:)

1 பின்னூட்டம்

மரணத்தை எப்பொழுதும் ரகசியமாகத்தான் வைத்துக்கொள்ளவேண்டுமா என்ன? சீக்கிரம் மரணம் ஏற்படுவதைக்குறித்த ஒரு வரியை எழுதிவிட முடிவதில்லை. என்ன நடந்துவிட்டதென இவ்வளவு சோகமென அத்தனை ஆறுதல் வார்த்தைகளையும் அதன் அனைத்துப்பரிமாணங்களுடனும் நம் முன் திரையிட்டுக்காட்டிவிட்டுத்தான் ஓய்கிறார்கள். ஒரு காதல் கவிதைக்கு யார் அந்த பெண்/ஆண் என்ற உப்பு சப்பில்லாத கேள்வியும் கூடவே. இறந்து போகத் தூண்டும் சோகத்தையோ, வாழ்ந்து தீரப்பணிக்கும் அந்தக் காதலையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை. அதன் விளைவுகள் குறித்த சிறுவரிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பொதுவில் எழுதும் ஒருவனை/ஒருத்தியை நட்பு வட்டத்தில் பெற்ற பெருமையுடன்.

0
நிகழ்வுகள் சோர்வூட்டும் போதெல்லாம் கொஞ்சம் மாற்றி விளையாடிப்பார்க்கலாம். ஆட்டம் இழுக்கையில் பாதியில் நிறுத்தி கலைத்துப்போடப்படும் சீட்டுக்கட்டைப்போல. இடது கையால் பல் துலக்குவதாக. கவிதைக்கு நடுவில் ஒரு கதை எழுதிப்பார்ப்பது போல. இரண்டு நாள் முள்கரண்டியில் தோசை பிய்த்து சாப்பிட முயல்வதைப்போல. பின்னூட்டப்பெட்டியை நான்கு பதிவுகளுக்கு மூடி வைப்பதைப்போல. ஒரு மாதம் முழுவதும் வாரவிடுமுறைகளில் வீடு தங்காமல் எங்காவது அலைவதைப்போல. வாசிப்பை நிறுத்திவிட்டு திரைப்படங்களைப் பார்த்து தீர்ப்பதைப்போல. மாற்றங்களுக்கான தேடலில் கண்டடைகிறோம் புதிய பறவைகளின் சிறகசைப்பை. தார் சாலை வெயிலில் இடந்திரும்பி கொஞ்சம் விலகக்கிடைக்கும் திடீர் கடலை. அருகிலிருக்கும் அதிகமாய்ப்பேசியிராத புதிய நெருங்கிய நண்பனை.

0
உலகின் பெரும் பின்ன நவீனத்துவ படைப்பு என்பது ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாறு. எதையும் எப்படியும் திரித்து அல்லது உடைத்து புரிந்து கொள்ளலாம். ஆயிரம் மனிதர்கள் அவரவர் புரிதல் படி கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துச் சேர்த்து ஒரு பெரும் படைப்பாய் மிகச்சமீபத்தில் எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டதையே வரலாறு குறித்த அறிதல்கள் நிரூபிக்கின்றன. ஈ என்பதின் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பான அர்த்தமும், சமகாலத்தின் அர்த்தமும் வெவ்வேறாக மாறிய நிலையில் வரலாற்றின் ஆழத்திலிருந்து புதுப்புரிதல் என்பது புதிதான ஒன்றை உருவாக்குவதென்பது வெறும் பிம்பமே. எதை நாம் அறிந்திருக்கிறோமோ , எதை நாம் விரும்புகிறோமோ அதையே ஏற்கனவே இருப்பதில் இருந்து பிரித்து எடுப்பதில் மட்டுமே கவனம் செல்கிறது. கொள்ளிக்கட்டையில் எந்தக்கட்டை தலை சொரியத் தோதென்பது அவரவர் பாடு. நமக்கென்ன வந்தது.

0

நாளையே உலகம் அழிவதான பாவனையுடன் தான் எல்லாம் நிகழ்கிறது. தள்ளிப்போடாமல் உடனடி நிகழ்த்துதலென்பது இன்றியமையாத வேலைகளுக்கு மட்டும் போதாதா என்ன? அல்லது நேரத்தின் போதாமை என்பதான பாவனைக்கு நம்மை தயார் படுத்தி வைத்திருக்கிறார்களா. 15 நிமிட காணொளிகளின் காலத்தில் ஒரு திரைப்படத்தை அதன் இடைவேளைகளுடன் பார்க்கும் பொறுமை சுத்தமாயில்லை. இடைவேளைகளற்ற தரவிறக்கப்பட்ட திரைப்படங்களில் சில காட்சிகள் வழக்கமான நேரத்தைவிட வேகமாய் பின் தள்ளப்படுகின்றன. ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள் இல்லாதிருப்பதான மன பிம்பத்துடன் தாண்டிச் செல்லப்படுகிறது. ஒரு ரகசியத்தை உடைக்கும் நாளுக்கான காத்திருப்பு எரிச்சலூட்டுகிறது. அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களுக்கு ஓடுவதான பாவனையில்தான் தவறவிடுகிறேன் இந்த நொடியின் ரகசியங்களை காதலை அன்பை அழகை. காலம் கடிகாரத்தின் பேட்டரிகளுக்கு காத்திராமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

காதெலென்னும் தூங்கும் மிருகம் – 2

பின்னூட்டமொன்றை இடுக

காதல் இருக்கே… அதை மாதிரி உலகத்துலையே காமெடியான விஷயம் எதுவுமே கிடையாது சார்.  சும்மா சொல்லல. நீங்க வேணும்னா காதலர்க்ள் இருக்கிற ஒரு ஹோட்டலையே கடையிலையோ கடற்கரையிலயோ போய் நின்னு பாருங்க. பக்கத்து பக்கத்துல உக்காந்திருப்பாங்க. ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் ரொம்ப நேரமா பாத்துகிட்டு இருப்பாங்க. ஆர்டர் எடுக்கிற பையனையும் விரட்டிவிட்ருவாஙக. எதோ முதமுறையா அப்பதான் ஒருத்தர ஒருத்தர் பாக்குற மாதிரி பே ன்னு பாத்துட்டு இருப்பாங்க. எதாவது பேசுவாங்களான்னு பாத்தா அதுவும் கிடையாது. இவரு என்னடா பண்றதுன்னு தெரியாம சுத்திமுத்தி பாப்பாரு, அந்தப்பொண்ணு இவன் எங்கபாக்குறான்னு பின்னாடியே கண்ண உடும். எங்கயாவது அவன் பார்வை பட்ற எடத்துல ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சு… பையன் தொலைஞ்சான்னு அர்த்தம்

‘சரி அப்ப நான் கிளம்புறேன்’
‘ஏன் மா? ‘
‘அதான் உனக்கு நிறைய பொண்ணுங்க இருக்கிறாங்களே பாக்குறதுக்கு’
‘அப்டி இல்லைமா, சும்மா.. தற்செயலா.. ஆக்சுவலி…’
‘ நான் அவள மாதிரி இல்லைல?, தெரியுண்டா… கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்.. அதுக்கு நான் இருக்கும்போதே இன்னொருத்திய பாப்பியா நீ?’
‘அய்யோ… அப்டியில்லாம் இல்ல செல்லம்..’
‘ஆமா வெல்லம்.. இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ஆனா சும்மா சைட்டடிச்சுட்டே இருப்ப.. அத நாங்க பாத்துட்டு இருக்கணும்?”
‘ஏண்டி இப்ப இப்படில்லாம் பேசுற?’
‘ஆமாடா.. நீ என் பின்னாடி அலைஞ்சல்ல.. உடனே ஒத்துக்கிட்டேண்பாரு என்னைச் சொல்லணும்…’

எப்பவாது பொண்ணு அமைதியாகும்னு நினைக்கிறீங்க? ஹீம்ஹும்! அது போன வருஷம் அப்பா நகை செஞ்சதுல இருந்து .. முந்தின நாள் பொண்ணுபாத்துட்டு போனவன் வரைக்கும் எல்லாக்கதையையும் சொல்லிட்டு டபால்னு எந்திருச்சு ஆட்டோ புடுச்சு போய்டும், நம்மாளு ஓடுவான். சர்வர் புடுச்சிப்பான். (பில்லக் குடுத்துட்டு போ சார்) இவன் பில் செட்டில்பண்ணிட்டு வரதுக்குள்ள ஆட்டோ போய்டும்.  வெளிய வந்து எதாவது ஒரு டீகடையில டீ அடிச்சு தம் போட்டாதான் ( மால்ல அப்பதான் ரெட்புல் 80+80 பில் பே பண்ணியிருப்பான்) நம்ம பயலுக்கு கண்ணே தெரியும், சரி அவளுக்கு கால் பண்ணலாம்னு போன் எடுத்தா ‘ ஹனி 8 மிஸ்டு கால்ஸ்’. அப்டியே ஷாக் ஆகி, திருப்பி கூப்ட முயற்சி பண்ணா ‘ யுவர் பேலன்ஸ் இஸ் லோ ந்னு ஒரு பொண்ணு ( ஆணின் காத்லுக்கு இன்னொரு பெண் தான் எதிரி) சொல்லும். மறுபடியும் நம்மாளு ஓடுவான், ரீசார்ஜ் செண்டர் எதுவும் கண்ணுல படாது, மூச்சு வாங்க ஓடி ரீசார்ஜ் பண்ணிட்டு இருக்கும் போது மெசேஜ் மேல மெசேஜ் வரும் ‘பை!’ ‘ கெட் லாஸ்ட்’ டோண்ட் ஸ்பீக் டூ மீ’ ‘ஒரு ரிப்ளை பண்ணக்கூட டைம் இல்லாம சைட் அடிச்சுட்டு இருக்கீங்களாசார்?’ ’எங்க சார் இருக்கீங்க?’ ’வேர் ஆர் யூ டா’ ‘ ஆர் யூ ஓக்கே’

கடைசி மெசேஜ் பாத்ததும் கெத்தாயிடுவான் நம்மாளு, ஆகா பொண்ணு கூல் ஆயுடுச்சுடா சாமின்னு, மறுபடியும் ஒரு டீ, ஒரு தம்மு. முடிச்சிட்டு வெளிய வந்து (ரோட்டோர பிளாட்பாரத்துல நின்னுகிட்டு)

‘ஹல்லோவ்!’
‘என்ன சார் ரொம்ப குஷியா இருக்கீங்க போல இருக்கு?’
‘இல்லப்பா.. எங்க இருக்க?’
‘இப்பதான் வீடு வந்து சேர்ந்தேன். எண்டரிங். ’ (பொண்ணு அதுக்குள்ள பால் சாப்டுட்டு டீவி போட்டுட்டு ரூம்ல செட்டில் ஆகியிருக்கும்)
‘ஹேய் ஏண்டி அப்டி திடுதிப்னு போய்ட்ட.. “
‘ஆமால்ல.. நான் மறந்தே போய்ட்டேன்… ஏண்டா அப்டி பண்ணே?”
(நம்மாளுக்கு குழப்பம் ஸ்டார்ட்டட்.  ஆமா நாம என்ன பண்ணோம்?)
‘இல்லமா, நான் தப்பா எதுவும் இல்ல.. சும்மாதான் பராக்கு பாத்தேன்.. அந்த பொண்ணு தற்செயலா கிராஸ் ஆச்சு’
‘எந்த பொண்ணு?’ (அடுத்த ட்டிராப்)
’அதாண்டி அந்த கிரீன் சுடி.. நீ கூட கோவப்பட்டு கிளம்பிட்டியே’
‘அவ கிரீன்சுடின்ற அளவுக்கு நியாபகம் இருக்கா உனக்கு?’
‘அய்யோ தெய்வமே மறுபடியும் முருங்கமரம் ஏறாத.. தயவு செஞ்சு…’
‘வேதாளம்ன்றியா என்ன? முன்னாடில்லாம், தேவதை தேவதைன்னு எத்த்தனை கவிதை எழுதுன.. இப்ப நான் ஒத்துகிட்டதும், வேதாளம் ஆகிட்டேன்ல?’
‘அய்யோ! அந்த அர்த்த்துல சொல்லல.. இப்ப சொல்லு, ஒரு நோட்டு புல்லா தேவதை கவிதை எழுதி கொண்டுவந்து தரேன்…’
’ஹாம்.. ஒன்னும் தேவையில்ல.. நாங்க கேட்டு நீங்க எழுதிக் கொடுக்கிறது’
’உன்கிட்ட எப்படி சொல்லி புரியவைக்கிறது?’
‘மரமண்டைன்றியா? ..”
‘…..”
’என்னடா சத்தத்தையே காணும்?.. மறுபடியும் கிரீன் சுடியா’

இது ஒரு வட்டம்ங்க.. ஒண்ணும் பண்ண முடியாது. ஒரு பொண்ணப் பார்த்து, பிடிச்சுப்போய், பின்னால சுத்தி அவள ஒத்துக்கவைக்கிற காலம் இருக்கே நரக வாசல். தூங்கவிடாம, படிக்கவிடாம எழுதவிடாம,வேலைசெய்யவிடாம எங்கயோ இருந்துகிட்டு நம்ம மண்டைக்குள்ள பிராண்டிகிட்டே இருப்பா… அவ ஒத்துக்கலைனு வைஙக, மண்டையவே கழட்டிப்போனமாதிரி ஆகிடும், என்ன பண்றோம், என்ன பண்ணனும் ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது. பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடும். ஒத்துகிட்டான்னு வைங்க,, நரக வாசல்னு சொன்னனே அங்க இருந்து கதவு திறந்து உள்ள போன மாதிரிதான். முத்து டையலாக் மாதிரி.. ‘வந்தாலும் ஏன்னு கேட்கமுடியாது.. போனாலும் போகாதன்னு சொல்லமுடியாது.. இச்சச்ச்ச இச்சச்ச கச்சச்ச கச்சச்ச்ச சா’ அப்புறம் நீங்க ஒரு டம்மி பீஸ். வேற வழியே இல்ல.. ஐஸ்கிரீம் ஸ்கூப்ப காபில்ல போட்டு குடிச்சா சூப்பாரா இருக்கும்னு கிண்டலுக்கு அவ சொன்னாக்கூட நீங்க குடிச்சே ஆகணும்.

இதுக்கு முக்கியமான காரணம், சினிமாக்காரங்க. படங்களப்பாருங்க.. படத்துல இருக்கிற காதலப்பாருங்க.. காதல் பட கிளைமாக்ஸையே பாருங்களேன்.. மூணு வருஷத்துல பரத் பைத்தியம், சந்தியாக்கு இரண்டு குழந்தைக. விண்ணைத்தாண்டி வருவாயா? ஜெஸ்ஸி எங்கயோ ல்ண்டன்ல செட்டில் ஆகிடும் ( பிளடி வெளி நாட்டு மாப்பிள்ளை) , கார்த்திக் ஜெஸ்ஸியோட பழைய வீட்டுல சுத்திக்கிட்டு, நொந்து நூலாகி, அந்து அவலாகி, ஒரு படம் எடுத்து தன்னோட படத்துல ஹீரோ ஹீரோயின் சேர்ற மாதிரி வச்சு ஜெஸ்ஸினு பேர்வைப்பான். பொண்ணு வந்து படம் பார்த்த்து, நல்லா இருக்கு ராசா உன் ஒர்க்கு.. இப்படியே மெயிண்டைன் பண்ணுனு வடிவேலு காமடி டையலாக்க சீரியஸ் மூஞ்சி வச்சு சொல்லி, பய்ல பீல் பண்ண உட்டுட்டு கார்ல ஏறி போய்டும் கார்த்திக் நடு ரோட்டுல நிப்பான் (இது அல்லவா குறியீடு பின்னாவின்னத்துவம்)

இவ்வளவு காமெடி தெரிஞ்சும் ஏண்டா மாமா லவ்ன்னு கேட்டா என்னோட ஒரே பதில்.. லவ் சார்… காதல் சார்… லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்… ஹி ஹி!

காதெலென்னும் தூங்கும் மிருகம் : 1

Newer Entries

%d bloggers like this: