னுதான் வந்தேன். ப்ளீஸ். லைஃப் ஹேஸ் டூ மூவ் ஆன். உலகத்துல நான் மட்டும் பொண்ணு இல்ல”

“இந்த ஈரவெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும்.”

“கத்தாத நந்து. வார்த்தைகள யோசிச்சு பேசு” ”

” நான் உன்னக் கட்டாயப்படுத்தல ஜெஸ்ஸி. அப்பவும் சரி. இப்பவும் சரி. நீ என்ன லவ் பண்ணனும், என்கூடையே இருக்கணும். எங்கையும் போய்டக்கூடாதுன்னெல்லாம் உன்ன அழுத்தம் குடுக்கவே இல்லை. நான் அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் பேசுறதெல்லாம் ஒரே விஷயம்தான். என் காதல். நான் எவ்வளவு உன்கூட இருக்க ஆசைப்பட்றேன்றது. என் வாழ்க்கைக்கு நீ எவ்வளவு முக்கியம்ன்றது. திரும்பத் திரும்ப நான் சொல்றது. அதரசிச்சுத்தான் நீயும் ஒத்துகிட்ட. அப்புறம் சின்னச் சின்ன சண்டைகள். மறுபடி போய்ட்ட. மறுபடி வந்த. மறுபடி போய்ட்ட. இன்னைக்கு மறுபடி வந்துருக்க”

”மறுபடி போய்டுவேன்னு சொல்றியா நந்து?”

குரலில் வித்தியாசம் தெரிந்தது. நந்து மொத்தமாய் தளர்ந்தான். அவன் வேகம் கோபம் அத்தனையும் ஒரு நொடியில் ஒருவார்த்தையில் ஒரு சொல்லின் அசைவில். கால் தளர்ந்து சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். மூச்சிறைத்தது. ஜெஸ்ஸியும் அமர்ந்தாள். கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்தாள்.

 

“தண்ணி வேணுமா?”

“ம்ம்ம்ஹும்”

“ம்”

 

மெளனம் கனத்துக்கிடந்தது. இருவரும் எதிரெதிர் பாதை பார்த்து அமர்ந்திருந்தனர். உண்மையில் ஜெஸ்ஸி அமர்ந்திருந்த ஓரத்திலிருந்து பார்த்தால் தேவாலயத்தின் மொத்த பிரகாரத்தையும் பார்க்கலாம். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருப்பாள். அந்த மஞ்சள் உடைச் சிறுமி பற்றி பேசலாமா? நந்து தலைதூக்கிப் பார்த்தால் காம்பவுண்ட் சுவர் பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்ததும் மறைத்தது. பேருந்துகளும் அதிக வழித்தடமில்லாத பாதை. திரும்பி இந்தப்பக்கம் பார்த்தான். ஜெஸ்ஸியின் கூந்தல் காற்றில் அசைந்துகொண்டிருந்தது. பெண்கள் அழகுறும் தருணம் என ஒன்று கிடையவே கிடையாது ஜெஸ்ஸி, காதலுடன் பார்க்கும் எல்லா ஆணுக்கும் காதலுடன் பார்க்கப்படும் அவனவன் காதலி அத்தருணத்தில் அழகாகத்தெரிகிறாள். அதற்கு வயது காலம் பொழுது எதுவும் கிடையாது ஜெஸ்ஸி.

 

திடுக்கென திரும்பினாள். கண்கள் இரண்டு நொடிகள் நேர்பார்வையில் மோதி விலகின. ஜெஸ்ஸியின் கண்கள் கொஞ்சம் வீங்கியிருப்பதாகப்பட்டது. கண்மைகள் கரைந்தும் உறைந்தும் வழக்கத்துக்கு மாறாக ஒழுங்கில்லாமல் இருந்தன. நீல நிற சுடிதார். என்னவோ எம்ஜியார் காலத்து போர் உடைகளைப்போல. கேட்டால் இதற்கொரு பெயர், அதன் வரலாறு முதலில் அணிந்த பெண் என எல்லாவற்றிற்கும் அவளிடம் எதாவது கதையிருக்கும். ஆனால் இன்று இந்தத்தருணத்தில் அந்தக் கதைகளையெல்லாம் சொல்வாளா என்று தெரியாது. சொன்னாலும் கதை கேட்கும் மனநிலையில், அந்தக் கேள்வியைக் கேட்கும் மன நிலையில் நந்து இல்லை.

 

“அந்தக்குழந்தைகளப் பாத்தியா நந்து?”

“ம்ம்ம். அந்த மஞ்சக்கலர்…”

”அதில்ல. அவளுக்குப் பக்கத்துல. நீலக்கலர் சட்டை. கருப்பு டவுசர். படிய வாருன தலை. குட்டியூண்டு விபூதி. க்யூட்ல”

“ம்ம். அந்தப்பொண்ணு கூடத்தான். மஞ்சள் சுடிதார். மெலிசான செயின். அந்த சிலுவைடாலர அப்பப்ப கடிச்சுக்குது பாரு. வரும்போது அந்தக்குழந்தைய பாத்து நின்னுட்டு இருந்துதான் நேரமாகிடுச்சு. ஆக்சுவலி, அந்தக்குழந்தையப்பாக்கும்போது உன்ன மாதிரியே….”

“அதேதான் நந்து” ஜெஸ்ஸியின் கண்கள் அலைபாய ஆரம்பித்தன. மண்ணுக்கு. நிமிர்ந்து நந்துவின் வலதுகாதுக்கு.பின் இடதுகாதுக்கு. இருமுறை நந்துவின் விழிகளுக்கு. பிறகு திரும்பி அந்தக்குழந்தைகளுக்கு.

“அதேதான் நந்து. எனக்கும் அந்தப்பையனப்பாக்கும்போது உன் நியாபகம்தான் வருது.  நீதான் இந்த மாதிரி எப்பவும் நீலக்கலர்லையே விதவிதமான ஷேட்ஸ் எடுத்து அடுக்கிவைச்சிருப்ப. அதுவும் ஒரு மாசத்துக்கு அப்புறம் எல்லா ஷேடும் ஒரே கண்றாவி கலருக்கு வந்துரும்”

நந்து சிரித்துக்கொண்டான். இவளுக்கு நினைவிருக்கிறது. நினைவில் நான் இருக்கிறேன். மிக நுணுக்கமான பழைய நினைவுகள் இன்னும் இவளுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. நாமாவது இணையம் நண்பர்கள் மற்றும் எதாவது எழுதிக்கொண்டிருக்கிறோம். யாரிடமும் சொல்லாமல், எந்த விதத்திலும் இறக்கிவைக்காமல் இவளும் நினைவுகளைச் சுமந்துகொண்டுதான் அலைகிறாள். இவளின் வலிகளை நாம் அறியவில்லை. அறியமுடிவதில்லை. அல்லது இவள் நம்மை அறியவிடவில்லை. முட்டாளாக, நாட்களை,  நிமிடங்களை, வருடங்களை அழித்துகொண்டிருந்தாய். நந்து நந்து நந்து . கவனம் கவனம் கவனம்.

”நடிக்கிறியா ஜெஸ்ஸி?”

தப்பு. தப்பான வார்த்தை. சொல்லிட்ட நந்து. இத நீ சொல்லிருக்கக்கூடாது. கோவப்படப்போறா. எதையாவது எடுத்து எறியப்போறா. அல்லது கிளம்பிப் போகப்போறா. முட்டாள் முட்டாள்.

“எதச் சொல்ற நந்து. என் காதலையா? இல்ல அந்தப்பையனப்பாத்தா உன் நியாபகம் வருதுன்றதையா? இல்ல என் நியாபகத்துல எப்பவுமே நீதான் இருக்கேன்றதையா? என் பிரச்சினை உனக்குத்தெரியும். ஏன் விலகணும்னு ஆசைப்பட்டேன்னும் உனக்குத் தெரியும். அப்டியும் எப்படி நந்து நான் நடிக்கிறேன்னு சொல்லுவ. எதவச்சு நான் நடிக்கிறேன்னு சொன்ன. மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணல. ஆனா இன்னைக்கு வரைக்கும் உன்ன பிளாக் பண்ணல. நீ எதோ நாட்டுக்குப்போறன்னதும் பதறி அடிச்சு கிளம்பி வந்திருக்கேன். இன்னைக்கு என்ன பொண்ணு பாக்க வர்றாங்க. ஆனா நான் இங்க வந்து உக்காருந்துக்கேன். உன் கூட. உன்னப்பாக்கணும்னு. உன்கிட்ட பேசணும்னு. இதச் சொல்லாமப் போய்டலாம்னு நினைச்சேன். இவ்வளவு நாள் இருந்த வலி இனியும் இருந்துட்டு போகட்டும்னு நினைச்சேன். உன் கல்யாணத்த நீ முடிவு பண்ற நந்து. ஆனா என் கல்யாணம் அப்டியில்ல. யாரோ சொல்லி, யாரோ கேட்டு, எனக்கு வேண்டியவங்க முடிவு செஞ்சு, நான் தலையாட்டுறது மட்டும்தான் செய்யமுடியும். குறைஞ்சபட்சம் உன் நியாபகத்தக் கிளப்புற யாரையாவது பாத்தா வேண்டாம்னு தலையாட்டலாம் அவ்வளவுதான் என் சுதந்திரம். உன்ன நான் மறக்கல நந்து. ஆனா மறந்துட்டதா சொல்லிக்க முடியும். உன்ன நியாபகப்படுத்துற எல்லாத்துல இருந்தும் விலகமுடியும். நியாபகப்படுத்தாத ஒவ்வொண்ணா சேர்ந்து என் கூடாரத்தைக் கட்டிக்கமுடியும். யூ நோ… இதுக்கு மேல நான் இருக்க விரும்பல. நான் கிளம்புறேன்”

எழுந்தவளின் கையை நந்து பிடித்தான். வளையல்கள். நொறுங்காமல் நெகிழும் பிளாஸ்டிக் வளையல்கள். எல்லாம் நீல நிறத்தில். நடுவில் ஒரு வளையல் மட்டும் தங்கம். அது நந்து எப்போதோ ஒரு காதலர் தினத்துக்கு பரிசளித்தது. ரோஜாப்பூவை மெல்லிய கோடுகளால் வரைந்தது. சில ரோஜாக்கள். ரோஜாவின் இதழ்களில் சிகப்பு நிறமடித்தது. அது உண்மையில் வளையலல்ல. ஒரு கைக்காப்பு. இரண்டுபேரும் வாங்கி ஆள்க்கொன்றாய் பிரித்துக்கொண்ட காப்பு. நந்து காப்பைக்கழற்றி எதோ ஒரு கடற்கரையில் எறிந்திருந்தான் சில வருடங்களுக்கு முன். அவள் இன்னும் அணிந்திருக்கிறாள்.

 

“உன்ன இந்த தடவ மறுபடியும் இழக்க விரும்பல ஜெஸ்ஸி.”

“….”

“அந்த சிலரோஜா காப்பு இப்ப என்கிட்ட இல்லை. தூக்கி எறிஞ்சுட்டேன். நீ சொன்னதுதான். உன் நியாபகஙக்ளை விட்டு விலகுற முயற்சி. ஆனா அதத்தூக்கிப்போட்டுட்டு நியாபகங்களை வெச்சிருக்கேன் ஜெஸ்ஸி. போதும். இன்னைக்கு முடிச்சுருவோம். என்ன பண்ணலாம்னு சொல்லு”

“ நீ எதும் பண்ணவேண்டாம் நந்து. போலாம். ஆல் தெ பெஸ்ட் பார் யுவர் ஆன்சைட் அசைண்ட்மெண்ட். நல்லாப்பண்ணு. உனக்கா தோணும்போது கல்யாணம் பண்ணிக்க. ஆனா எனக்கு இன்விடேசன் அனுப்பாத. நானும் என் கல்யாணத்தப்பத்தி உன்கிட்ட சொல்லமாட்டேன். லெட்ஸ் மூவ் ஆன். “

“கட் த கிராப் ஜெஸ்ஸி. சீ…”

நந்து தன் கழுத்திலிருந்த செயினைக் கழற்றினான். வீட்டிலிருந்து நந்துவுக்கு செய்யப்பட்ட ஒரே செலவு. கையில் அணிந்திருந்த மோதிரத்தையும். என் என இன்ஷியல் பதித்தது. பள்ளிக்கூடகாலத்தில் எதோ போட்டியில் ஜெயித்ததற்குக் கிடைத்த பரிசு. மோதிரத்தை செயினில் கோர்த்தான். ஜெஸ்ஸியின் கழுத்தில் மாட்டினான். ஜெஸ்ஸியின் கண்ணீர் குனிந்த முகத்தைத்தாண்டி கீழே இறங்கிக்கொண்டிருந்தது.

“போலாம் ஜெஸ்ஸி. இப்ப. இந்த நிமிசம், உன் வீட்டுக்குப்போகலாம். உன் அப்பாகிட்ட பேசுவோம். கல்யாணம் நடந்துருச்சு சேர்த்துவைங்கன்னு பேசுவோம். மறுத்தார்னா எங்க வீட்டுக்குப்போவோம். அங்கையும் மறுத்தாங்கன்னா என் கூடவே வா. வெளி நாட்டுக்கு. யாரும் வேண்டாம். நீ நீ நீ.”

“போலாம் நந்து”

இருவரும் உயரப்பார்த்து, தேவாலயத்தின் மேலிருந்த சிலுவையைப்பார்த்து சிலுவைக்குறி போட்டுக்கொண்டனர். நந்துவின் இருசக்கர வாகனத்தை நோக்கி நடக்கத்தொடங்கினர்.  திரும்பி வேப்ப மரத்தடியைப்பார்த்தனர். நீலச்சட்டைப்பையன் பந்தைக் கையிலெடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். மஞ்சளுடைச் சிறுமி அவனைத் துரத்திக்கொண்டிருந்தாள்.

[சிறுகதை] மெட்டாமார்போஸிஸ்

பின்னூட்டமொன்றை இடுக

முகு: பழைய அலுவலகத்தின் உள்வலைத்தளத்தில் நடக்கும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்ட விருந்தினர் பதிவு. இன்னும் சில கதைகள் உண்டு, தகுந்த இடைவெளியில் வெளியாகும். 😉

தூசிபறக்க காற்று மண்ணைவாரி முகத்தில் அடித்துக்கொண்டிருக்கும்போதுதான் நந்து தன் தூரிகை எதோ கனமான பொருள் மீது உரசுவதை அறிந்தான். தூரிகையைக் கீழேவைத்துவிட்டு கொஞ்சம் கையால் துடைத்துப்பார்த்தான். கருப்புமண் படிந்த குடுவை. முழுவதுமாக வெளியே தெரியும்வரை மெல்ல கைகளால் துடைத்து சுற்றிலும் தோண்டி குடுவையை வெளியே எடுத்தான். மூடி லேசாக உடைந்திருந்தது. குடுவையின் சுற்றுப்புறத்தில் வண்ணத்துப்பூச்சியின் பல்வேறு பருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. உள்ளே சின்னதாக ஒளி தெரிந்தது. அசைத்து மூடியை எடுக்கும்போது பாகங்கள் பிரிந்து இரண்டாக கையில் வந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. மூடியைக்கீழே வைத்துவிட்டு உள்ளே கைவிட்டு எடுத்தான். ஒரு தாமிரச்சுருள். வெளிப்புறம் முழுவதும் மண்ணில் பல ஆண்டுகள் புதைந்துகிடந்ததால் வந்த கருப்பு அப்பியிருந்தது. உள்பக்கமும் தூசியடைந்து இருந்தது. தூசியை வழக்கமான துணி கொண்டு அழுந்தத் துடைத்தான். எழுத்துக்கள் வாசிக்கக்கிடைத்தன. ஒவ்வொரு வார்த்தையாக வாசித்து முடித்தபோது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

நந்து ஆய்வுக்களத்திலிருந்து கிளம்பி தன் அலுலகம் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்கு வந்தான். கால்சட்டைப்பாக்கெட்டில் தகடு உறுத்திக்கொண்டிருந்தது. அலுவலகம் அத்தனை பெரிது ஒன்றும் இல்லை. ஒரு மடிக்கணினி. அதை வைக்க ஒரு மேஜை. அருகில் ஒரு நாற்காலி. தொலைவிலிருந்த அலமாரியின் மேலடுக்கில் ஆய்வுக்களத்திலிருந்து எடுக்கப்பட்ட சிறுகற்கள். சுடுமண் பொம்மைகள். சில எலும்புத்துண்டுகள். அடுத்தடுத்த அடுக்குகளில் சிறுதும் பெரிதுமாக சிலபல புத்தகங்கள். ஓலைச்சுவடிகள். அவற்றின் நகலெடுக்கப்பட்ட நீண்ட தாள்கள். மேஜையின் குப்பைகளை எடுத்து கொஞ்சம் சுத்தப்படுத்துவதான போர்வையில், கலைத்துவிட்டு, ஜாடியை மேஜை மீது வைத்தான். மடிக்கணினியைத் திறந்து இணையத்தில் மேய்ந்தான். பிறகு நீண்ட பெருமூச்சுவிட்டான். எழுந்துவெளிய வந்தபோது வெயில் மொத்தமாக இறங்கி இருள் பரவத்தொடங்கியிருந்தது. காற்று போடப்பட்டிருந்த ஒன்றிரண்டு கூடாரங்களையும் பிறித்து எறிந்துவிடும் வேகத்தில் சடசடத்துக்கொண்டிருந்தது. இன்னொரு முறை தகடைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். ஒரு நிமிடம் மனதில் அவனது கடன்கள், பிற செலவினங்கள், தேவைகள் ஒரு கணம் மின்னிமறைந்தன. மறுபடியும் ஒரு பெருமூச்சுடன் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு இருசக்கரவாகனம் நோக்கிச் சென்றான். ஆதிச்ச நல்லூரின் ஆய்வுக்கள பகுதியைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏறியபோது மழை வலுக்கத்தொடங்கியது. அணிந்திருந்த மழையுடையைத்தாண்டியும் குளிர் ஊடுருவியது. பாண்டி கோயிலைத்தாண்டும்போது தன்னிச்சையாக கன்னத்தில் போட்டுக்கொண்டான். கோயில் வாசலில் அமர்ந்திருந்த பெருந்தாடிக்காரர் இவனைப்பார்த்து சிரித்ததுபோல் இருந்தது.

o

”எந்த நம்பிக்கைல சொல்ற” பிரபாகர் அசுவாரசியமாக சோபாவில் சாய்ந்துகொண்டான். கண்கள் ரிமோட்டையும் டிவியை மேய்ந்துகொண்டிருந்தன. மாற்றிக்கொண்டே இருந்தான். ஒரு அரசியல்வாதி யாரையோ பொம்மையாக்கி நடுத்தெருவில் எரித்துக்கொண்டிருந்தார். ஒரு நடிகர் அரசியல்வாதியாகும் முயற்சியில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். புரட்சிப்பெண்மணி ஒருத்தி ஆக்ரோஷமாக தன் கணவரைத் திட்டிக்கொண்டிருந்தார்(வீட்டுக்கு வரச்சொல்றார்ங்க!!). கோட் ஆசாமி குறுக்க மறுக்க நடந்து சுமார் நாப்பத்தைந்து குடும்பங்களை ஒரு மணி நேரத்தில் பிரித்துவைக்கும் விவாத நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார்.

“ஆர்க்கியாலஜில எனக்கு 15 வருஷம் அனுபவம். ஒரு கல்லப்பாத்தே இது எந்த வருஷம் எதுக்காக யூஸ் பண்ணியிருக்காங்கன்னு சொல்லமுடியும் . 99 சதம் தப்பாக வாய்ப்பே இல்ல தெரியுமா?” நந்து எரிச்சலுடன் சொன்னான்.

”அப்ப மீதி ஒரு சதம்?”

“அந்த நம்பிக்கை உனக்கு இருந்தாலும் பரவால்ல. ஆனா 99 சதம்டா.. சரியா இருந்தா இதுல கொட்டப்போற பணத்த மட்டும் யோசிச்சுப்பாரு”

”யப்பா ராஜா.. ஜெனிட்டிக் இஞ்சினியரிங்ன்றது நேரா ஆரம்பிச்சு உடனே பணம் கொட்ற விஷயம் இல்ல தெரியும்ல.. ”

”தெரியும். அதுக்குத்தான உன்கிட்ட வந்திருக்கேன். ஏற்கனவே எங்க தாத்தா ஓலைச்சுவடியெல்லாம் வாசிச்சிருக்கேன். இதுல என்ன இருக்குன்றத என்னால வாசிச்சு சொல்லமுடியும். நீ பண்ணவேண்டியதெல்லாம் இன்னைக்கு சைன்ஸ்ல அது என்னவா இருக்கோ அத பண்ண வேண்டியதுதான். புரியுதா?

“சரி மொதல்ல இருந்து சொல்லு” பிரபாகர் இப்பொழுது டீவியை அணைத்தான்.

”சிம்பிள் சைன்ஸ்டா.. இந்த தகட்டுல இருக்கிறது பரிமாணவளர்ச்சி சம்பந்தப்பட்ட எதோ ஒண்ணுன்னு நான் நினைக்கிறேன். மெட்டாமார்போஸிஸ் மாதிரி. ஒரு செல் உயிரில இருந்து ஆறறிவு மனுசன் வரை உருவாகுற உருவாக்குற அறிவியல். இது ஒரு வழிப்பாதையா மட்டுமில்லாம முன்பின்னாவும் இருக்கு. அதாவது சிறு அமீபாவ மீனாக்கலாம். மீன மனுஷனாக்கலாம். அல்லது எதிர்திசைல மனுசன அமீபா வரைக்கும் ஆக்கலாம். ஒருவேளை இததிரும்ப நம்மால செய்ய முடிஞ்சா, யாரையும் எதாவும் ஆக்குற சக்தி நம்ம கைல கிடைக்கும். “

“கிட்டத்தட்ட கடவுள் சரியா?”

“அதேதான்”

“சரி அதுக்கு என்ன பண்றது?”

“ஏழடுக்கின் தீரமது சூரமுடன் நானுரைக்க..”

”இந்தப்பாட்டெல்லாம் பாடாத. என்னென்ன வேணும்.. என்னென்ன சொல்லியிருக்கு… அத மட்டுஞ்சொல்லு.”

”அது தெரியாமத்தானே உங்கிட்டவந்தேன், என்னென்ன வேணும் என்னென்ன செய்யணூம்னு தெரிஞ்சா யாரையாவது வச்சு செஞ்சுக்க மாட்டனா?”

“அதுசரி.. பாடித்தொலை”

“ஏழடுக்கின் சூரணமாம் எரியுடையின் வாகனம்
யாழடுக்கின் மயிற்பீலி கரிபொடியின் தானுயர
பாழடுக்கின் பரம்பொருளாய் பரிமுடியும் கூடவர
கூழடுக்கின் சிறுஅணுவும் பூரணமாம் பூரணம்”

”ம்ம்.. நல்லாருக்கு.”

“அதில்ல. கடைசி வரி, அணுவிலிருந்து பூரணத்துக்குப் போறது பத்தி சொல்லியிருக்கு. மத்த பொருள்தான் தெரியல”

பிரபாகர் போய் ஒரு நோட்டை எடுத்துவந்தான், முதற்பக்கத்தில் பாட்டை நந்து தகடைப்பார்த்து சொல்லச் சொல்ல வரிசையாக எழுதிக்கொண்டான்.

”ஏழடுக்குன்னா ஹாலோஹென்ஸ். ஆனா அது ப்ரீயாடிக் டேபிள். கெமிஸ்ட்ரி. காலத்துல ரொம்ப பிந்திவந்ததுதான். ஆனா அதத்தவிர பெருசா ஏழுன்ற நம்பர் எனக்குத்தெரிஞ்சு வேறெங்கையும் இல்லை. ஆனா சூரணம்னு?” பிரபாகருக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை.

“எல்லாம் சமவிகிதத்துல கலக்கிறதுதான் சூரணம்னு சொல்லுவாங்க. ஹாலோஜென்றது ஒரு கெமிக்கல் இல்லையாம் ஐஞ்சு கெமிக்கல்ஸ்னு விக்கி சொல்லுது. சரியாத்தான் இருக்கு. அஞ்சையும் சமவிகிததுல”

”எரியுடையின் வாகனம்?”

“கரியா இருக்கலாம். அல்லது வைரம். அல்லது கார்பன்ல வர்ற எதாவது ஒண்ணு”

“முழுசா தெரிஞ்சுட்டுத்தான் வந்திருக்கியா?”

‘இல்ல கொஞ்சம் நெட்லபாத்தேன். கொஞ்சம் எனக்கே தெரியும். தாத்தா சித்தமருத்துவர். அதும்போக ரசவாதமெல்லாம் பண்ணிட்டு இருந்த ஆளு”

“ம்ம். யாழடுக்கு? எதாவது மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்டா?”

“இல்ல. யாழடுக்கின் மயிற்பீலி. துத்தநாகமாம்.”

”கரி பொடி? சாம்பல் கரெக்டா?”

“அதேதான். ஆனா எதோட சாம்பல்னு தெரியல. ஒருவேளை துத்தநாகத்தை பஸ்பம் பண்றதா இருக்கும்னு நினைக்கிறேன்”

”பரிமுடி? குதிரை முடியா… யப்பா…”

“இல்ல.. குதிரைவாலி. அது ஒரு தானியம். அதாத்தான் இருக்கணும்.”

“இருக்கணும், இருக்கலாம், இருக்கலாம்னு நினைக்கிறேன். சரியா யோசிச்சு சொல்லுப்பா. இதவச்சு என்னத்த செய்யுறது”

“எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். எல்லா காம்பினேசன்லையும் முயற்சி பண்ணி பாப்போம்”

”ம்ம். ஆக, கடைசிவரி, அமீபா மனுசனாகிறதுதான்ங்கிறது மட்டும் முடிவு பண்ணிட்ட”

“கிட்டத்தட்ட. அததவிர வேற வழியே இல்ல”

o

பிரபாகரின் ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதி இதற்காக ஒதுக்கப்பட்டது. வழக்கமான அலுவல் நேரம் முடிந்ததும், நந்து பிரபாகரின் ஆய்வகத்திற்கு வந்து உடனிருந்தான். ஒவ்வொரு பொருளாக சேகரித்து ஒவ்வொரு முறையாக சோதித்துப்பார்த்தார்கள். பொருட்களும் அதன் கலவைகளும் அதை உருவாக்கும் முறைகளையும் நந்து செய்தான். பிரபாகர், இறுதிக்கலவையை அமீபாக்களின் மீது பரிசோதித்து அதன் முடிவுகளை அவனது ஆய்வுக்கணினியில் தகவல் பொருட்களாகச் சேமித்துக்கொண்டே வந்தான். ஒவ்வொரு முறையும் தோல்வியிலிருந்து வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாக அவர்களுக்குப்பட்டது. சில சமயங்களில் அமீபா இரண்டாகப் பிரிந்து இரண்டுமே அழிந்தது. பிரபாகர், தன் பழைய ஆய்வுகளிலிருந்து எடுத்த முறைப்படி அமீபாவினை அழியாமல் காப்பதற்கான தடுப்புப்பொருட்களை இணைத்தால், எந்த வித்தியாசமும் இன்றி அமீபா அப்படியே மாற்றமின்றி இருந்தது. ஆறுமாதங்கள் இந்த ஆய்வில் காலம் கடந்தபின் அவர்களது அவ நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது. பிரபாகர் நந்துவைவிட அதிகமாவே அவ நம்பிக்கை அடையத்தொடங்கியிருந்தான். வேறு சில ஆய்வுக்காக வைத்திருந்த மாதிரிகளையும் இதற்குப் பயன்படுத்த ஆரம்பித்ததால், இதற்கான ஆய்வுகள் பெருஞ்செலவைத் தின்றபடி எந்த முன்னேற்றமுமில்லாமல் இருந்தன. நந்துவின் மனைவியும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தாள். அவர்களுக்குள்ளே சின்னச் சின்னச் சண்டைகளும் வரத்தொடங்கியிருந்தன. நந்து இப்படி நேரம் காலம் இல்லாமல், தொழிலுக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு ஆய்வறையில் நேரம் போக்கிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவது குறித்து அவளுக்கு கடுமையான வருத்தங்கள் இருந்தன. பாண்டிகோயிலில் பார்த்த பெருந்தாடிக்காரர் அடிக்கடி இவன் பாதையில் எதிர்பட ஆரம்பித்தார். இவன் கடந்துபோகும்போதெல்லாம் அவர் கைகொட்டிச் சிரித்தார்.

“இதுக்கு மேல எனக்கு சரியாவரும்னு தோணல நந்து” பிரபாகர் சொன்னான். முழுக்க நம்பிக்கையை இழந்திருந்தான். செலவுக்கணக்குகளைக் குத்திக்காட்டிய பேச்சுக்களுக்கு நடுவில்தான் ஆய்வு நடந்துகொண்டிருந்தாலும், அவ்வப்போது இப்படி வாக்குவாதங்கள் எழுவதுண்டு.

“எதோ ஒண்ணு மிஸ் பண்றோம்டா. என்னனு தெரியல. அத மட்டும் புடிச்சுட்டா சரியான கலவை கிடைச்சுரும். அது கிடைச்சுட்டா அப்புறம் நிலமையே தலகீழ்”

“அல்ரெடி தலகீழப்போயாச்சு நந்து. வீட்ல ரெஸ்பான்ஸ் ஒண்ணும் செரியில்ல. அவங்க பேசுறதும் சரியாத்தான் இருக்கு.. செலவு பண்ணி எதுவுமே கிடைக்கலைன்னா?”

”உனக்கே தெரியும் பிரபா.கிடைச்சா இதோட ரேஞ்சே வேற. வரப்போறகாச நினைச்சா.. இப்ப பண்ற காசு ஒரு சதத்துக்கும் கீழ தெரியும்ல?”

“அது இருக்கட்டும். ஆனா…. நாமளே பண்ணிட்டு இருந்தா எப்ப்படி? நீ ஆர்க்கியாலஜின்னா, நான் ஜெனடிக் இஞ்சினியரிங்க்… ஆனா யோசிச்சுப்பாரு… சித்தமருந்து, பலவருஷத்துக்கு முன்னாடி பண்ண ரசவாதம்.. அப்போதைய அறிவியல்.. இதெல்லாம் நமக்கென்ன தெரியும்? “வேண்ணா புலிதேசிகர்ட்ட ஒருதடவ கேட்பமா? சித்தராம்ல… கன்பார்மாவது பண்ணிக்கலாம்டா”

“யாரு.. அந்த பாண்டிகோயில் தாடிக்காரனா? அவன் முழு லூசாகிட்டாம்பா. முன்னாடியெல்லாம் கோயில்ல உக்காந்திருந்த ஆள், இப்ப ஊருக்குள்ளல்லாம் சுத்த ஆரம்பிச்சுட்டான்பா… நான் போறபாதை வர்ற பாதைலைல்லாம் நின்னு சிரிச்சுட்டு இருக்கான்பா”

“ஆமா… அவன் லூசு…. ஊர்ல எல்லாரும் லூசு. நாமதான் லூசாகிட்டு இருக்கோம்னு தோணுது நந்து… இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு… கிடைச்சகாசெல்லாம் இந்த தகட்ட நம்பி… மெட்டாமார்போஸிஸ் அது இதுன்னு….”

”ஹேய்ய்ய்ய்ய்ய்” நந்து ஓடிவந்து பிரபா கன்னத்தில் முத்தமிட்டான். “புடிச்சுட்டேன்…. எத மிஸ்பண்றோம்ன்ற புடிச்சுட்டேன். மெட்டாமார்போஸிஸ்! எஸ்! வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை ஸ்டேஜஸ். அந்தக் குடுவைல கூட வரைஞ்சிருந்தது. முட்டை. லார்வா, கூட்டுப்புழு பூபா, வண்ணத்துப்பூச்சி. அஞ்சும் அதுல இருந்துது. ஹாலோஜன்க்கு சேர்க்கவேண்டிய அஞ்சு அதுதான்! அம்மேசிங்க்! இன்னைக்கு அஞ்சு பருவத்துலையும் ஒரு ஸ்பெசிமன் எடுக்கிறோம். மருந்த முடிக்கிறோம். சியர்ஸ்”

பிரபாவும் நந்துவும் மனதுமுழுக்க நம்பிக்கையோடு வெளியே போனபோது புலிதேசிகர் வெளிவாசல் பெரியகதவின் அருகே நின்று சிரித்துக்கொண்டிருந்தார்.

O

நந்துவும் பிரபாகரும் திரும்பி வந்தபோது அவர்கள் கையில் ஐந்து பருவங்களுக்கான ஸ்பெசிமன்களையும் வைத்திருந்தார்கள். வாசலிலேயே தேசிகர் மறித்தார்.

“லூசு.. வழிய விட்றியா இல்லையா… “ நந்து எரிச்சலுடன் இருசக்கரவாகனத்தின் பின்னாலிருந்து இறங்கினான்.

“என்னப்பா கடைசியா பட்டாம்பூச்சியையும் எடுத்துட்டீங்க போல?” தேசிகரின் குரலில் நக்கல்தொனி.

பிரபாகர் திடுக்கிட்டான். வண்டியை தாங்கலிட்டு நிறுத்திவிட்டு அவனும் இறங்கினான்.

“அத வச்சு கடவுளாகிடலாம்னு நினைக்கிறீங்களா? அது வெறும் குப்பை. எவனோ தருமிப்புலவன் எழுதிவச்ச மொக்கை பாடல். பத்து பைசாவுக்கு ப்ரயோஜனமில்ல. அதவச்சு பணக்காரனெல்லாம் ஆகமுடியாது. என்ன மாதிரி பைத்தியக்காரன் வேணா ஆகலாம்” தேசிகர் மூச்சுவிடாமல் பேசினார்.

“அதப்பத்தி உனக்கென்…உங்களுக்கென்ன தெரியும்?” நந்துவின் குரலில் எரிச்சலும் ஆச்சர்யமும் கலந்தே இருந்தது

“தெரியும். அதைத்தெரியும். அதாலதான் உங்க தாத்தா சித்தவைத்தியர் இறந்துபோனார்னு தெரியும். வெள்ளக்காரன் காலத்துல லண்டன்ல விஞ்ஞானம் படிக்கப்போன நான் பைத்தியக்காரனா அலைஞ்சு, தாடியோட சுத்துறதால இப்ப சாமியாரா சித்தரா நினைக்கப்பட்ற வரைக்கும் தெரியும்”

“அப்ப நீங்க அத கண்டுபிடிச்சிட்டீங்களா? நான் எடுத்தது நாங்க தனிப்பட்ட முறையில பேசுனதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சிருக்கு”

பிரபா வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்குள் இன்னொரு கதை ஓடிக்கொண்டிருந்தது. பிரபாகரின் தாத்தா லண்டனுக்கு படிக்கப்போன கதை. பிறகு பைத்தியமாகி வீட்டிலிருந்து விரட்டப்பட்ட கதை.

”தேவையில்லாத கேள்விகளக் கேட்காத நந்து. அதுல இருக்கிறது மனுசன கடவுளாக்குற பாட்டு இல்ல. கடவுள மனுசன் கும்புட்றதப்பத்துன பாட்டு” தேசிகரின் குரலில் இப்போது அக்கறையும் இருந்தது. ஒருமுறை பிரபாவை தலைதிருப்பிப் பார்த்து சிரித்தார்.

“கடவுளக் கும்புட்றதா? அப்டின்னா?”

” நீ பாட்டச் சொல்லு?”

“ஏழடுக்கின் சூரணமாம் எரியுடையின் வாகனம்
யாழடுக்கின் மயிற்பீலி கரிபொடியின் தானுயர
பாழடுக்கின் பரம்பொருளாய் பரிமுடியும் கூடவர
கூழடுக்கின் சிறுஅணுவும் பூரணமாம் பூரணம்”

“எரியுடையின் வாகனம் – எருமைப்பால், யாழடுக்கின் மயிற்பீலி பாட்டுப்பாட்றவங்களுக்கு மயிலிறகாட்டம் குரல் கொடுக்கிற பனங்கற்கண்டு. கரிபொடி சுட்ட மஞ்சள் பொடி, பாலடுக்கின் பரம்பொருள் , பாலாடைக்கட்டி, பரிமுடியும் கூடவர கூழடுக்கு – குதிரைவாலியை அரைச்சு எடுக்கிற மை. எல்லாத்தையும் உருண்டையா புடிக்கிற பூரணம். கேள்விப்பட்டிருப்பியே இனிப்புக்கொழுக்கட்டை. அந்த பதத்துக்கு பூரணம் உருண்டையா புடிக்கணும்…”

“பொய் சொல்றீங்க. ஏழடுக்கின் சூரணம் பத்தி மறைக்கிறீங்க” நந்துவுக்கு கோபம் வந்தது. முற்றிலும் நம்பவும் முடியவில்லை. ஆனாலும் குழப்பமாக இருந்தது.

“இன்னுமா தெரியல. ஏழடுக்குன்னா கொலு. நவராத்திரி கொலுவுக்கு யாரோ செஞ்சு குடுத்த சூரணம் பத்தி எவனோ பாட்டெழுதியிருக்கான். அதவச்சு தலைமுறை தலைமுறையா யாராவது பைத்தியமாகுறாங்க.”

தேசிகர் இவர்களின் குழப்பத்தைப்பார்த்து சிரித்தார். சத்தம்போட்டு சிரித்தவாறே போய்விட்டார். இருவரும் வீட்டிற்குள் வந்தனர். பிரபாகருக்கு கால்கள் சோர்ந்து சோபாவில் பொத்தென விழுந்தான். நந்து குழப்பத்தில் இருந்தான்.

”போச்சு. மொத்தக்காசும், பத்துரூபா கொழுக்கட்டை செய்யுற பாட்டுல வேஸ்ட் பண்ணிருக்கம் நந்து” பிரபாவுக்கு முழுஎரிச்சல். கூடவே கையறு நிலையில் ஏற்படும் நக்கல்

“இப்பவும் இவர என்னால நம்ப முடியல பிரபா எதுக்கும் இந்த கடைசி முயற்சியையும் பண்ணிப்பாத்துரலாம்னு இருக்கேன்” நந்து உறுதியாகச் சொன்னான்.

”லூசாடா நீ… இதுக்குமேல….”

“இல்லபிரபா எனக்கு நம்பிக்கை இருக்கு. என் தாத்தா எதோ ரோட் ஆக்சிடண்ட்ல இறந்தார். இந்தாளு ஆராய்ச்சில இறந்ததா சொல்றார். ஊருக்கே தெரியும் உன் தாத்தா மட்டும்தான் லண்டன் போய் படிச்சவரு. இவரு அத தன்னோட கதையா சொல்றார்.”

“எனக்கென்னமோ இவர்தான் என் தாத்தான்னு..”

”லூசுமாதிரி பேசாத பிரபா… நான் செஞ்சுபாக்கபோறேன்”

நந்து வண்ணத்துப்பூச்சி படி நிலைகளின் ஸ்பெசிமன்களை எடுத்துக்கொண்டு ஆய்வகத்திற்குள் புகுந்தான். மறுபடியும் கலைத்துவிட்டு எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு படிநிலையாக செய்துகொண்டே வந்தான். கடைசியாக அமீபாமீது தன் கலவையை ஊற்றினான்.

பிரபா கொஞ்ச நேரம் சோபாவில் புரண்டுகொண்டிருந்தான். டீவியைப்போட்டான். மண்புழு உரம் பற்றி பொதிகையில் பேசிக்கொண்டிருந்தார். எரிச்சலையாகி டீவியை அணைக்கும்போது ஆய்வகத்தில் வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து ஆய்வகம் எரியத்தொடங்கியதைப்பார்த்தான். பயந்து வெளியே தலைதெறிக்க ஓடும்போது கதவின் அருகே கல்தடுக்கி ரோட்டில் தலைகுப்புற விழுந்தான். அதிகவேகத்தில் வந்த லாரி அதற்குள் நெருங்கியிருந்தது.

 

பரவும் குளிர்

2 பின்னூட்டங்கள்

கெளரி,

நேற்று விஷ்வாவிடம் பேசினேன். என் பழையதவறைச் சொல்லி, அந்த தவறு உன் விஷயத்தில் நடந்துவிடக்கூடாதென்று குரல் உடைந்து நம் கதை சொன்ன அதே விஷ்வா. வெளியே நல்ல மழை பெய்கிறது இப்போது. நான் அவனிடம் பேசும் போது இந்த மழை இல்லை. எதையோ பேஸ்புக்கில் எழுதித் தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது. யார் பிறந்த நாளை மறந்துவிட்டாய் எனக்கேட்டான் எடுத்த உடனேயே. உன் பெயரை நான் சொல்ல வேண்டும் என்றொரு விருப்பம் இருந்திருக்கும் அவனுக்கும். அவனே கேட்டான். கெளரியா என்று. ஆம் என்றேன். ”அவ எங்க இருக்கா தெரியுமா?” என்றான். எப்படிச்சொல்வேன் கெளரி. அவன் அளவுகோலில் கூப்பிடும் தூரத்தில்தான் நீ இருக்கிறாய் என்று. என் அளவுகோலின் படி என்னைச்சுற்றி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறாய் என்றொடு பேண்டஸி கதையை. போகட்டும். இருந்தாலும், கூப்பிடும் தூரத்தில் நீ இருந்தாய் எனச் சொல்ல முடியாதது ஒரு துயரம்தான் இல்லையா?

உன் பிறந்த நாளை நான் மறந்துவிட்டேன் என்றொரு பாவனை எப்படி என்னுள் விழுந்ததென்று இன்னும் புரியவில்லை. நாம் பிரிந்த பின் நீ இப்போது வைத்திருப்பது மூன்றாவது அலைபேசி எண். நான் கூப்பிடும் தூரத்தில் நீ இருக்கிறாய். உன் பிறந்த நாள் என் நாட்காட்டியில் தனித்த வண்ணத்தில் எனக்கு மட்டும் தெரியும் ஒரு ரகசியம். உன் முகவரி எப்போதோ அறைந்துவிழுந்த ஒரு சிலுவை. உன் குரல் இப்போதும் என்னுள் ஒலிக்கும் ரீங்காரம். முகுந்தா முகுந்தாவை அத்தனை சுலபமாய் இத்தனை வருடம் கழித்தும் கடந்து போக முடியவில்லை. இதையெல்லாம் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அப்படித்தானே கடைசியாய் பேசியபோது கேட்டுக்கொண்டாய். எனக்கு நீ யாரோவாக மாறுவது கர்ப்பம் கலைந்து கால் வழி ஒழுகும் உதிரம் பார்த்து ஒரு பெண் வேண்டும், இதெல்லாம் ஒரு கனவாக இருப்பதற்கான சாத்தியமாக கோடியில் ஒரு பங்கு அளவு இருக்குமா?

உன்னைச் சமீபத்தில் பார்த்த பொழுது பின்னணியில் ஒரு இசை ஒலித்ததில்லையா… இப்படியான தருணங்களைத் தவிர்க்க வேண்டிதான் உன்னையும் தவிர்க்க வேண்டியிருக்கிறது. இனி காலங்களுக்கும், அந்த இசைக்கு முன்னாக உன் முகம் வந்து சேரும். அதிர்ச்சி, குழப்பம், வெறுப்பு (இருந்ததாகத் தெரியவில்லை, கேட்டால், உன் பதில் ஆமென்றிருக்குமென்பதால் வெறுப்பையும் சேர்த்த்துக்கொள்கிறேன்) எத்தனை வித உணர்வுகள் உன் கண்களில்.. இந்தக் கண்களைத் தான் உள்ளுக்குள் பொத்தி வைத்திருக்கிறேன் கெளரி. எத்தனை வருடங்களாக… எத்தனை மெளனமாக, எத்தனை அழுத்தமாக. உன் பார்வைகளைச் சுமந்து சுமந்து வளைந்த பாறைகளைத் தூக்கிக்கொண்டு… இந்தப்பயணம் எரிச்சலூட்டுகிறது. உயரங்களில் நிற்கும்போது எல்லாப் பாறைகளையும் எறிந்துவிட்டு, சுதந்திரமாக, ஒரு பறவையைப்போல இலகுவாகி காற்றில் மிதந்துவிடக்கூடுமென்றொரு ஆசை எத்தனை முறை வந்திருக்கும்… ஒவ்வொருமுறையும் யாரோ ஒருவர் காப்பாற்றிவிடுகிறார்கள். உண்மையில் காப்பாற்றிவிடுவதாய் நினைத்து அந்தப்பாறைகளுடன் சேர்த்து இறக்கிவிடுகிறார்கள். இந்தப்பயணம் எரிச்சலூட்டுகிறது கெளரி.

இந்த அறையில் இப்போது யாருமில்லை. வெளியில் மழை கொஞ்சிக்கொண்டிருக்கிறது. நியாபகம் இருக்கிறதா, எல்லோருக்குமான என் வார்த்தையொன்று உனக்கு அசூயை கொடுத்து நமக்குள் நடந்த ஒரு விவாதம். பிடிக்கும் ஆனால் பிடிக்காதென்று பிடிகொடுக்காமல் பழைய பொழுதொன்றில் நீ சொன்ன வார்த்தைகள். அன்றும் இப்படித்தான் மென்குளிர். எதோ ஒன்று உள்ளே ஊடுருவி, ஆன்மாவை மட்டும் சுமந்து மென் காற்றில் தூக்கிச் சென்ற குளிர். அதே குளிர்தான் இன்றும். ஆனால், இன்று இதற்கு வேறு சாயல். வாழ்ந்து முடித்த கிழவின் கடைசி நிமிடங்களில் அருகில் இருந்திருக்கிறாயா? எல்லோர் நோக்கிய திருப்திப்புன்னகைக்குப் பின், கண் விறைத்து நிலைகுத்தியபின், இமைகளுக்கு மேல் உருட்டிய சந்தனத்தை வைக்கும்போது, கிழவியின் உடலில் ரத்தத்தின் சூடு தணிந்து மெல்லிய குளிர் பரவும். இன்றைய குளிரைப்போல.

நேரில் பேசும்போதும் நீயே சலித்து ஒதுக்கிய் புலம்பல்தான் இன்றும் என்னிடம் இருக்கிறது. வலியென்பதை பேசியாவது கடந்தாகவேண்டியிருக்கதே. விரல் நீட்டிக் கேலி செய்யும் நண்பர்களுக்கும், இன்ன பிற வலிகளும், அதைக்கடக்கும் இன்னபிற வழிகளும் உண்டென்றாலும், எனக்குத் தெரிந்ததெல்லாம், எழுதிக்கடப்பதுதானே? கிராமம் நகரமும் அற்ற இரண்டும் கெட்டான் தெருக்களில் ஓடி ஓடி காசு போட்டு அழைத்து அழைத்து புலம்பித் தீர்க்க உன்னையா வைத்திருக்கிறேன் அலைபேசி தொடர்பு எண்களில். தொடர்பு எண் ஒரு பிரச்சினையில்லை. இன்றும்தான் மனப்பாடமாய்ச் சொல்லமுடியுமே உன் முதல் எண்ணிலிருந்து இன்று உன் கையிலிருக்கும் மூன்றாவது எண்வரை. இறந்தாலும் வந்து பார்க்காதே என்றவளைத் தொடர்பு கொள்ளும் தயக்கம். விடாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் ”ஏண்டா டார்ச்சர் பண்ற”எனும் குரல் கொடுத்த தயக்கம். லைஃப் ஹேஸ் டூ கோ ஆன் என்ற சினிமா வசனத்தை நிஜ வாழ்க்கையில் நிஜ மனுஷியிடம் கேட்க நேர்ந்த நினைவின் மிச்சம். உன் பிறந்த நாளை நான் மறக்கமுடியுமா கெளரி? அலைபேசியைத் தொலைத்துவிட்டு, அறை நண்பனின் தொடர்பு எண்ணுக்கு முன்னதாக உன் எண் உதட்டில் ஏறி நின்ற அந்தத் தருணத்தில் உணர்ந்து கொண்ட முதல் தொடர்பு எண்?

எல்லாம் கனவு கெளரி. இந்த வாழ்க்கை. நம் சந்திப்பு. பழைய காதல். பழைய புன்னகை. மின்னும் கண்கள். நான். கடைசியாக நீ.

இப்படிக்கு
ஷிவா.

சீசரின் மனைவி

1 பின்னூட்டம்

”உன்மாமனார் டார்ச்சர் வரவர தாங்கல. எப்பதாண்டா நம்ம கல்யாணம்?”

ஷக்தி கத்த ஆரம்பித்தால் பிரளயம் வீட்டிற்குள் தொடங்கியிருக்கும் என அர்த்தம். அதுவும் போன் செய்துவிட்டு, ஹலோ கூட சொல்லாமல் குதிக்கிறாள் என்றால்…

”மொதல்ல என்ன செஞ்சார் அதச் சொல்லு. ஜீனியஸ்கள எப்பப்பாத்தாலும் திட்டுறதே உனக்கு பொழப்பா போச்சு. அப்டித்தான் அன்னிக்கு என்னையும்..”

“ நீ அடங்கு. அவரச் சொன்னா உனக்கு பொத்துக்கும், உன்னச் சொன்னா அவருக்கு பொத்துக்கும். நல்லா வாச்சீங்க மாமனாரும் மருமவனும் ஊர்ல இல்லாம”

“இன்னும் நீ என்ன விஷயம்னு சொல்லல”

“அதெல்லாம் சொல்ல முடியாது நீ மொதல்ல வந்து தொலை. நீயே வந்து பாரு அந்த கண்றாவிய”

அலுவலகத்தில் அரை நாள் பர்மிஷன் சொல்லிவிட்டு அடித்துப்பிடித்து ஷக்தி வீட்டிற்குப்போனேன். அல்ரெடி ஒரு ரவுண்டு பிரளயம் முடிந்திருந்தது தெரிந்தது. செருப்பு அலைந்து கிடந்தது. கதவு திறந்தே இருந்தது. நுழைந்தால், ஷோகேஸ் விழுந்து கிடந்தது. திரைச்சீலைகள் கிழிந்து முன் ஜென்ம புண்ணியத்தில் ஜன்னலில் ஒட்டிக்கொண்டிருந்தன. டிவி மேஜையின் டிராயர்கள் திறந்து உள்ளிருந்த அனைத்து தட்டு முட்டுகளும் வெளியே குதித்திருந்தன. எல்லாவற்றிற்கும் நடுவே ஷக்தி அரையாடையில் நிற்கும் போட்டோ கிடந்தது. ( சேட்டைக்காரர்கள் அடங்கவும். அவளின் சிறு வயது போட்டோதான்) டைனிங் டேபிளில் ஷர்மா தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். வழக்கம்போல சக்தி காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்தாள்.

“இன்னொரு நிமிஷம் இந்த வீட்ல இருக்க மாட்டேன். ஷிவாவ வரச்சொல்லியிருக்கேன். அவன் கூடப் போறேன். வர்ற ஞாயிற்றுக்கிழமை கல்யாணம், உங்க செல்லத்த தேடிக்கண்டுபிடிச்சு நீங்களும் வந்து சேருங்க”

“என்னாச்சு ஷக்தி”

“வாங்க மாப்ள சார். ஞாயிற்றுக்கிழமை கோயில்ல கல்யாணம் பண்ணிக்கலாம். என்னையும் உங்கூடையே இப்பவே கூட்டிட்டு போய்ரு. இவரோட ஒரு நிமிசம் இருக்க முடியாது”

”என்னாச்சு மாமா?”

”என் செல்லத்த காணோம் ஷிவா”

“செல்லப்பெட்டியா? வெத்தலயெல்லாம் போட ஆரம்பிச்சிட்டீங்களா?”

“உன் மாமனாரு அவர் வளர்ப்புப் பிராணிய செல்லம் கொஞ்சிட்டு இருக்காரு. அவர் வச்சிருந்தாரே உன்ன மாதிரி ஒரு தேவாங்கு…”

“அது உடும்பு ஷக்தி”

“உடும்போ குடும்போ… அந்தப்பூச்சியைக்காணோம்”

ஷர்மா ஊருக்குள் சையிண்டிஸ் என பெயர் வாங்க போராடிக்கொண்டிருப்பவர். படித்தது என்னவோ வயர் பிடுங்கும் வேலை. ரியட்டயட் ஆனபின் ஆளுக்கொரு ஹாபியென்றால், இவருக்கு சையின்ஸ். எங்கிருந்து பிடிப்பார் எனத் தெரியாது. சூரிய ஒளியிலிருந்து தண்ணீர் வர வைப்பது மாதிரியான மந்திரதந்திர விஷயங்களை அறிவியலில் முயன்று கொண்டிருப்பவர்.விதவிதமாக கிளம்புவார். ஆறு மாசத்திற்கொரு புராஜக்ட். அது தோல்வியில் முடிந்ததும், அடுத்த பிராஜக்ட்.

“அது பூச்சியில்ல. பல்லி கூட்டத்த சேர்ந்த பிராணி” தலை நிமிர்த்தி பதில் சொன்னார் ஷர்மா.

“எதாவது வாயத் தொறந்தா கெட்ட கோவம் வரும். கருமம் அது கண்டதையும் திங்கும், அதக்கொண்டு வந்து வீட்டுக்குள்ள வச்சா ஓடிருச்சு, எவனாது அவன் வீட்டு கோழியக்காணும் புறாவக்காணோம்னு வரப்போறான். கடவுளே…”

”அப்டியெல்லாம் இல்ல. இது வரானஸ் மபிடங். பழம் மட்டும்தான் திங்கும். ” போனவாரம்தான் ஷர்மா என்னை உட்கார வைத்து முழுக்கதையும் சொல்லியிருந்தார். ஷக்தியைப்பார்க்க வந்தவன் மரியாதைக்காக இவரைப்பார்க்க லேப் வந்தது தவறாகப்போயிற்று.

”ஆமா. இவர் கண்டாரு.”

இவளிடம் பேசுவது எந்த பதிலையும் தராது என்று தோன்றியது.

“செம தலவலிடீ. ஒரு காபி தரியா?”

“ஆமா என்னைய தள்ளிவிட்டுட்டு மாமனாரும் மருமவனும் செல்லம் கொஞ்சிகிட்டே செல்லத்த தேடி ஒழிங்க”

” நீங்க சொல்லுங்க மாமா.. என்னாச்சு”

“பிளானட் ஆப் தி ஏப்ஸ் சீசர் நியாபகம் இருக்குல்ல மாப்ள?”

“ஆமா அதுக்கென்ன.. உங்க செல்லத்துக்கும் சீசர்னு பேர்வைச்சுட்டீங்களா? அதுக்கு பிடிக்கலைன்னா மாத்திட வேண்டியதுதானே.. அதுக்கா ஓடிப்போச்சு… செல்லம்.. இனி மாமா உன்ன சீசர்னு கூப்ட மாட்டார்.. வெளியவாடா… அது டா வா டீயா மாமா?”

”ம்ம்ம்…. டி. சீசரோட ஃவைப். நீங்களுமா?”

“சரி கிண்டல் பண்ணல. சொல்லுங்க”

“அந்த சீசர் மாதிரி, இதுக்கும் மொழி கத்துகுடுக்க முயற்சி பண்ணேன். அப்ப இருந்து அடிக்கடி கூண்டுல தனியா பேசுற சத்தமெல்லாம் கேட்கும்… வந்து பாத்தா, இது திரு திருன்னு முழிக்கும்..”

”உடும்பு முழியே அப்டித்தானே மாமா?”

“….”

“சரி சொல்லுங்க”

“இன்னிக்கு வந்து பாத்தா, கூண்டு துறந்திருக்கு. போகிறேன் தேடாதேன்னு ஸ்டிக்கி நோட் ல எழுதி வச்சுட்டு வேற போயிருக்கு. “

“அதான் தேடாதன்னு சொல்லிருச்சுல்ல.. அப்புறம் ஏன் ஷோகேஷ உடைச்சீங்க”

“அங்கதான் பிரச்சினை மாப்ள. நான் எதுவும் பண்ணல. நானும் ஷக்தியும் வெளிய போயிருந்தோம், வந்து பாத்தா இப்படிக்கிடக்கு. ஷக்தி என்னையப் புடிச்சு திட்டித்தீக்குறா.. அது வெளியே போச்சுன்னு நம்ப மாட்டேங்குறா.. அது உடைச்சு ஓடிப்போயிருக்கு. நான் வெஜ் தேடிப்போயிருக்குனு ஒரே கிண்டல். அவ லிப்ஸ்டிகத் தொறந்து மிதிச்சு வச்சிருக்கு. அதப்பாத்துட்டு செம களேபரம். செல்லம் பண்ணத விட, இவ உடைச்ச கண்ணாடியும், கிழிச்ச கர்ட்டனும்தான் அதிகம்..”

”ம்”

“அது குட்டியா இருக்கும்போதே சொல்லி வச்சு லோக்கல் ஜூவுல வாங்குனது மாப்ள. வரானஸ் மபிடங். சைவம். அபூர்வ இனங்கள்ல இதுவும் ஒண்ணு. எங்கிட்ட இருந்து போனத விட, விஷயம் தெரியாதவங்க கிட்ட சிக்குனா கறியாக்கிடுவாங்க. அதான் மாப்ள கஷ்டமா இருக்கு.”

”சரி விடுங்க. எல்லாத்தையும் எடுத்து வைப்போம். இன்னொரு உடும்பு வேணா என் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லி வைக்கவா?”

“அதெல்லாம் வேணாம் மாப்ள… பாத்துக்கலாம்…”

ஷக்தி காபியோடு வந்தாள்.

“என்னதான் முடிவு பண்ணியிருக்கீங்க ரெண்டு பேரும்? அடுத்து என்ன? கழுதையா பாம்பா?”

மூன்று பேரும் சிரித்துக்கொண்டே ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தோம்.

o
<<கதை மூன்று விதமாக முடிகிறது. பவர்ஸ்டார் ரசிகர்களுக்கு – முடிவு 1 , வெங்கட்பிரபு ரசிகர்களுக்கு – முடிவு 2, வீ.சேகர் வகையறா குடும்பச்சித்திரத்திற்கு – முடிவு 3. Select the hidden text to read :) >>

முடிவு 1:

மூன்று பேரும் சிரித்துக்கொண்டே ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தோம். எல்லாவற்றையும் அடுக்கி, திரைச்சீலைகளை மாற்றி ஒழுங்குபடுத்தி முடிக்கும் போது களைப்பாக இருந்தது. ஷர்மா பிரிட்ஜ்க்குப்போனார். எனக்கு வாட்டர் பாட்டில் கேட்டேன். பிரிட்ஜ் கதைவைத் திறந்தவர் அசையாமல் நின்றுவிட்டார். ஓடிப்போய்ப்பார்த்தேன்.
உள்ளே அந்த உடும்பு இருந்தது. ஒரு பலாப்பழத்தை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு. வழக்கம்போல திருதிருவென முழித்தபடி.

முடிவு 2:

மூன்று பேரும் சிரித்துக்கொண்டே ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தோம். முடித்துவிட்டு கிளம்பினேன். வெளியில் வந்து நண்பனுக்கு அழைத்தேன். அறைக்கு வரச்சொன்னான். ஷர்மா வீட்டிலிருந்து சரியாக மூன்றாவது வீடு. போனேன். சரக்குப்பாட்டில் சைடிஷ் சகிதம் அமர்ந்திருந்தான்.

“என்னடா மூணு மணிக்கே ஆரம்பிச்சிட்ட… என்ன மேட்டர்”

“இல்ல மச்சி செமயா ஒரு சைட்டிஷ் சிக்குச்சு. அதான் பட்றையப் போட்ரலாம்னு…”

“என்னடா முயலா.. புறாவா…”

“உடும்பு மாப்ள.. பின்னாடி தோட்டத்துல சுத்திட்டு இருந்துச்சு.. பாக்கிறதுக்கு ஒரு மாதிரி வித்யாசமா இருந்துச்சு… உடும்பு கறி சாப்டிருக்கியா மச்சி?”

எனக்கு கை நடுங்க ஆரம்பித்தது.

முடிவு 3:

மூன்று பேரும் சிரித்துக்கொண்டே ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தோம். எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வீட்டின் பின்புறம் லானுக்கு நானும் ஷக்தியும் வந்தோம்.

“சாரிடா ஷிவா. வீட்டுக்குள்ள வந்து இந்த களேபரத்த பாத்தப்ப அப்பா ரொம்ப அப்செட். அந்த உடும்ப புடிச்சு ஜூவுல விட்டுட்றேன்னுதான் கோபமா லேப்குள்ள போனார். அங்க அது இல்லைன்னதும் இன்னும் அப்செட். அவர சமாதானப்படுத்ததான், நீ ஆபிஸ்ல இருப்பன்னு தெரிஞ்சும் போனடிச்சு வரச்சொன்னேன்… “

உள்ளே பார்த்த ஷக்தியின் கண்களுக்கும் வெளியே பார்க்கும் கண்களுக்கும் நடுவில் ஏராளமான வித்தியாசம்.

தூரத்தில் ஒருவன் விழுந்து கிடந்தான். முகத்தில் உடும்பு அப்பியிருந்தது. ஏராளமான ரத்தத்துடன்.

என்னைப் பெருங்கனவு என அழைப்பார்கள்

1 பின்னூட்டம்

” தற்கொலைன்றது கண நேர மயக்கம்னு சொல்றத கேட்ருக்கீங்களா சார்? தெரியாதவன் அப்டித்தான் சொல்லிட்டு திரியுறான். ஆனா எனக்கு அப்டித்தோணல. இதெல்லாம் ஆழமா விழுந்து மெல்ல முளைக்கிற செடி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா பரந்து விரிஞ்சு, இதுக்கு மேல வளர இடம் இல்லைன்னு தெரியும்போதுதான் நீங்க பார்க்குற எக்ஸ்ட்ரா விழுது”

“ஹ்ம். கேள்விப்பட்டிருக்கேன். தூக்கம் சரியா இருக்கா? ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் தூங்குறீங்க?”

”விஷயம் புரிபடமா உளறிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்க. இன்சோம்னியாவா இருக்கும். டிரக்ட் அடிக்ட். அல்லது பிராடு பார்ட்டின்னு நினைக்கிறீங்க, கரெக்டா டாக்டர்?”

“அப்டியெல்லாம் நான் எதும் நினைக்கல ஷிவா. உங்களுக்கு என்ன விதமான டிஸ்கம்பர்ட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சா ஒரு வேளை அதுக்கான சரியான கவுன்சலிங்க் என்னால குடுக்க முடியும்னு நினைக்கிறேன்”

“டிஸ்கம்பர்ட்? எல்லாமே டிஸ்கம்பர்ட்தான் டாக்டர். எதுவும் பிடிக்கல. எல்லாத்து மேலையும் கோவம் வருது. லிப்ட்வாசல்ல யாரையும் போகவிடாம நடுல நின்னுகிட்டு கதையடிச்சுட்டு இருக்கிறவனப் பாத்தா இழுத்துப்போட்டு சாத்தணும்போல இருக்கு. காபி எடுக்கிறதுக்காக பின்னாடி 4 பேர் நின்னுட்டு இருக்கும்போது மெஷின் பக்கத்துல நின்னு ஆற அமர கலை நயத்தோட டீ ஆத்துறவங்களப்பாத்தா கோபம் வருது. திடீர்னு ரோட்ல செல்போன்ல பேசிட்டு எதிர்பக்கத்த பாத்துட்டு நடந்துவர்றவன் வண்டிய ஏத்தி கொல்லணும்னு தோணுது. தப்பில்லையா டாக்டர்??”

“தப்புன்னு தோணுதுல்ல.. யூ ஆர் நார்மல்னுதான் நினைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் மாத்திரை எழுதித் தரவா? ”

“எதுக்கு மாத்திரை? என்னோட பிரச்சினை வெறும் பிரமை. சும்மா சப்கான்ஷியஸ் மைண்ட அமைதிப்படுத்தி அனுப்பலாம்னு பாக்குறீங்களா?”

“எதுவும் நான் சொல்லலீங்க.”

”எது சொன்னாலும் அதுக்கு பின்னாடி சில காரணம் எப்பவும் இருக்குமில்லையா?”

“அப்டில்லாம் எதும் இருக்கத் தேவையில்லையே? தவிரவும், என்னோட உள் நோக்கத்த நீங்க சரியாத்தான் புரிஞ்சுகிட்டீங்கன்னு எப்படி நம்புறீங்க?”

“பாத்துருக்கேன் டாக்டர். நிறைய மனுஷங்களப் பாத்திருக்கேன். ஒவ்வொரு மனுசனையும் ஒரு ஆய்வுக்கூட எலி மாதிரி இன்னிக்கும் பாத்த்துட்டு இருக்கேன். சைக்காலஜின்றதே சக மனுசனப் பத்தின புரிதல்னா, சக மனுசனப் புரிஞ்சுக்கத் தெரிஞ்சவன் ஒரு சைக்காலஜிஸ்ட்டா இருக்க வாய்ப்பில்லையா?

“இருக்கலாம்”

”ஒவ்வொருத்தரோட உள் நோக்கத்தையும் என்னால படிக்க முடியுது டாக்டர். பார்வை, ஒரு வார்த்தைன்னு ரொம்ப சுலபமா என்ன நினைக்கிறான், என்ன சொல்லவர்றான்னு முன்கூட்டியே சுலபமா கண்டுபிடிக்க முடியுது”

” நல்ல விஷயம்தானே? இதையேன் பிரச்சினைன்னு நினைக்கிறீங்க? மனுஷங்களோட பழகுறதுதான் பிரச்சினை எல்லாருக்கும்? அது சுலபமா வருதுன்னா நல்லதுதானே?”

“அப்டி இல்ல டாக்டர். எடுத்துக்காட்டுக்குச் சொல்லணும்னா, உங்களோட இந்த பதில நான் எதிர்பார்த்தேன். நீங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியும். இதுக்கு என்ன சொல்லுவீங்கன்னும் தெரியும்னா, இதுக்கு மேல உங்க கிட்ட என்ன பேசுறதுன்னு சொல்லுங்க. கிட்டத்தட்ட என் பதில், அதற்கான உங்க பதில், அதற்கான என்னோட பதில்னு மொத்த கான்வெர்ஷேனுமே முன்னாடியே ஒரு சினிமா மாதிரி எனக்குள்ள ஓடுனா, நாம பேசுறதுக்கு என்ன இருக்கு? கிட்டத்தட்ட நானே என்கிட்ட பேசிக்கிற மாதிரி ஆகாதா?”

“உங்ககிட்டையே எப்பவாது பேசியிருக்கீங்களா?”

“யூ மீன் தனியா பேசிட்டு இருக்கிறது? அப்டி குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி எதுவும் இல்ல. ஆனா நான் யார் கூட பேசினாலும், அது என்கூட நானே பேசிக்கிற மாதிரிதான். ஒரு கட்டத்துல யார் யாரைக்கூப்ட்றாங்கிறது கூட தெரியுறதில்ல. கொஞ்ச நேரம் நம்மளோட ப்யூச்சர் கான்வெர்ஷேன எனக்குள்ள ஓட்டிப்பாத்தா, என் பேர் சொல்லிக் கூப்டாக்கூட என் மூளை வேலை செய்யுறதில்ல. நான் டாக்டராவும் எதிர்ல இருக்கிற நீங்க, கவுன்சலிங்குக்கு வந்த நானாவும் மாறிட்றோம்.”

“இதனால எதும் குழப்பம் வந்திருக்கா?”

“ஹா ஹா. இந்தக் கேள்விய எதிர்பார்த்தேன். ஒரு வேளை கிளம்பும்போது உங்ககிட்ட நான் பீஸ் கேட்டா என்ன பண்ணுவீங்க டாக்டர்?”

“ஹா ஹா. ரெண்டு பேரும் இடம் மாறிட்டோம்னு உங்களுக்குப் புரியவைக்க முடியுமில்லையா? அதுக்காக பீஸ் கேட்றாதீங்க”

”அப்டி இல்ல டாக்டர். பொதுவா பேசும் போது கான்சியஸ் மைண்ட் பதில் சொல்லும், சப்கான்ஷியஸ் மைண்ட் கேட்டு உள்வாங்கிக்கும். எனக்கு ரெண்டும் இடம் மாறிடுது. கான்சியஸ் மைண்ட் எல்லாத்தையும் உள்வாங்கி சப்கான்சியஸ் மைண்ட் ரெண்டா பிரிஞ்சு பேசிட்டு இருக்கு. பேசி முடிக்கும்போது எங்க இருக்கேன் யார்ன்றதுலையெல்லாம் பெரிய குழப்பமே வந்துடுது “

“அப்ப உங்க பிரச்சினை உங்களுக்கே தெளிவா தெரியும்னு சொல்றீங்களா? மருந்தும் தெரியுமா?”

“இல்ல, இதெயெல்லாம் என்னோட சிம்டம்ஸ் வச்சு நெட்டுல மேஞ்சது. மருந்துன்னு எதுவும் சொல்லப்படல.”

“உங்க சப்கான்சியஸ் மைண்ட் என்ன சொல்லுது?”

”தற்கொலை பண்ணிக்கச் சொல்லுது டாக்டர்”

“காதுல குரல் கேட்குதா?”

“பாத்தீங்களா மறுபடி சாதாரண அப்ஸஸிவ் டிசார்டர் அல்லது பைபோலார் டிஸார்டர் வச்சே பேசிட்டு இருக்கீங்க. என் பிரச்சினை அது இல்லை. அயம் கிளியர் அண்ட் பெர்பெக்ட். ஆக்சுவலி பிக்சல் பெர்பெக்ட் அண்ட் கிரிஸ்டல் கிளியர் அதான் கொஞ்சம் பிரச்சினை”

“அப்ப தற்கொலை?”

“அதான் சொன்னனே.. ப்யூச்சர் கான்வெர்ஷேசன்ஸ். பேச்ச முடிச்சு கிளம்பினப்புறம் கூட எதிராளி கூட தொடர்ந்து பேசிட்டே இருக்கிறேன். எல்லா கான்வெர்ஷேசன்லையும் தற்கொலைதான் தீர்வுன்னு சொல்றாங்க எல்லா பிரண்ட்ஸும்”

“பிரண்ட்ஸ் உங்க கிட்ட சொன்னாங்களா?”

“கான்வெர்ஷேசன்ல இல்ல. என்னோட சப்கான்சியஸ்குள்ள ஓட்ற ப்யூச்சர் கான்வெர்ஷசன்ல தற்கொலைல முடியுது கான்வெர்ஷேசன்”

”அப்ப நம்ம கான்வெர்ஷேசனும் அப்டித்தான் முடியுமா? நான் வேற வார்த்தைகள்ல, பேச்சுவார்த்தையைத் தொடராத இடத்துல முடிச்சா?”

“அதையும் நண்பர்கள் கூட முயற்சி பண்ணிப்பாத்துட்டேன். ஒருத்தன் கூட வாண்டடா சண்டை போட்டு இன்னியோட பிரிஞ்சுரலாம், ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கவேண்டாம்னு முடிச்சேன்”

”அப்ப ப்யூச்சர் கான்வெர்ஷன் எதுவும் இருக்க வாய்ப்பில்லையே?”

“அங்கதான் பிரச்சினை. ப்யூச்சர் கான்வெர்ஷேசன்ல, என்னோட தப்ப உணர்ந்து அவன்கிட்ட மன்னிப்பு கேட்டு, அவனும் மன்னிச்சு ஏன் சண்டைபோட்டோம்னு பேச ஆரம்பிச்சு தற்கொலை பண்ணிக்கலாம்னுதான் அதுவும் முடிஞ்சுது”

”என்ன விதமான தீர்வு சரியாவரும்னு நீங்க நினைக்கிறீங்க?”

“செடடிவ் ஹிப்னோதெரபி. மயக்கத்துக்கு கொண்டு போய் ஆழ்மனசோட எண்ணங்கள மாத்துறது”

“அது சரியா வருமா? எப்படி நம்புறீங்க”

“ நான் முழுச்சிருக்கிற வரைக்கும், என்ன எந்த கேள்வியாலையும் உங்களாலல மடக்க முடியாது. சப்கான்சியஸ் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க எனக்கு செடடிவ் தரணும்”

“ஆனா ஹிப்னோ தெரபினா உங்க சப்கான்சியஸ் கிட்டத்தான நான் பேச வேண்டியிருக்கும். அதுல எதும் குழப்பம் வராதா?”

”வராது. கான்சியஸ் அண்ட் டூ வெர்சன்ஸ் ஆஃப் சப்கான்சியஸ் மொத்தம் மூணு பேரா பிரிஞ்சு பேசுறதுதான் என்னோட பிராப்ளம். செடடிவ் எடுத்துட்டா, கான்சியஸ் மைண்ட் இல்லாம போய்டும், சப்கான்சியஸ் கூட மட்டும்தான நீங்க பேசப்போறீங்க?”

“மொதல்ல ரெண்டு பேரா பேசுறோம்னு சொன்னீங்க. இப்ப மூணு பேர்ன்றீங்க?”

”அதான் சொன்னனே ஏற்கனவே இன்னும் உங்ககிட்ட பேசிட்டே இருந்தா இது இன்னும் விரியும், மூணு நாலுன்னு”

”செடடிவ் கண்டிப்பா என்கிட்ட இருந்து எதிர்பாக்குறீங்களா?”

“இல்ல டாக்டர், வரும்போதே ட்ரையஸோலம் எடுத்துட்டுதான் வந்தேன்.”

“வாட்? இதெல்லாம் யாரக்கேட்டு பண்ணீங்க? எங்க கிடைச்சது?”

“உங்களுக்குத் தெரியாதா டாக்டர். மூணு மடங்கு காசு குடுத்தா எதை வேணா வாங்கலாம்”

“வந்து பெட்ல படுங்க”

”தற்கொலைங்கிறது கண நேரத்து முடிவுன்னு நினைக்கிறீங்களா டாக்டர்?”

“என்ன உளர்றீங்க ஷிவா? இந்த பெட்ல வந்து படுங்க”

“ நான் இப்ப இந்த ஜன்னல் வழியா குதிச்சா என் எல்லா பிரச்சினையும் முடிஞ்சுரும் இல்லையா டாக்டர்?”

“ நான்சென்ஸ். பெட்ல படுங்க”

“இப்ப உங்க பிபி ஏறுதா டாக்டர்? கண்விழி விரியுறது இங்க தெரியுது. ”

“உங்களால என்ன இழுக்க முடியாது டாக்டர்”

..

“பெட்ல இல்ல. அங்க தெரியுற தரையில போய் படுக்கப்போறேன்”

மூன்றாவது மாடியிலிருந்து ஷிவா கீழே குதித்து மண்டை சிதறியதை ஊரே பார்த்தது. ”டாக்டர் கதவடைச்சுட்டு தனக்குத்தானே பேசிட்டு இருந்தாராம் அப்புறம் ஜன்னல் வழியா குதிச்சிட்டாராம்” என யாரோ போனில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

மடி முட்டும் ஆடுகள்

1 பின்னூட்டம்

அன்பின் எஸ்தர்,

இது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதும் கடிதம் தெரியுமா? கடைசியாய் எழுதிய கடிதமும் உனக்குத்தான். பள்ளிக்கு நடுவிலிருந்த சேப்பலில் ஜெபத்திற்கு நடுவிற்கே உன் மடியில் தூக்கிப்போட்டதுதான் நான் கடைசியாய் எழுதிய கடிதம். ஒரு நொடி முகத்தைச் சுருக்கிவிட்டு கண்ணைத் திறக்காமலே சுருட்டி பைபிளுக்குள் வைத்துக்கொண்டாய். எழுந்து போகும் போது திரும்பி ஒரு முறை சிரித்துப்போனாய். அதற்குப்பிறகு உன்னைப்பார்க்க வாய்க்கவில்லை. நீர் பறவையின் எஸ்தர்தான் இந்த கடிதத்தை எழுத வைத்திருக்கிறாள். அதே லேடி பேர்ட் சைக்கிள், அதே அண்ணன் சட்டை. அதே கண்கள். அதே ’சாத்தானே விலகிப்போ’ கோபம்.

என் நினைவிருக்கிறதா எஸ்தர்? இருட்டில் உன் கன்னத்தில் வைத்துப்போன என் முத்தமாவது? மறு நாள் முகமெல்லாம் வீங்கிப்போய் பெஞ்சில் தலைசாய்த்து அழுது சிவந்த கண்களுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய் யாரும் பார்க்காத நேரமெல்லாம். அந்தக் கண்களை எப்படி மறப்பேன்? தனியாய் சந்திக்க நேர்ந்த ஒரு மாலையில் உனக்காய் நான் ஜெபிக்கிறேன் என்றாய். என் மேல் யாரும் அக்கறை காட்டியதில்லை எஸ்தர். என்னை யாரும் மனிதனாய் மதித்ததில்லை.
என் சுக துக்கங்கள் யாருக்கும் ஒரு பொருட்டில்லை எஸ்தர். எல்லாம் உனக்குத் தெரியும். இருந்தும் ஏன் என்னில் அக்கறை காட்டினாய்?

வீட்டில் ஒரு தொலைக்காட்சிப்பெட்டி உண்டு எஸ்தர். மரப்பெட்டி மூடியது. ஒனிடா என நினைக்கிறேன். மேலும் கட்டில் பீரோ ஹார்லிக்ஸ் பாட்டில் பழங்கால தேக்குத் தூண்கள். பெரிய அழி. இருபுறம் நீட்டிய திண்ணை. அப்படித்தான் நானும் வீட்டில் ஒரு ஜடப்பொருள் எஸ்தர்.

மேய்ப்பன் தொலைத்து தெருவில் அலைந்த ஆட்டுக்குட்டி நான் எஸ்தர். மடி முட்ட அலைந்த சிறு வெள்ளாட்டின் கதை எனது கதை எஸ்தர். தாயினும் சாலப்பரிந்தூட்ட இன்னொரு ஜீவன் கிடையாது எஸ்தர்.

பள்ளியில் பத்தோடு பதினொன்றாய் களுக் சிரிப்புகளுக்குள் உன்னை கவனித்ததில்லை. மாம்பழத் திருநாள் சந்தையில் உனக்கு வேறுமுகம் எஸ்தர். சின்னப்பொம்மைகளை ஒரு கூட்டம் குழந்தைகளுக்காய் பேரம் பேசிக்கொண்டிருக்கையில் எனக்கான மறுபிறப்பை நான் அடைந்தேன் எஸ்தர். அத்தனை குழந்தைகளுக்குள் நடுவில் ஒளிந்து உன் கை பிடித்து ஓடாத கடிகாரம் ஒன்றை வாங்கிக்கொள்ளவேண்டும். அது காட்டும் நேரம் உனைப்பார்த்த நேரமாய் எப்போதும் வைத்திருக்கும் வரமெனத் தோன்றியது எஸ்தர்..

பிறகு உன் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கத் தொடங்கினேன். காலை மாலை உணவு இடைவேளைகள், படிப்பு நேரங்களில் மரப்பெஞ்சில் கைகூப்பித் தொழும் உன்னை எத்தனை வாஞ்சையாய்ப் பார்த்திருந்திருந்திருக்கிறேன். வெயிலில் முட்டிக்கால் போட்டிருக்கும் சிறு வயதுப் பிள்ளைகளுக்காக எவ்வளவு கண்ணீர் உகுத்திருப்பாய்? தெரியாதவர்களுக்கு கண்ணீர் விடுவதெல்லாம் எனக்கு மட்டுமே கண்ணீர் விட்டுப்பழகிய எனக்கு புதிது எஸ்தர். எனக்காகக் கண்ணீர் விடும் இன்னொரு ஜீவனுக்காய் ஏங்கிப்போயிருந்த எனக்கு நீ எவ்வளவு பெரிய பொக்கிஷம் தெரியுமா எஸ்தர்?

நான் யாரிடமும் உன்னைப்பற்றி பகிர்ந்ததில்லை எஸ்தர். நிஜமாகவே உனக்குச் சொல்கிறேன். உன் பெயரை எனக்குள் உச்சரித்ததெல்லாம் யாருக்கும் கேட்டிருக்காதென்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை உன் பெயரை யாரிடம் நான் பேசியதில்லை என்பதுவும்.

காதல் புகை எஸ்தர். எனக்குள்ளெல்லாம் பொத்தி வைக்க முடியாது. யாரிடமும் சொல்லாவிடினும் எல்லாருக்கும் தெரிந்துவிடும். உனக்குத் தெரிந்த பிறகும் என்ன பெரிதாய் செய்துவிட்டாய் நீ? என் மனந்திரும்பலுக்காய் நீ ஜெபித்ததான கதைகளையெல்லாம் யார் வந்து என்னிடம் சொன்னார்கள். உன் கண்களில் என் தவறுகளைக் கண்டேன் எஸ்தர். என் விலகுதலை உனக்குத் தெரியச் செய்தேன். எதையும் மதிக்கவில்லை நீ. எத்தனை தூரம் விலகினாலும் விரட்டி வந்தாய். என்னை நெருங்கி நட்பு மட்டும் பாராட்டினாய் மிகத் தெளிவாய்.

நான் ஒன்றும் குழந்தையில்லை எஸ்தர். எனக்குத் தெரியும். நான் உன்னைக் காதலிக்கத் தொடங்கிய நொடி எனக்குத் தெரியும். என்னைத் திருத்தி விட எத்தனித்து தூய நட்பை என்னில் விதைக்க நீ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்குப் புரியும் எஸ்தர். உன் கண்கள் எனக்கு மனப்பாடம். உன் கோபம், கண்ணீர் வலி குழப்பம். என் காதலை எத்தனை தெளிவாய் என் கண்ணில் எடுத்தாயோ அதே தெளிவுடன் உன் கண்களில் உன் சாமர்த்திய நட்பை, தூய அன்பைக்கண்டேன் எஸ்தர்.

அந்த தூய அன்பு என்னைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒருதலைக்காதலென்பதெல்லாம் சினிமா சொல் எஸ்தர். காதல் என்பதற்கு தலையெல்லாம் கிடையாது. ஒரு உணர்வு. ஒரு விருப்பம். எண்பது வருடங்கள் உன்னுடன் உன் முகம் பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டு உன்னை மட்டும் நேசித்துக்கொண்டு உன்னுள் என் பெயரைத் தொலைத்துத் திரிய தயாராகும் ஒரு ஒப்பந்தம். உன் எண்ணங்கள் புரிந்து சின்ன சண்டைகளிட்டு விலகிவந்தேன். நீ விலகவேண்டும் என்றே பாவங்களை அதிகரித்தேன். நீ விலகவில்லை எஸ்தர். என்னை இன்னும் நெருங்கி வந்தாய். என் எல்லாக்குற்றங்களையும் மன்னித்தாய். எல்லாத் தவறுகளையும் திருத்தி விட விரும்பினாய்.

இல்லாத காதல் ஒரு நொடியில் பூத்து விடும் எஸ்தர். பச்சை சிலேட்டுக்கு முத்தமிட்ட குழந்தையைப் பார்த்து நீ சிரித்த நொடியில் எனக்குள் பூத்ததைப்போல. இருக்கும் காதலை அழிக்க முடியாது எஸ்தர். நல்ல நண்பர்களாய் இருப்பதான பாவனையுடன் உணர்வுகளை அடக்கி, உனக்காக பிரார்த்தித்து எவனோ உன் கை பிடிக்கும் சர்ச்சில் புன்னகைத்து புகைப்படம் எடுத்து… உலக மேடையில் என் பாத்திரத்தை ஒழுங்காய் செய்யாமல் நீ விரும்பும் இன்னோர் பாத்திரத்தை நான் என நானே நம்ப முடியாது எஸ்தர்.

ஒரு நொடியில் காலில் விழுந்து மன்றாடத் தோன்றும். ஒரு நொடியில் தோளில் சாய்ந்து அழத் தோன்றும். ஒரு நொடியில் சட்டைக்கை மடித்து உன்னை நிறுத்தி எல்லாவற்றையும் விளக்கத் தோன்றும். ஒரே நேரத்தில் பைத்தியக்கார காதலானாகவும், சகியின் மனம் வலிக்காமல் பார்த்துப்பேசும் மருத்துவனாகவும் இரட்டை வேட நரகம் எஸ்தர்.

எதுவுமே நீ கேட்டிருக்க வேண்டாம் எஸ்தர். என் காதலை அறிந்து கொண்டதுபோலவே என் மெளனத்தின் காரணத்தையும் அறிந்துதான் வைத்திருப்பாய். வைத்துக்கொண்டே உன் தேவதை யார் என நீயே கேட்டு தோள் சாய்த்து நீ சிரித்திருக்க வேண்டாம் எஸ்தர். உன்னுடனான ஒவ்வொரு நொடிக்குமான கவிதையை எடுத்துக்கொண்டு இது யார் என நீயே கேட்டிருக்க வேண்டாம் எஸ்தர். பத்தோடு பதினொன்றான கவிதைகள் எதன் பின்னணி என உனக்கும் எனக்கும் தெரிந்திருக்கும்போது ஏன் என நீயே கேட்க என்ன சொல்வேன் எஸ்தர்?

ஒரு கொந்தளிப்பில் நீயென்றேன். உனக்குத் தெரிந்ததுதான் என எனக்குத் தெரியும். பிறகு உன் வார்த்தைகள் குறைந்தது. இவனை இனி திருத்தமுடியாதென அப்போதுதான் தெரிந்ததா எஸ்தர்? அல்லது அந்த மூலைக்கு வந்து விலகலாம் என்ற எண்ணத்தில்தான் துரத்தினாயா? எனக்கு அப்பவே தெரியும் மாதிரியான உன் வார்த்தைகள் எவ்வளவு வலி தெரியுமா எஸ்தர். நாம் அறிந்திருந்தோம். நீ தெரியாதுபோல் கேட்டாய். நீயும் விருப்பத்துடன் என் தைரியம் சோதிக்க கேட்கிறாய் என்றே நேரில் சொன்னேன். பிறகு சந்தித்தாய் . எனக்குத் தெரியுமென்றாய். என் கண்ணில் பார்த்ததாய்ச் சொன்னாய். எனக்குத் தைரியமில்லை என்றாய். ஏன் எல்லா ஆண்களும் இப்படி என்றாய். நான் இன்னொருவனைக் காதலித்தால் என்ன செய்வாய் என்றாய். என் வழியில் திரும்புவேன் என்றவனை நிறுத்தி நான் யாரையும் காதலிக்கவில்லை என்றாய்.

ஏன் இத்தனை குழப்பம் எஸ்தர். ஏன் இத்தனை கேள்விகள். ஏன் இத்தனை சுழல்கள்? எனக்குள் பூத்தது உன்னுள் இல்லையென நினைத்து விலகத் தொடங்கியவனை நிறுத்தி உன்னை நோக்கி அழைத்தாய். எல்லா வழிகளையும் திறந்து வைத்தாய். உள்ளே வந்தவனை இழுத்து வைத்து ஏன் உள்ளே வந்தாய் என்றாய். நீ வருவாய் எனத் தெரியுமென்றாய். உள்ளே வர உனக்குத் தைரியமில்லை என்றாய். இது எந்த ஜென்மத்தின் மிச்சம் எஸ்தர்? குறைந்த பட்சம் இப்போதாவாது முடித்துவிட்டாயா?

என்னைச் சோதிப்பது எனக்குப் பிடிக்காதென்பது தெரியும் தானே? கங்கை எங்கே போகிறாள் ஜெயகாந்தன் நாவல் நான் படித்திருக்க வாய்ப்பே இல்லையா எஸ்தர்? எவ்வளவு அழகாய்க்கேட்டாய்.. அதன் முடிவில் உனக்கு உடன்பாடா என? அதில் தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து எஸ்தர். பேச விரும்புபவள் அதில் உன் உடன்படாமையை பேசியிருக்கலாமே எஸ்தர்? எதற்காக நான் படித்திருக்கிறேனா என அதன் முடிவைச் சொல்லச்சொல்லி எனைச் சோதிக்கவேண்டும்? உன்னிடம் பொய்சொல்பவனா நான் எஸ்தர்?

இன்னும் வருடக்கணக்காய் இந்த சுமை எனை அழுத்தும் எஸ்தர். எழுத்தெல்லாம் சும்மா ஒரு இறக்கி வைத்தல். நியாபகம் அதன் இரட்டையைத் தான் எழுத்தில் இறக்கி வைக்கத் தள்ளுகிறது. நிகழ்வுகளின் உண்மைச் சுமை இன்னும் உள்ளேயேதான் இருக்கிறது எஸ்தர்.

இது கடலில் எறியப்பட்ட மாலுமியின் கடிதம் எஸ்தர். எதோ ஒரு தலைமுறை உன் எதோ ஒரு தலைமுறையிடம் யார் யாருக்கானது என்ற முத்திரைகளின்றி கொண்டு சேர்க்கும், சேர்த்தால் இந்தக் கடிதத்தின் முற்றுப்புள்ளிக்கான வெற்றிடத்தில் ஒரு துளி அவர்கள் வைப்பார்கள் எஸ்தர்.

எனக்கான கண்ணீர் விடும் மனிதர்களுக்காகத்தானே உன்னிடம் தொடங்கி இத்தனை பேரிடம் இத்தனை போராட்டம்?

நினைவினால் மட்டும் வாழும்
ஷிவா.

Older Entries

%d bloggers like this: