அழிமுகம்

பின்னூட்டமொன்றை இடுக

’ஹிரோஷிமானி இக்கோ தெசுகா?’ கொஞ்சல் ஜப்பானிய மொழில் அந்தப்பெண் புன்னகைத்துக்கேட்டபோது,புரியவில்லை.

’மன்னிக்கவும், ஜப்பானிய மொழி தெரியாது’ என்றேன். ’ஹிரோஷிமா போறீங்களா?’ நல்லதொரு நுனி நாக்கு ஆங்கிலம். சிகரெட் சாம்பலை அதற்காக வைக்கப்பட்டிருந்த நீண்ட தொட்டியில் முடிந்தவரை நளினமாக தட்டிவிட்டு ‘ஆம்’ என்றேன். ‘தனியாகவா’ ஜப்பானியப்பெண்கள் எல்லாவற்றிலும் ஆச்சர்யம் கொண்ட கீச்சுக்குரலை நுழைத்துவிடுகிறார்கள் என்று தோன்றியது. மீண்டும் ‘ஆம்’ .

‘ஏன் ஹிரோஷிமா?’

இந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றும்பாதைகளெல்லாம் இந்தக்கேள்வியைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் ஒரு விருந்தினன். வேடிக்கை பார்க்க வந்தவன்.ஊர் சுற்ற வந்தவன். நம்மூரில் எது இவனை ஈர்த்துக்கொண்டுவந்திருக்கும் என்றொரு ஆர்வம் அவர்களின் கேள்விகளில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு ஆச்சர்யமுகபாவனை. பெரும்பாலனவர்கள் நான் இங்கே வேலை செய்கிறேன் என்பதை அறிந்தபின் அடங்கிவிடுவார்கள். வேலைசெய்கிறவன் இடைவெளிகளில் எங்குவேண்டுமானலும் போகலாம். நாடுவிட்டு நாடுகடந்து சுற்றுகிறவன் மீதுதான் கரிசனம், இதுவரை என்னாட்டில் நான் காணாத எதைத்தேடி வந்திருக்கிறான் என்னும் ஆச்சர்யம்.

” ஜப்பான் பயணம் என்று முடிவான கணத்தில் தோன்றிய உணர்வு. அங்கே ஒரு நாள் அமர்ந்திருக்கவேண்டுமென்று’

“எங்கே?”

“அணுகுண்டு விழுந்த இடத்தில். உடலெல்லாம் எரிய பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் உடல் எரிய இறந்து போன இடத்தில்” என்றேன். கொஞ்சம் அதிகமாகச் சென்றுவிட்டோம் என்று தோன்றியது. அவளிடம் அப்போதும் அதே புன்னகை.

“ஏன்?”

“மரணம் என்னை வசீகரிக்கிறது”

“கொலைகள். இல்லையா?

நேரடியான கேள்வி. உண்மையானதும் கூட. அதை மறைக்க முயற்சிசெய்தேன். நடுங்கி விழவிருந்த சிகரெட்டை லாவகமாக மறைப்பவன் போல தொட்டியில் அமிழ்த்தி அடுத்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டேன்.

” இருக்கலாம். உள்ளூர் சுடுகாட்டில், காசியில், எரியும் பிணங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திந்திருக்கிறேன். மரணம் வசீகீரமானதுதானே?” மெல்ல பந்தை அவள் பக்கம் உருட்டிவிட்டேன். புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தவள், இழுத்து மூச்சு விட்டாள்.

“இல்லை. மரணம், வெறும் சோம்பலான நாய். (Death is just a lame dog), கொலை, ஒரு வேட்டை நாய். சோம்பலில் எந்த வேடிக்கையும் இல்லை. வேட்டையில்தான் வேடிக்கை இருக்கிறது. வேட்டை நாய் சோம்பலாக இருக்கும்போது பார்த்திருக்கிறாய். அது அழகுதான். ஆனால் உண்மையில்லை”

பேச்சை மாற்றலாம் என்று தோன்றியது. நடுமுதுகில் பூச்சி ஊரும் எண்ணம். தலையசைத்து அதைக் கலைத்தேன். ” நீங்கள் தனியாகச் செல்கிறீர்களா?” என்றேன். “ஆம். ஆனால் அங்கே எனது நண்பர் இணைந்து கொள்வார். எனது பிறப்பிடம் அதன் அருகேதான். அங்கிருந்து வருவார்” என்றாள். ” உங்களுக்கு பிரச்சினை இல்லை எனில், எங்களுடன் இணைந்து கொள்ளலாம்” எளிமையான வார்த்தைதான். ஆனாலும் எதோ ஒன்று இயல்பான வெளியூர் பயம் உள்ளே உருட்டியது. ” இல்லை. அங்கே தனியே அமரவேண்டுமென விரும்புகிறேன். அந்த இடத்தில்.” சொல்லிவிட்டு அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறதா என்று பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. “சரி. பரவாயில்லை. இந்த ட்ரெயினிலும் அடுத்த நான்குமணி நேரம் தனியாகச் செல்வதாக எந்த வேண்டுதலும் இல்லாவிட்டால் என்னுடன் இணைந்து கொள்ளலாம். பயப்படாதீர்கள், தின்றுவிடமாட்டேன். ஜப்பானியர்களில் உங்கள் ஊரின் பிஸ்கட் கொள்ளையர்கள் இருக்க சாத்தியம் குறைவுதான்” என்றாள். இந்தியாவைப்பற்றி எங்கோ படித்திருக்கிறாள். குறிப்பாக ரயில்பயணத்தின் பிஸ்கட் கொள்ளையர்களைப் பற்றி. இவளிடம் எ ந் நாட்டுப்பெருமையை எதைச் சொல்லி உருவாக்குவேன் என்ற எண்ணம் ஓடியது. இரண்டாவது சிகரெட்டை அணைத்தேன். புகையறை விட்டு கதவைத் தள்ளி அவளுக்கு வழிவிட்டேன். புன்னகைத்தபடியே வெளியேறினாள். தொடர்ந்து பின்னாலே வந்தேன். சிறுபிள்ளை போன்ற உடல். அதிகமும் பதினஞ்சு வயதைத் தாண்டாதென மதிக்கலாம். ஆனால் இந்த ஊரில் குமரிகள் முதல் கிழவிகள் வரை இதே உருவம் என்பதால் சற்று இடறியது. . என் இருக்கையைத் தாண்டி நடந்தாள்.

“என் இருக்கை இங்கே இருக்கிறது.” குரல் பலவீனமாக ஒலித்தது. “பையை எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள். ஜன்னலை ஒட்டி இடம் தருகிறேன் என்றாள். நாங்கள் இருந்த பெட்டி, முன்பதிவு செய்யத்தேவையில்லாதது. யாரும் எங்கும் அமர்ந்துகொள்ளும்படியிலானது. பையை எடுத்துக்கொண்டு நாய்க்குட்டி போல அவள் இருக்கையின் அருகில் சென்று அமந்தேன். திடீரென நியாபகம் வந்தது. ” உங்கள் பெயர் சொல்லவில்லையே என்றேன்”

“ஷினு. ஷினுகாமி. உங்களுக்கு?” என்று கை நீட்டினாள். “நந்து” என்றேன். கைகொடுக்குமுன்னதாக சட்டையில் துடைக்கும் உணர்வெழுந்ததை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். அதற்கும் இந்தியாவை அவள் இழுக்கக்கூடும் என்று தோன்றியது.

” கிட்டத்தட்ட உங்கள் பெயரைப்போலவே எங்கள் ஊரில் ஒரு கடவுள் பெயர் உண்டு. சிவகாமி”

” ஓ”

“தெரிந்திருக்கும் என நினைத்தேன். எங்கள் ஊர் ரயில் திருட்டையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்”

பெரிதாகச் சிரித்தாள். ” மனதைப்புண்படுத்தி விட்டேனா. மன்னிக்கவும். நிஜமாகவே சிவகாமி தெரியாது. ஆனால் இந்தியாவில் ஒரு பயணியாக சுற்றித்திரியவேண்டும் என நினைத்திருக்கிறேன். அதைப்பற்றி படிக்கும்போதுதான் ரயில் தீருட்டு பற்றியும் படித்தேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்”

“புண்பட்டாலும் அது உண்மைதானே.” சங்கடத்தை மறைத்து புன்னகைத்தேன்.

“மரணம் போல”

“என்ன?”

“மரணத்தைப்போல. எல்லாரையும் புண்படுத்தும். எல்லாருக்கும் வரும். சாஸ்வதாமன உண்மை. சரிதானே”

“சரிதான்.”

சாய்ந்து அமர்ந்து கொண்டேன். ஊர்கள் ஜன்னலில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன. அதிவேகதொடர்வண்டிகள் மீது ஆரம்ப நாட்களில் இருந்த ஆச்சர்யம் குறைந்து மற்றுமொரு பயணம் என்ற அளவில் மாறியிருந்தது. ஆனாலும் மரங்களுக்குப் பதிலாக ஊர்களே வருவதும் மறைவதுமாக இருப்பது இன்னும் ஆச்சர்யமூட்டுவதாகவே இருந்தது. “உறங்கப்போகிறீர்களா” அருகிலிருந்தவள் கேட்டாள். திரும்பி அமர்ந்தேன். “அப்படியெல்லாம் இல்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் ஏன் ஹிரோஷிமா போகிறீர்கள்?” நானும் பேசத்தயார் என்பதைப்போல மெல்ல சொற்களை நீட்டினேன்.

“புத்தாண்டு கொண்டாட்டம். ஒவ்வொரு புத்தாண்டும் ஊருக்குப்போய் ஊர் நண்பர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இப்போது அங்கே யாருமில்லை. எல்லாரும் டோக்கியோ வந்துவிட்டார்கள். அல்லது வெகு தொலைவில் எதாவது வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவன் மட்டும் அங்கே இருக்கிறான். அவனை வரச்சொல்லியிருக்கிறேன். புத்தாண்டு நள்ளிரவுக்காக. இரவெல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு, புத்தாண்டு பகல் முழுவதும் உறங்குவோம். மீண்டும், எழுந்து டோக்கியோவிற்கு திரும்பி வரவேண்டும். ”

சென்னையிலிருந்து திருச்சிக்கு வாராவாரம் துவைக்கவேண்டிய துணிகளுடன் போய்வந்துகொண்டிருந்த பழைய அறை நண்பன் நியாபகம் வந்தது. அவளுக்கு பெட்டியில் அவளது ஆடைகள் ஒருவார அழுக்குடன் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதாக தோன்றியது. சிரிப்பு வந்தது.

“ஏன் சீரிக்கிறீர்கள். ”

“இல்லை எங்கள் நாட்டிலும் இப்படித்தான். வாராவாரம் பொட்டிகட்டி ஊருக்குப்போகும் பழக்கம் உண்டு. ஊரில் குளத்தில் துவைப்பதற்காக ஆடைகள் சுருட்டி கொண்டுபோவோம். அது நியாபகம் வந்ததது”

”நிச்சயமாக என் பெட்டியில் அழுக்குத்துணியில்லை. ஒரு நாய்க்குட்டி மட்டும் வைத்திருக்கிறேன். நேற்று இறந்தது”

தூக்கிவாரிப்போட்டது. இறந்த நாய்க்குட்டியை பெட்டியில் வைத்துக்கொண்டு சிரித்தபடி வரும் ஒரு பெண்.

அவள் வெடித்துச் சிரித்தாள். ”பதறாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பெண்களின் வழக்கமான ஆடைகள்தான்”. அவள் கண்ணடித்தாள். சிறிய கோடுபோன்ற கண்கள். தூண்சிற்பங்களில் இருக்கும் மூடிய கண்களைப்போல. டைல்ஸில் குறுக்கே ஓடும் கறுப்பு நாய்க்குட்டி போன்ற கருவிழிகள். மஞ்சள்துணி போட்டு மூடிய, துணியை விடுவிப்பதற்காக பதறி ஓடும் கறுப்பு நாய்க்குட்டிகள்.

”ஆனால் உண்மையில் எனது குடியிருப்பில் மாடியில் ஒரு நாய்க்குட்டி இறந்துவிட்டது. அந்தப்பெண் இரவெல்லாம் அழுதுகொண்டேயிருந்தார். விளக்கு எரிந்துகொண்டேயிருந்தது இரவெல்லாம். அவள் கணவர் சமாதனம் செய்ய முயற்சி செய்துகொண்டேயிருந்தார். என்னவோ திடீரென நினைவு வந்தது. அதைச் சொன்னேன். சிறிது நிமிடத்தில் முகமெல்லாம் வெளிறிவிட்டது பார்”

உண்மையிலேயே உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தேன். இன்னும் அதிவேக ரயிலிலில் ஆள்குறைவாக இருக்கும் பெட்டியில் கைப்பையில் இறந்த நாயை வைத்திருக்கும் பெண் என்பதாகவே அவள் சித்திரம் உள்ளே மின்னிக்கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு தலையசைவுக்கும் ஒளி விடுபட்டு பார்த்தேன். பிறகு மீண்டும் மின்னலெனவெட்டும் அந்த சித்திரம். இடையே அந்த டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகள். ஈரம்பொதிந்த திசுத்தாள்களைப் பையிலிருந்து எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தேன். டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகளை. பெட்டியில் இருக்கும் நாய்க்குட்டிகளை. இதுவரை பார்த்த அத்தனை நாய்க்குட்டிகளையும். அழுந்தத்துடைத்து எடுத்தேன். அவள் எந்தச் சலனமும் இன்றி எதிர்ப்புற ஜன்னல்களுக்கு வெளியே ஓடும் மரங்களைப் பார்த்துக்கொண்டேவந்தாள். இடைவளி புகைவண்டி நிலையம் எதோ ஒன்று வேகமாக கடந்துசென்றது. நடைமேடையிலிருந்து ஒரு நாய்க்குட்டி ஓடிவந்து ஓடும் ரயிலின் கண்ணாடியில் பளீரென அறைந்தது போல இருந்தது. முகத்தை மீண்டும் அழுந்தத் துடைத்தேன். அவள் இயல்பாகத் திரும்பினாள்.

“என்ன செய்யப்போகிறாய் குடித்தபின்?”

“என்ன?”

”இல்லை. அந்த இடத்தில் அமர்ந்து இரவில் குடிக்கவேண்டும். பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?”

“எதுவும் இல்லை. அவர்களில் யாராவது ஆவியாகவந்து காட்சி தந்தால் கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்”

அதே சிறிய விலக்கமான புன்னகை. வெடித்துச்சிரிப்பாள் என்று எதிர்பார்த்தேன். அல்லது சீண்டப்பட்டிருக்கவேண்டுமென்று. எதோ கதை கேட்பவள் பாவனையில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள். என்னை நோக்கி சாய்ந்து அமர்ந்தாள்.

“என்ன பேசப்போகிறாய்? அவர்களிடம் எதாவது கேட்கவேண்டுமா?”

“ஆம். மனிதர்களைப்பற்றி. அவர்களைக் கொல்வதாக முடிவெடுத்தவர்கள் பற்றி. அரசியல் காரணங்களுக்காக எங்கோ அமர்ந்து ஒரு பொத்தானை அழுத்தி அத்தனை பேரைக் கொன்ற ஒரு விரலைப்பற்றி. ”

“ஒரு வேளை நீ அங்கு இறந்திருந்தால், உன்னிடம் யாரவது வந்து இதே கேள்வியைக் கேட்டால், உன் பதில் என்ன?”

உண்மையில் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளைச் சீண்டுவதற்காக, தூண்டி வாயைப்பிடுங்குவதற்காக எண்ணி எடுத்த ஒவ்வொரு சொல்லையும் அவள் எளிதாக கடந்து சென்றாள். அதைவிட கூரிய ஆயுதங்களை என்னை நோக்கி எறிந்துவிட்டு.

”தெரியவில்லை. பெரும்பாலும் ஏற்கனவே எதோ ஒரு விதத்தில் பழிவாங்கிவிட்டேன் அல்லது இறந்தபிறகு இது ஒரு விஷயமாகத் தெரியவில்லை இரண்டில் ஒன்றுதான் பதிலாக இருந்திருக்கும். உன் பதில் என்ன?”

“என்னிடம் பதில் இல்லை” வெடுக்கென சொன்னாள். கையில் வைத்து அழகுபார்த்த அழகியபூந்தொட்டி விழுந்து நொறுங்கியதைப்போல என்னில் திடுக்கிடல் எழுந்தது. “என்னை மன்னித்துவிடு” என்றேன். அவள் என் கண்களை ஊடுருவிப்பார்த்தாள். பதில் சொல்லாமல் மறுபுறம் முகந்திருப்பி மீண்டும் ஓடும் மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இலகுத்தன்மை எதோ ஒன்று உடைந்ததுபோல் இருந்தது. இழுத்துபெருமூச்சு விட்டு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு வந்தேன். மரங்கள். சூரியமின்சாரத்திற்கென புறம்போக்கு நிலங்களில் அரசாங்கத்தால் பதிக்கப்பட்ட தகடுகள். பழைய ஜப்பானிய பாணியிலான ஓட்டுவீடுகள். கடந்து செல்லும் ரயில் நிலையங்கள். அங்கே அந்த நிறுத்ததில் நிற்கப்போகும் புகைவண்டிகளுக்காக காத்திருப்பவர்கள். தள்ளுவண்டிகளில் அமரவைக்கப்பட்டு உறங்கிவிட்டிருந்த குழந்தைகள். அவள் உறங்கியிருக்கக்கூடும் என்று தோன்றியது. பின்கழுத்தில் உறுத்த திரும்பினேன்.கூர்மையாகப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

” பெரியவர்கள் இறந்ததைவிட குழந்தைகள்தான் அதில் அதிகம். பேசமுடியாத குழந்தைகள். உடல் எரிய. நாவறண்டு. தண்ணீர் என வாய்திறந்து கேட்கத்தெரியாத குழந்தைகள். அவர்களிடம் பதில் கிடையாது. கேள்விகள் இருந்திருக்கலாம். யாருக்கும் தெரியாது. ஆனாலும் இறந்தார்கள். சிறிய பொத்தான். எங்கோ யாரோ அழுத்திய ஒரு பொத்தான். யாரோ யாரிடமோ சொல்லிய ஒரு வார்த்தை. மெல்ல ஊர்ந்து எழுந்து பறக்கிறவர்களிடம் வந்து சேர்ந்து, அவர்கள் திறந்த சிறிய கதவு. அங்கிருந்து விழுந்த ஒரு உலோகத்துண்டு. மொத்த பேரையும் நாதிறக்கவிடாமல் சாகடித்துவிட்டது. அத்தனை பேரையும் கொல்லவேண்டும். அதற்குக்காரணமான அத்தனை பேரையும் ஒருத்தர்விடாமல்.” அவள் ஜப்பானிய வாசம் வீசும் ஒரு ஆங்கில உச்சரிப்பில் தடதடவென பொரிந்தாள். குரல்தழுதழுத்தது போல் இருந்தது. ஆனால் கண்களில் கோபம் இருந்தது. எச்சில்விழுங்கி எதுவும் சொல்லமுடியாமல் விழித்தேன். ”இன்னொரு சிகரெட்?” அவளது பதிலுக்கு காத்திராமல் இருக்கையிலிருந்து எழுந்தேன். அவளைக் கடந்து போகவேண்டும். அவளை மீறிப்போகமுடியாது. அவளும் அமர்ந்திருந்தாள். சில நொடிகளுக்கு பிறகு பெருமூச்சு விட்டு கைப்பையிலிருந்து சிகரெட்பொபொட்டியையும் நெருப்புக்குச்சியையும் எடுத்துக்கொண்டு எழுந்து வெளியே வந்து வழிவிட்டாள். நான் முன்னால் நடந்தேன். பின்கழுத்தில் அவள் பார்வை குறுகுறுத்து.

பெட்டியோடு இணைந்திருந்த புகையறைக்குள் நுழைந்தேன். ஒதுங்கி அவளுக்கு வழிவிட்டேன். நுழைந்து கதவை அடைத்தாள். “ மன்னித்துவிடு. உன்னைக்காயப்படுத்தும் நோக்கமில்லை. தோன்றியது சொன்னேன்” என்றாள்.

இலகுவானேன். சிகரெட்டைப்பற்றவைத்து அவளிடம் நீட்டினேன். பழைய உதட்டோரபுன்னகையுடன் அதைவாங்கி தன் சிகரெட்டைப்பற்றவைத்து என்னிடம் தந்தாள். நான் கொடுத்த சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டாள்.

“பிணங்கள் எரியும் ஊர் ஒன்று சொன்னாயே. காஜி.அதுவும் இப்படித்தானா? படித்ததில்லையே ”

“ஆ. இல்லை. இப்படியில்லை. அது மதம் சார்ந்த ஒரு நம்பிக்கை. அங்கே இறந்தால் இறந்தவர்களை எரித்தால். கடவுளை அடைவதாக ஒரு நம்பிக்கை”

“அதற்காக எரிப்பார்களா உயிரோடா” அவள் கண்களில் பதட்டத்துடன் கூடிய ஆச்சர்யம்.

“அய்யோ அப்படி இல்லை. இறந்தர்களை. பிணங்களை. சிலர் வயதான காலத்தில் இறப்பதற்காக அங்கே போய் தங்கி காத்திருப்பார்கள். இறந்தபிறகு யாராவது எரித்தால் நல்லது என்று. சில சமயங்களில் பாதி எரிந்த பிணங்களை அந்த ஆற்றில் இழுத்துவிட்டுவிடுவார்கள். அதைப்பற்றி நிறைய காணொளி இணையத்தில் கிடைக்கும். “

“ஆக எதுவுமே அரசியலோ கொலையோ இல்லை”

“இல்லை.”

“ நீ பார்த்த மற்ற சுடுகாடுகள்.?”

“எதுவுமே கொலையல்ல. எல்லாமே மரணங்கள். ”

“ நீ உயிர்களுக்காக அலையவில்லை. வெறும் நெருப்பிற்காக அலைகிறாய் இல்லையா”

“ஆம்.” காற்று நீக்கிய பலூன் போல உள்ளுக்குள் சுருங்கினேன். தலையைக்குனிந்துகொண்டேன். ஏனென்று தெரியாத ஒரு சங்கடம் அடிவயிற்றில் குமிழென எழுந்தது.

”அதான் கையிலேயே வைத்திருக்கிறாயே.” மிகச் சாதாரணமாகக் கேட்டாள். திடுக்கிட்டேன். சிகரெட்டைச் சுண்டினேன். மிகச்சரியாக அதற்கான தொட்டியில் போய் விழுந்தது.

“ நெருப்பு எல்லாபுறமும் இருப்பதுதான். அதைத்தேடும் உனது வேட்கையைப்போல. ஆனால் மரணம் என்று நீ சொல்லிக்கொள்வதில் ஒரு நெருப்பு கிடைக்கிறது. அதைப் பற்றிக்கொண்டிருக்கிறாய். உன் தனிமைப்பயத்தைப் போக்க என்னுடன் இணைந்து கொண்டது போல இல்லையா” சீண்டுவதற்கான வார்த்தைகளைப் பொறுக்கி அளிக்கிறாளா அல்லது அவள் சாதாரணமாக பேசுவதே சீண்டுகிறதா என்ற குழப்பம் வந்தது.

“மன்னிக்கவும். நீதான் என்னுடன் இணைந்துகொண்டாய் என நினைத்தேன். “ முதலில் அவள்தான் வந்து பேசினாள் என்பதை சுட்டிக்காட்டவிரும்பினேன். “ ஹா ஹா. நான் சிகரெட்டுக்காக வரும்போது நீ தனியே அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். பதட்டமாக இருந்தாய். நாங்கள் ஆறுவயதிலிருந்து தனியே நகரத்து ரயில்களில் குறுக்கும் நெடுக்குமாக போய் பழகியவர்கள். சந்திக்கும் முகத்தில் அவர்கள் தனியாக வந்தவரா, குடிபோதையில் இருக்கிறாரா பதட்டத்தில் இருக்கிறாரா என்பதை எங்களால் உணரமுடியும். நான் ஹிரோஷிமாவின் தெருக்களில் வளர்ந்தவள். சுற்றுலாப்பயணிகளின் முகக்குறிப்புகள் எனக்கு தலைப்பாடம்” என்றாள்.

“ நான் சுற்றுலாபயணியல்ல.”

“வேலை செய்கிறாயா?”

“ஆம் டோக்கியோவில். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக”

“ஆனால் ஹிரோஷிமா இதுதான் முதல்முறை”

“ஆம் ஆனால்..”

“இதுவரை ஏன் வரவில்லை”

“ நேரம் வாய்க்கவில்லை” என் குரல் உள்ளடங்கியதுபோல் எனக்கே ஒலித்தது “ என் வேலை அப்படி”

”ஆனால் மற்ற இடங்களெல்லாம் சுற்றியிருக்கிறாய்”

“கொஞ்சம். பெரும்பாலும் டோக்கியோ. சில நேரங்களில் அருகிருக்கும் சிறப்புத்தீவுகள்”

“ஆனால் ஹிரோஷிமா இல்லை”

“ஆம். ஆனால் …”

“ நான் சொல்கிறேன். உனக்கு பயம். ஹிரோஷிமா மீது பயம். மரணத்தின் மீது பயம். இன்னும் சொல்லப்போனால் உன் ஊர் மீது பயம். அதற்கான சாக்கு ஜப்பான். ஹிரோஷிமா கொலைகள் மீது பயம் அதற்கு சாக்கு வேலை. தனியாக போக முடிவெடுத்தாலும் இடம் நெருங்க நெருங்க அங்கே இறந்தவர்கள் நினைவுக்கு வந்து மீண்டும் பயம். அதற்கு சாக்கு என்ன மரணம் வசீகரிக்கிறது. போய் அமர்ந்து குடிக்கப்போகிறாயா”

ஆழத்தைப்பிளந்து பிளந்து நுழைந்துகொண்டேயிருந்தாள். தொண்டை கமறியது. இருமினால் அல்லது அசைத்தால் அழப்போகிறேன் என்று முடிவெடுத்துவிடக்கூடும்.

“ஊரில் என்ன பிரச்சினை? ஏன் காசிக்குப்போனாய்?”

திடுமென அந்தப்புள்ளியையும் தொட்டாள். “சும்மாதான். அந்த நதிக்கரையில் கோயில் இருக்கிறது. அங்கே பெளர்ணமி அழகாக இருக்குமென்றால் பார்க்கப்போனேன்”

“பார்த்தாயா? பார்த்திருக்கமாட்டாயே?”

“ஆம். நதியில் ஒரு பிணத்தைப்பார்த்தேன். ஒரு குழந்தை. திறந்திருந்த கண்கள். நீர்ப்பரப்பின் மீது. ஈயாடிக்கொண்டிருந்தது. அதற்கு மேல் அந்த ஊரில் இருக்க்க முடியவில்லை. திரும்பிவிட்டேன் வந்தவேகத்திலேயே”

“சரி. உண்மையைச் சொல். எதற்காக ஹிரோஷிமா போகிறாய்?”

“தற்கொலை செய்துகொள்ள” என்றேன். ஏன் அவளிடம் இதைத் திறந்தேன் என தயக்கம் எழுந்தது. ஒருவேளை அதுவும் தெரியும் என்று சொல்லிவிடுவாள் என்று பயந்தேன்.

“ஏன். ஏன் ஓடுகிறாய்” என்றாள்.

“ஒரு பெண்”

”ஆண்கள். “ முணுமுணுத்தாள். மறுபுறம் திரும்பிக்கொண்டாள். “ விலக விரும்பியவளை திரும்பிப்பார்க்கவைக்கவேண்டும். குற்ற உணர்ச்சியைத் தூண்டவேண்டும். அவ்வளவுதானே? அதற்காகத்தானே இந்த நாடகம்?”

“அப்படியில்லை ஒருவேளை இது அவளுக்குத் தெரியாமலே கூட போகலாம் இல்லையா. இதில் என்ன குற்ற உணர்ச்சி. இது எனக்கு ஒரு தப்பித்தல் அதற்காக”

”என் இனிய நண்பா..” அவள்வார்த்தையை இழுத்த வேகத்தில் கிண்டல்தொனியிருந்தது. “ நீ எங்கும் இறக்கப்போவதில்லை. இறக்கவிரும்புகிறவனுக்கு நாடு ஊர் வித்தியாசங்கள் தேவையில்லை. நீ அதைச் சொல்லிச்சொல்லி ஊதிப்பெருக்கி பிறகு காற்றுப்போன பலூனைப்போல தென்றலில் அசைந்தாடி இறங்கப்போகிறாய். எதுவும் நிகழப்போவதில்லை. ஏன் உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய்.”

“ நான்..வந்து…” எனக்கு வார்த்தைகள் குழறியது. அவள் சொல்வது உண்மைதான் என்று தோன்றியது.

“அங்கே அருகருகே அருமையான ஜப்பானிய பாணி கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று உங்களூர் பெண் தெய்வம் சாயல் என்றும் இந்திய கலாச்சார பாணியென்றும் சொல்கிறார்கள். சுற்றிப்பார். சில புகைப்படங்கள் எடுத்துக்கொள். திரும்பிப்போ. வேலையைக் கவனி. எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு முறை இந்த நாளை நினைத்துக்கொள். புரிகிறதா” என்றாள். அவள் குரலில் உத்தரவிடும் தோரணைக்கு எந்தக்கணத்தில் மாறினாள் என்று ஆச்சர்யமாக இருந்தது. எந்தத் தருணத்தில் நான் அவளிடம் அடங்கியவனாக மாறினேன் என்றும்.

ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது அதிக கூட்டமில்லை. மெல்ல குதிகால்களை உயர்த்தி விரல்களில் நின்றபடி நெற்றியில் முத்தமிட்டாள். பெட்டியைத் தள்ளிக்கொண்டு விறுவிறுவென இறங்கிப்போனாள். சக்கரங்கள்பொறுத்தப்பட்ட அந்தப்பெட்டி சிவப்பு நிற நாய்க்குட்டி அவள் பின்னால் துள்ளி ஓடுவது போல் தோன்றியது.

o

உண்மையில் இந்தக் கதை நடந்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். வெகுசமீபத்தில் ஜப்பானிய மொழி கற்பதற்காக சிறப்புவகுப்பில் இணைந்திருக்கிறேன். எழுத்துக்களைத்தாண்டி வார்த்தைகள் வரை வந்திருக்கிறேன். ஷினு என்ற வார்த்தைக்கு அவர்கள் மரணம் என்று அர்த்தம் சொன்னபோதுதான் இந்த நிகழ்வும் மொத்தமாக நினைவுக்கு வந்தது. வீட்டிற்குவந்து காமி என்பதற்கான அர்த்தங்களைத்தேடினேன். கமி,காமி, பல எழுத்துவகைகள், மாற்றி மாற்றி தேடி இறுதியாக தேடியதை அடைந்தேன்.காமி என்றால் கடவுள். ஷினு காமி. மரணத்தின் கடவுள்.

o

[[ஷுனுகாமி என்ற பெயரில் 26-July-2017 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளியானது ]]

பேச்சி, மாரி மற்றும் சிலர்

1 பின்னூட்டம்

பேச்சியின் மருதாணி மரங்களில்
கட்டப்பட்ட
தொட்டில்களை எண்ணிக்கொண்டு
மாவிளக்கு வயிற்றில் சுட
அங்கேயே படுத்திருக்கிறாள்
அப்பேர் கொண்டவள்

வரிகளை மீறிய வலிகளைச்
சுமந்த நினைவுகள்
அங்கேயே
சிவந்து மலர்ந்திருக்கின்றன

நான் எதிரில் அமர்ந்திருக்கிறேன்
தொலைவில்
வெகுதொலைவில்

மழையின் கடைசி சொட்டு கண்டு
நாளாகிவிட்டது

o

அரிசியும் ஆலைச் சர்க்கரையும்
மாரியம்மனின் எதோ ஒரு
பழங்கால நினைவிலிருந்து
வெளியேறியிருக்கக்கூடும்

அவள் கண்கள்
வெறித்திருக்கின்றன
உபயம்
கொண்டையனாசாரி
டியூப்லைட்டின் மீது

செப்பிலடித்த ஆசாரி
தன் உளியினை திருப்பிப்பார்த்தப்படி
அங்கேயே
அந்த கொண்டாட்டும் முடியும்வரை
காத்திருக்கிறான்

பசியுடன் இருக்கும்
அத்தனை உயிர்களுக்கும் ஒற்றை இலை
பாயாசம் தேவையாயிருக்கிறது.

விறகினை நீக்கிக்கொண்டேயிருக்கிறார்கள்
பொங்கல்பானை கொதித்துக்கொண்டிருக்கிறது

தளதளவென.

o

தேரடிமாடனுக்கு
திருத்தமான கைகளை வாழைமட்டையில்
செதுக்கி

நீண்ட ஈட்டிமுனையில்
அறுக்கப்பட்ட ஆட்டை
இலாகவமாக பொருத்தி வெளியேறியவன்

வெளிப்பிரகார சுவரில் வெளிப்புறம் திரும்பியமர்ந்து
தன் பீடியை
இழுக்கிறான்

சிறப்பு பிளாஸ்டிக் கப்பில்
சிறப்பான காப்பி
அவனுக்காக காத்திருக்கிறது

சிரட்டையின் நிறம் சில நேரங்களில்
வெள்ளை என்பது
ஒரு ஓவியனாக
அவனுக்கு தெரியும்.

பிசாசுகளின் கதவுகள்

பின்னூட்டமொன்றை இடுக

முலைகுலுங்க ஓட்டப்பயிற்சியிலிருக்கும்
பெண்ணின் கண்களைச் சந்திக்க நேரும்போது

மூத்திர நாற்றத்தின் நடுவேயும்
என்றோ
கால்விரித்து அதே
இடத்தில் அமர நேர்ந்தவளின்
இறுகிய தொடைகளை
கற்பனை செய்துகொள்ள முடியும்போது

நெருப்பில்
அலறும் சிறுமியின்
வரையப்பட்ட கண்களுக்குள்

அனல் நகரத்தின்
ஒரு துளியை மீண்டும்
பருகிக் கொள்வேன்.
o

வெகுதொலைவில் இருப்பவரைச்
சந்திப்பதற்காக
ஒரு
கதவு வரைந்தேன்

பிறகு அதைத் திறந்து
அவரை உள்ளே அழைத்தேன்
வந்தவர் திரும்பிப்போகிறார்.
கதவை அடைத்துக்கொள்கிறார்

மீண்டும் திறப்பதற்காக காத்திருக்கும்போது
ஒரு முறை அவர் முகம்
ஜன்னலருகே வந்து
படீரென மறைகிறது

இனி கதவுகளுக்கு
இங்கே தேவையில்லை.
o

சருகைத்தாளுக்குள் அலையும் தலையை மீறி
வெளியேறும் பாம்பின் வாலில்

குவிக்கப்பட்ட விரல்களிலிருந்து
அச்சத்துடன் கொத்தித்தின்னும்
தேன்சிட்டின்
கூரலகுகளில்

சிரிப்பின் குலுங்கலில்
உதட்டோரம் முலைப்பாலை
ஒழுகவிடும் கைக்குழந்தையின்
பாதங்களின் சிவப்பில்

அந்தப்பிசாசினையும்
மீண்டும் புதைத்தழிப்பேன்.

தற்கொலைகள் பெண்கள் மற்றும் மதுவகைகள்

பின்னூட்டமொன்றை இடுக

நேற்று என் நினைவுக்குறிப்பேட்டை
மீண்டும் எடுத்தேன்

முழுக்கவும்

தற்கொலை செய்துகொண்டவர்கள்
முயற்சி செய்து தப்பித்தவர்கள்
பேசிப்பேசியே பிழைத்துக்கொண்டவர்கள்

நினைவுக்குறிப்பேட்டை
இன்றும் எடுத்தேன்

முன்பே சென்று விட்ட ரயிலுக்கு
இன்றும் காத்திருப்பவர்கள்
தவறவிட்ட ரயில் பற்றிய
காவியங்களை எழுத
முயற்சி செய்கிறவர்கள்
மறுபடியும்
அடுத்துவரும் ரயிலில்
விழக்காத்திருக்கும் ஒருவர்.

நாளை எடுத்துப்படிக்க
எப்படியாவது கண்டறிந்து எழுதிவைக்கவேண்டும்

ஏன் அவர்கள் உடல் சிதறவிரும்பினார்கள்
ஏன் அவர்கள் மின்சாரக்கம்பிகளை கடித்தார்கள்
ஏன் அவர்கள் எரிந்து பொசுங்கும் சதைகளை விட்டுச்சென்றார்கள்
ஏன் அவர்கள் போகும்போதும்
அமைதியாக
தூக்கத்தில் நீங்கிச்செல்லாமல்

விழித்திருக்கும்போது
மிச்சமிருப்பவர்களுக்கு குற்ற உணர்ச்சியை
அளிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்கள்

அந்தக்கடைசி நொடியிலும்?

o

மீண்டும் இன்று அந்த விளையாட்டைப்பார்த்தேன்
கடைசியாய் பார்த்துக்கொண்டிருந்தபோது
தொலைக்காட்சி பாதியில்
நிறுத்தப்பட்டது

என்னை உடனடியாக
அந்த அறையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்

ஆச்சி வந்து
தன் தங்கச்சங்கிலியை கழற்றி
அவளுக்குப் போட்டு
திருஷ்டி முறித்து கண்ணீர் உகுத்தார்

நான்
ஜன்னலுக்கு வெளியே நின்று
பயந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே

ஒன்றுமில்லை என புன்னகைத்து
அவள் முகம் சிவந்து
வழியனுப்பி வைத்தாள்

ஒருமுறையாவது
திரும்பிச் சென்று சொல்லவேண்டும்

பெண்ணே
எல்லாமே இனிதான் இருக்கிறது.

o

மிகுந்த தயக்கத்துடன்
கசந்த உதடுகளை
காயவிடாமல் சப்புக்கொட்டியபடி
அருந்திய
முதற்கோப்பை மது இன்னும் உள்ளிறங்காமல்
நினைவில் இருக்கிறது

மிகுபோதையின் கனவொன்றில்
அழிதேசத்தின் கடைசி
எச்சங்களுக்கு கீழே அமர்ந்தபடி
அவளை அழைத்து குரல் கேட்டு
உடனே துண்டித்து
பின் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த இரவும்

தற்கொலை எண்ணிக்கைகள்
அதிகமாக இருக்கின்றன
பெண்களின் எண்ணிக்கை
அதிகமாக இருக்கிறது
மதுவின் எதுக்களிப்பும் அதற்கு
சற்றும் குறைவில்லை

கழிப்பறையின் சுருள்காகிதத்தை
யாருமற்ற
இரவொன்றில்
தன் முழு நகங்களுடன் கிழித்துப்போடும் பூனையொன்றை

தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்

கூர்செய்யப்பட்ட நகங்களுடன் தான்
நிகழவேண்டும் சில மரணங்கள்.

மூன்று உள்ளாடைகள்

பின்னூட்டமொன்றை இடுக

மொழியற்ற அப்பெருநிலத்தில்
முதல்முறை
நான் அதைச் சந்திக்கும்போது
அவள் தன் தற்கொலையின்
விளிம்பில் இருந்தாள்

பிறகு
மெல்ல இறங்கி வந்து
என்னை அணைத்துக்கொண்டாள்

உள்ளாடைகளுக்கு மீதாக
அவள்
தன் தினசரி
சேலையை அணிந்துகொள்ளுமுன்

அன்று
நான் எனக்குள்
அவளுக்கு உறுதியளித்தேன்

பெண்ணே உன் த்ற்கொலையை நான்
ஒரு நாள் நிறைவேற்றுவேன்

முழு ஆடையுடன்.

o

நீ என்னை
எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாய்
தெரியுமா நந்து

எனக்கு என்னை காட்டிக்கொள்வதில்
மிகுந்த கூச்சமுண்டு

பெண்ணே
எனக்காக ஆடையை
நெகிழச்செய்தவர்கள்
இன்று உயிரோடு இல்லை தெரியுமா

ஆக என்னைக் கொல்வதற்காக
என் ஆடைகளை
நெகிழச் செய்தாயா

இல்லை பெண்ணே
என் மீது சத்தியம்

நான் என்னைக் கொன்றுவிடக்கூடாதென்ற பயத்தில்தான்

இதுவரை
பலரை
ஆடைகளை நெகிழச் செய்திருக்கிறேன்
பலமுறை

o

அது நிச்சயம் ஒரு திரைப்படம்
அல்லது
அது நிச்சயம் ஒரு கனவு
அல்லது ஒரு மனப்பிரம்மை

அந்தப்பெண்
அடுத்த அறையிலிருந்து
கதவை அறைந்து கொண்டேயிருக்கிறாள்
என்னால் குடிக்க முடியவில்லை

அடுத்த கோப்பையை சாய்க்கும் முன்
அவன் அலறுகிறாள்
அப்பா

தெய்வமே நீ இங்கிருக்கிறாயா என்கிறேன்

அப்பா
நான் ஆடையில்லாமல் இருக்கிறேன்

பெண்ணெ நீ என் பிரம்மை

அப்பா இந்தக் கதவுகளைத் திறக்காதீர்கள்

பெண்ணே நீ என் கனவு

அப்பா என் உள்ளாடைகள் உங்கள் அறையில் இருக்கின்றன
எடுத்து எறியுங்கள்

பெண்ணே நீ ஒரு திரைப்படக்காட்சி

அப்பா இந்த அறையில் ஒரு நீண்ட கத்தியிருக்கிறது

பெண்ணே எனக்குத் தெரியும்
அந்த அறையில் எனது டிரம்ஸ் இருக்கிறது அதைத் தொடாதே
கெளரிக்கு அதை நாளை
குடி தெளிந்த பின் வாசித்து காண்பிப்பேன்

அப்பா
நான் சாகட்டுமா

பெண்ணே நான் சும்மாதான் இருக்கிறேன்
சாகமலும்

அப்பா நான் ஒரு கனவு

பிறகு அந்த அந்த அறையில் சப்தமேயில்லை.

புழுதியில் சில விதைகள்

பின்னூட்டமொன்றை இடுக

சிறந்த மலைகள் வளரும் பாறைகளின் மீதாக பிளவுகள் காத்திருக்கின்றன

சிறந்த காப்பியங்கள் வளரும் சொற்களுக்கு
அருகில்
ஒரு முகம் தெளிந்து வருகிறது

சிறந்த நதிகள் உருவாகும்
மழைத்துளிகள் காய்ந்து
பின் வீழ்கிறது

ஒரு பறவை முன்னும் பின்னுமாக
பறந்துகொண்டிருக்கிறது
அதே பாகையில்

o

அவனது குறைபாடுள்ள
நடை
நடனமாகத்தெரிகிறது என்கிறார்

பெரிய பூங்காவின்
தென்மூலையில் தனது குவளைகளுடன்
அமர்ந்திருப்பவனை
இவர் பொறாமை பொங்க பார்த்து
திரும்பிச் சிரிக்கிறார்

குழறலாக பேசும் அவனது
சொற்களிலிருந்து
இவர் கவிதைகளைத் திருடி எடுக்கிறார்

அத்தனை புழுதியிலும்
அத்தனை சிறிய விதையைக் கண்டறியமுடியுமென்றால்

வெயில் இன்னும்
நீளலாம் தவறில்லை.

o

ஒவ்வொருமுறை சட்டைப்பையில்
சில்லறைகளுக்காகத் துழாவும்
பொழுதும்
பசியுடன்
காத்திருந்த மாலைகள்
மீண்டும் நிகழ்கின்றன

விலகிச்செல்கிறவர்களின் புன்னகைகளில்
பொது அலைவரிசையைக்
கண்டபிறகு
பதிலுக்கு புன்னகைக்க முடிகிறது

கனவென்பது துலங்கத்தொடங்கபின்
தற்கொலைப்பொழுதுகளில்
துடித்தடங்கும் வரை காத்திருந்து
பிறகு கோழையைத் துடைத்தபடி
எழுந்தமரமுடியும்

நீங்களும்.

ஈரமண் அற்ற பிடிவேர்

பின்னூட்டமொன்றை இடுக

வெறுப்புக்குரியவர்கள்

பழைய புகைப்படங்கள்
பிறர் நினைவுகளில்
தானாகவே
அழிந்துவிடவேண்டும் என
வேண்டிக்கொள்கிறார்கள்

பகிரப்பட்ட முத்தங்களுக்கு
மழலை அன்பு
எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்கிறது

இடைவெளிகளின் பெரும்பாதைகளில்
திரும்பிப் பார்க்கும்போது

எல்லாமும் இருக்கிறது
எதுவும் இல்லை

o

தண்ணீரில் விழும்
நிலவின் புகைப்படத்தை
அழிப்பதற்கு விரல்சுழற்றிக்கொண்டிருக்கிறான்

ஒரு சிறுவன்
இரவெல்லாம்

பிடிவேரில் ஈரமண் அற்ற
செடியை எங்காவது நடுவதற்கு
தாகத்துடன் அலைந்துகொண்டிருக்கிறான்
ஒரு சிறுவன்
பகலெல்லாம்

எல்லாருக்குமான மழை
யாருக்குமற்று
கடலில் பொழிந்துகொண்டிருக்கிறது

காலமெல்லாம்
o
திடீர் அன்பின்
பிரவாகம் கொண்டு

கைவிடப்பட்ட மிருகங்களுக்கு
நீங்கள் அளிக்கும்
ஒரு வேளை உணவு

பசி நாட்களை
நீட்டிப்பதை மட்டுமே செய்கிறது
என்பதை அறிந்திருக்கிறீர்களா?

Older Entries Newer Entries

%d bloggers like this: